Tuesday, January 27, 2015

சிவசைலம் -2

      இரண்டாவது அத்யாயம்
செளனகாதி ரிஷிகள் கேட்கிறார்கள்: - ஸூத முனிவரே! தாமரை போன்ற தங்கள் திருமுகத்திலிருந்து வெளிவருகிற புனிதமான சிவகதைகளைக் கேட்டு திருப்தி ஏற்படவில்லை. ஸாம்ப பரமேச்வரனாகிய சிவசைலநாதரின் மஹாத்ம்யம் கேட்கக்கேட்க புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. சிவசைலம் என்ற பெயர் எப்படி வந்தது?. ஸர்வக்ஞராயும் முனிச்ரேஷ்டராயும் குலபதியாகவும் விருத்தராயும் தபோதனராயும் உள்ள அத்ரி முனிவரின் மஹிமை என்ன?. அவர் எவ்விதமான தவம் செய்தார்?. அவர் சிஷ்யர் எவ்விதமானவர்?. எவ்வித தவத்தால் ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கும் பரம்சிவன் ஸந்தோஷமடைந்து அவர்முன் தோன்றினார்?. சிவஞானத்தைக் கொடுக்கக்கூடிய இவை எல்லாவற்றையும் தயவு செய்து கூற வேண்டும்.
இதைக்கேட்டு ஸூத முனிவர் கூறுகிறார்:-
த்ரிகூடம் என்ற பர்வதம் பிரஸித்தமானது. ஆகாயத்தைத் தொடும்படியான விசாலமான அநேக சிருங்கங்களுடன் கூடியது. பலவித மரங்களோடும் அருவிகளோடும் யானைகளோடும் பலவித பக்ஷிகளோடும் வீணை வாசிப்பதில் தேர்ச்சியுள்ள கின்னரர், கிம்புருஷர்கள் நாட்யமாடும் அப்ஸர ஸ்த்ரீகள், வித்யாதரர் முதலான தேவகணங்கள் கையில் ஜபமாலையுடன் ஜபம் செய்து கொண்டும், “ நான் சித்ஸ்வரூபம் “ என்று த்யானம் செய்து கொண்டுமிருக்கும் யதிகள், யோகிகள், முனிவர்கள் இவர்களுடன் கூடியது. இங்கு தான் கஜேந்திரனின் காலை முதலை பிடித்த பொழுது விஷ்ண்னு சக்ரபாணியாக வந்து காப்பாற்றினார்.
புண்யசாலிகள் வாழும் இந்த பர்வதத்தில் அத்ரி மஹரிஷி அநஸூயையுடனும் சிஷ்யருடனுடன் கூடி கிருஹஸ்த தர்மங்களைச் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் அவருடைய சிஷ்யன் கோ ரக்ஷகன் கங்கா ஸ்நானம் செய்ய யாத்திரை செல்ல வேண்டுமென்று ப்ரார்த்திக்க அத்ரி முனிவர் அவனுக்கு ஞானம் ஏற்படுவதற்காக ஓர் உபாயத்தை ஆலோசித்தார். பிறகு தன் சிஷ்யனின் கோரிக்கை நிறைவேறுவதற்காகவும் அங்கு வாழும் ஜனங்களின் க்ஷேமத்திற்காகவும் தன் கையில் இருக்கும் தண்டத்தால் பூமியில் தட்டவே அங்கிருந்து தீர்த்தம் கிளம்பியது.
அதற்கு அத்ரி தீர்த்தம் என்று தன் பெயரைக் கொடுத்து கங்கையை அழைத்தார். உடனே அங்கு வந்த கங்கையை தான் நிர்மாணித்த ஜலத்துடன் சேர்த்து விட்டார். இதனால் (கடனாத்)
அந்த தீர்த்ததிற்கு ‘ கடநா ‘ என்ற பெயர் ஏற்பட்டது. தைமாதம் புஷ்ய நக்ஷத்ரத்தன்று அங்கு கங்கை வந்து சேர்ந்த படியால் அங்கு தைப்பூசத்தன்று ஸ்நானம் செய்வது சிலாக்யமாகச் சொல்கிறார்கள்.
வெகுகாலத்திற்குப்பின் கங்கையானவள் “ நான் ஸமுத்ரம் செல்ல ஆசைப்படுகிறேன். அனுமதி தர வேண்டும் “ என்று பிரார்த்தித்தாள். முனிவரும் எப்பொழுதும் ’ கடனை ’ என்ற பெயரை தாங்கிக் கொண்டு ஸமுத்ரம் செல்வாயாக! என்று அனுமதி அளித்தார். உடனே கங்கை ’ கடனா ‘ என்ற  பெயருடன் கிழக்கு திசை நோக்கிச் சென்றாள். வழியில் இரு கரைகளிலும் உள்ள பாக்கு, தென்னை, பலா, மருது, மா, நெட்டலிங்கம்,கூந்தல் பனை, பில்வம், அத்தி, எலுமிச்சை முதலான விருக்ஷங்கள் அவளுக்கு ஆபரணங்களாக அமைந்தன. இரு கரைகளிலும் பாபமற்ற முனிவர்களால் சிவாலங்களும் விஷ்ணு ஆலயங்களும் அமைக்கப்பட்டன. தாயார் குழந்தைகளைப் போல தனது தீர்த்தத்தால் எல்லாப் ப்ரஜைகளையும் ரக்ஷித்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் அந்தப் பூமியைப் பரிசுத்தம் செய்து கொண்டும் கங்கை ”கடனை” என்ற பெயருடன் கிழக்கு திசையில் ஸமுத்ரத்தை அடைந்தாள்.
” கடநா “ என்ற பெயருடன் தன் பர்த்தாவான ஸமுத்திரத்தை நோக்கிச் செல்கிற கங்கை என்ற பெண்ணுக்கு அந்த நதியில் மலர்ந்த தாமரை முகமாகவும் கருநெய்தல் மலர்கள் கண்களாகவும் சக்ரவாக பக்ஷிகள் ஸ்தநங்களாகவும்  ராஜஹம்ஸங்களின் வரிசையாகிற தோழிகளுடன் சூழப்பட்டவளாய் விளங்கினாள். ஸாரஸ பக்ஷிகளின் நாதம் ஒட்டியாண ஒலியாகவும் செந்தாமரை பாதமாகவும் இருகரைகளிலுமுள்ள மரங்கள் குண்டலங்களாகவும், சுற்றி வரும் வண்டுகள் கேசங்களாகவும் வெண்மையான நாணல் மேலாடையாகவும் விளங்கியது.
வஹ்நீச்வரர், ராமேச்வரர், ஸுந்தரேசர், இவர்களின் ஆலயங்களுக்கு தெற்கே, வாலிநாதருக்கும் ரோமச முனிவரால் பூஜிக்கப்பட்ட பிரஹ்மவிருத்தபுரம் என்னும் பிரம்மதேசத்திற்கும் அங்குள்ள கைலாஸேச்வரருக்கும் ச்வேதேச்வர லிங்கத்திற்கும் வடக்கே கிழக்கு திசை நோக்கிச் சென்று புடார்ஜுநேச்வரலிங்கத்திற்கு மேற்கே தெற்கு நோக்கி பிரவஹித்தாள். அங்கு மிக கர்வத்துடன் ஓடிவரும் கடநா நதியைப் பார்த்து புடார்ஜுநேச்வரர், அவள் அஹங்காரத்தையடக்குவதற்காக ஹுங்காரம் செய்தார். அதனால் கடனை என்ற கங்கை வெகுகாலம் அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தாள். பிறகு ’தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஈசனே! ஜகந்நாதா,அர்ஜுநேச்வரா, பார்வதிநாத, பக்தர்களின் இஷ்டங்களைத் தருபவரே உனக்கு நமஸ்காரம். என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று துதித்து வெகுகாலம் தவம் செய்தாள்.
ஸ்தோத்ரத்தாலும் தவத்தாலும் சந்தோஷமடைந்த புடார்ஜுநேச்வரர் அவள் முன் தோன்றி “ அகஸ்தியர் இங்கு வந்த பின் தாம்ரபர்ணீ என்று ப்ரஸித்தமான நதி வரப்போகிறாள். அப்பொழுது அவளுடன் சேர்ந்து நீயும் செல்லலாம். “ என்று கூறிவிட்டு ஸ்வயம்பூலிங்கத்தில் மறைந்தார். ( இதனால் தாம்ரபர்ணீ நதி வரும் வரை கடநா நதி ப்ரவாஹம் புடார்ஜுனத்திற்கு அப்பால் செல்லாமல் அங்கேயே பூமிக்குள் சென்று மறைந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.)
தர்ம தத்வமறிந்த அத்ரி மாமுனிவர் சிவனிடம் தன் மனதைச் செலுத்தி சிஷ்யருடன் முக்காலங்களிலும் சைலேச லிங்கத்தைப் பூஜித்து வந்தார். மஹாபுத்திமானான சிஷ்யன் கோரக்ஷகன் சிவத்யானத்துடன் குரு சுச்ரூஷையில் ஈடுபட்டு திவ்ய ஞானமடைந்தான். இவ்விதமிருந்து வரும் பொழுது மஹாபுத்திமானான மஹரிஷி அத்ரி முனிவருக்கு அகஸ்த்ய முனிவரை தரிசிக்க வேணும் எண்ணம் ஏற்பட்டது. உடனே சிஷ்யனுடன் மலய பர்வதம் சென்று பாபவிநாசேசர் ஸந்நிதியில் தியானத்தில் அமர்ந்திருந்த அகஸ்த்ய முனிவரை தர்சித்து மிக ஸந்தோஷமடைந்து பாபவிநாசேச்வரரை வணங்கி மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“ மங்களரூபியும் அம்பிகையுடன் கூடியவருமான பாபநாசேச்வரருக்கு நமஸ்காரம். ஞானஸ்வரூபியும் எல்லாப் பிராணிகளுக்கும் ஸாக்ஷியான உமக்கு நமஸ்காரம். மூவுலக நாதரும் மூவுலகஸ்வரூபரும் சைதன்ய ஸ்வரூபரும் விகாரமற்றவருமான உமக்கு நமஸ்காரம்.”
இவ்வாறு துதித்து பக்தியால் பரவசமடைந்தார். அத்ரி முனிவரைக் கண்டு அகஸ்த்யர் திடீரென்று எழுந்து பாத்யம், அர்க்யம், ஆஸனம், வந்தனம் முதலான உபசாரங்களால் பூஜித்தார். இரு முனிவர்களும் மிக்க ஸந்தோஷமடைந்தவர்களாக பாபவிநாசேசரின் ஸந்நிதியில் பாபத்தைப் போக்கும் ஆச்சர்யமான சிவகதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு அத்ரி முனிவர் தனது ஆச்ரமத்திற்குப்போக எண்ணம் கொண்டவராய் அகஸ்த்யரிடம் விடைபெற்றுக் கொண்டு பாபநாசேச்வரரை வணங்கி த்ரிகூடாசலம் வந்து தந்து ஆச்ரமத்தில் ஸுகமாக வஸித்து வந்தார்.

       இரண்டாவது அத்யாயம் முற்றிற்று.           

Sunday, January 25, 2015

சிவசைலம் -1

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருளால் சிவசைலம் மாஹாத்மியம் கொஞ்சம் எழுத முயற்சி. முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.
சிவசைலபதியையும் பரமகல்யாணி நாயகியையும் அழகிய ஸ்நேகபுரத்தையும் கடநா நதியையும் வணங்குகிறேன்.
அத்ரி மஹரிஷியால் பூஜை செய்யப்பட்டவ்ரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமான சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்ரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரமகல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன்.
 கற்பூரம் போல் நிர்மலமான சரீரத்துடன் கூடியவளும் எதை நினைக்கிறார்களோ அதைக் கொடுக்கிறவளும் சங்கு போல் அழகிய கழுத்துடன் கூடியவளும் பூஜ்யையாயும் இருக்கின்ற அந்த ஸரஸ்வதியானவள்  என்னுடைய வாக்கிலிருந்து கொண்டு எனக்கு அனுக்ரஹத்தைச் செய்யட்டும். என்னுடைய கைகளிலிருந்து கொண்டும் அனுக்ரஹம் செய்யட்டும்.
சிரஸில் சந்திரனை தரித்திருப்பதாலுண்டான சோபையுடன் கூடிய ஜடாமண்டலத்தையுடையவரும் க்ருசமான உதரத்துடன் வேடுவ உருக்கொண்டவளுமான பார்வதியை சகாயமாகவுடையவரும் எப்பவும்
மங்களத்தைக் கொடுக்கின்றவரும் தன்னை உபாஸனை செய்கின்றவர்களுக்கு எப்பவும் பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமாகிய சிவசைலபதியை ஸேவிக்கிறேன். இவ்விடத்தில் வசிக்கும் மஹான்கள் எவருடைய  சரணகமலங்களை பூஜித்துஇங்கே சகல பாக்யங்களையும் அனுபவித்து முடிவில் மோக்ஷபதவியை அடைகின்றார்களோ அந்த சந்த்ர சூடனாகிய சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.

அண்டின ஜனங்களின் கஷ்டங்களை விவரிக்கின்றவளே சந்த்ரனை சிரோபூஷணமாகவுடையவளே மங்களத்தைச் செய்கின்றவளே, சிவசைலபதியின் பத்னியே, நெய்தல் புஷ்பத்திற்கு சமமான காந்தியுடையவளே. மனோஞ்ஞமானவளே,உன்னுடைய கருணைப்பார்வையை என்னிடம் இடைவிடாது செலுத்தவேண்டும். வணங்கின ஜனங்களின் பாபங்களாகிற ஹம்ஸங்களுக்கு புதிய நீருண்டமேகம் போலழகிய சரீர காந்தியுடன் கூடியவளும் குயிலுக்கு சமமான ம்ருதுவசனமுடையவளுமாகிய பரமகல்யாணியை நான் தினந்தோறும் வணங்குகிறேன்.

மங்களமாயும் வ்யாஸமஹர்ஷியின் முகமாகிய தாமரையில் நின்றும் பெருகினதாயும் சிவசைலனாதருடைய மஹிமையென்ற மதுவை இருகாதுகளின் வழியாக பக்தியுடனும் ஆதரவோடும் நித்யமாக எவன் பானஞ்செய்கின்றானோ அந்த புருஷன் பிறப்பு இறப்பு வ்யாதி முதலிய கஷ்டங்களுக்கிருப்பிடமான இந்த ஸம்ஸார பந்தத்தில் நின்றும் விடுபட்டு அழிவில்லாத சிவபதத்தை அடைகின்றான்.

             || சிவசைலமாஹாத்ம்யம் ||
             || முதலாவது அத்யாயம் ||
ஸகல லோகங்களிலும் ப்ரஸித்தமான நைமிசாரண்யம் என்பது மஹா தபஸ்விகல்ளும் வெகுநாள் யாகம் செய்யும் ரிஷிகளும் வாஸம் செய்யும் புண்யமான ஸ்தல விசேஷம் ஒருஸமயத்தில் அங்கு புராணங்களை நன்றாக அறிந்த ஸூதமுனிவரைக் குறித்து சௌனகாதி மஹர்ஷிகள் மிகவும் பணிவுடன் கேட்கிறார்கள்.

ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுணர்ந்த ஸூத மஹர்ஷியெ ! முன் சிவக்ஷேத்ரங்களுடைய வைபவங்களை மிகவும் சிறப்பாக சொன்னீர்கள். அதில் சிவசைலம் என்ற சிவக்ஷேத்ரத்தைப்பற்றி சுருக்கமாகச்சொன்னீர்கள் . இப்பொழுது அதை விஸ்தாரமாகக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம்.

அத்ரிமஹர்ஷி வாஸம் செய்த புனிதமான சிவசைலத்தில் சிவன் லிங்க உருவில் ஆவிர்பவித்தாரல்லவா ! மிகவும் அழகு பெற்ற கைலாசபர்வதத்தை விட்டுவிட்டு பரமேச்வரன் இங்கு ஏன் ஆவிர்பாவம் ஆனார் ? சிவசைலம் என்ற க்யாதி எவ்விதம் ஏற்பட்டது ? த்ரிகூடசைலம் என்று தானே முனிவர்கள் சொல்லிவந்தார்கள் ! சிவசைலத்தின் கிழக்கும் பக்கத்தில் மேற்குமுகமாக பரமகல்யாணீ நாயகராக விளங்குகிறார் . மலய பர்வததிற்கு வடக்குத் திசையில் கடநா நதிக்கு தென்கரையில் ஸாக்ஷாத் பரமேச்வரர் தன்னுடைய கணங்களுடன் பக்தர்களுக்கு அருள் புரிவதாகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டது, அதையும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும் என்றும் ப்ரச்னம் செய்தார்கள்.

இவ்விதம் மஹரிஷிகளால் செய்யப்பட்டு மிகவும் ஸந்தோஷமடைந்து ரிஷிகளுடைய வார்தைகளை மனதால் ச்லாகித்துக்கொண்டு ஸூதமுனிவர் ப்ரம்ஹா , விஷ்ணு , ருத்ரர் , விநாயகர் , ஸுப்ரம்ஹண்யர் , ஸரஸ்வதீ , சிஷ்யர்களுடைய ஆனந்தமாகிற தாமரை மலருக்கு ஸூர்யன் போல் விளங்குகின்ற குரு வ்யாஸர் , இவர்களை நன்றாக வணங்கினார் கல்யாணீ நாயகரும் கலியின் மலத்தைப் போக்குகிறவரும் மன்மதன் , காலன் ,(யமன்) அந்தகன் இவர்களை அடக்கியவரும் காமம் க்ரோதம் முதலிய சத்ருகணங்களை ஜயித்த யோகிகளுடைய மனதாகிற உப்பரிகையில் வஸிப்பவரும் கல்யாணாத்ரி என்கிற மஹாமேரு பர்வதத்தை வில்லாகச் செய்தவரும் ப்ரம்ஹா முதலிய தேவர்களால் வணங்கப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவருமான ஸ்ரீசைலபதியை தத்வார்தங்கள் ஸித்திக்கும் பொருட்டு வணங்குகிறேன்.

(இங்கு ஸூதமுனிவர் புராணத்தின் யதார்த்தமான பொருள் நன்கு விளங்குவதர்காக த்யானம் செய்தார். தத்வார்த்தஸித்தியை , என்பதை “ புத்ரார்த்த ஸ்த்யை கார்யார்த்த ஸித்யை ” என்று பிரார்தனைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ளலாம்.) இவ்வாறு ஸ்ரீ பரமகல்யாணீ சமேதரான சிவசைலேசரை மிகவும் ஸ்ந்தோஷத்துடன் வணங்கிவிட்டு சிவக்ஷேத்ரங்களில் உத்தமமான ஸ்ரீ சிவசைலத்தின் மஹிமையை கூறத் தொடங்கினார்.

ஸூதமுனிவர் :---  மஹர்ஷிகளே ! உங்களால் கேட்கப்பட்ட சிவசைல மாஹாத்ம்யம் மிகவும் லோகத்திற்கு மங்களகரமானது. கல்யாணீசகதை புண்யத்தைத் தரும் எப்பொழுதும் மங்களகரமானது . ஸம்ஸாரமாகிர கடலைக் கடக்கிறவர்க்கு ஸாதகமானது ஸகலாபீஷ்டங்களையும் கொடுக்கக்கூடியது.

மேலும் 1. கல்யாணீநாயக: 2.சம்பு : 3.சிவசைலேச: இந்த நாமத்ரய மந்த்ரம் த்ரிவர்க பலனைத் தரும் . மூன்று லோகங்களை வசீகரணம் செய்யக்கூடியது. ஷெ மந்த்ரத்தை ஓங்காரபூர்வமாக உச்சரித்தால் சதுர்வர்க பலனைத்தரும் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பது நாலு வர்கம்,
1.ஓம் கல்யாணீநாயக: 2. ஓம் சம்பு : 3. ஓம் சிவசைலேச: என்பதாகத் தெரிகிறது.) 1. சம்பு: 2.பரமகல்யாணீ நாயக: 3. அத்ரிஸுபூஜித: இந்த நாமத்ரயத்தை ஜபித்தால் நிச்சயமாக முக்தி ஏற்படும். 1. சிவ: 2. பரமகல்யாணீ நாயக: 3.அந்தகமர்தன: 4.கங்காதர; 5.விரூபாக்ஷ: 6.கபர்தீ 7.சசிபூஷண: 8.பஸ்சிமத்வாரநிலய: 9.கடநாதீரபூஷண; 10.அத்ரிபூஜித பாதாப்ஜயுகள:,11,நீலலோஹித:,12.கோரக்ஷலக்ஷித:. இது த்வாதச நாமங்கள் அடங்கிய மந்திரம். இந்த 12 நாமங்களையும் தினம் மூன்று காலங்களிலும் உச்சாரணம் செய்தால் ஜீவன் முக்தனாகிறான்.
இந்த சிவசைல க்ஷேத்ரம் எல்லா சிவ க்ஷேத்ரங்களைக்
காட்டிலும் முக்யமானது. மேற்கு முகமாக வாசல் உடையது.
( எல்லா ஆலயங்களுக்கும் அநேகமாக கிழக்கு பக்கம் வாசல் இருக்கும். இங்கே மேற்கே வாசல். இதனால் இதற்கு விசேஷம் அதிகம் என்று தாத்பர்யம். )
கடநா நதிக்கரைக்கு அலங்காரமாக இருக்கக் கூடியது. அழிவற்றது. நதிகளில் கங்கை போலவும் தேவர்களுக்குள் விஷ்ணு போலவும் க்ருஹஸ்தர்களுக்குள் வஸிஷ்டர் போலவும் ஸ்த்ரீகளுக்குள் அருந்ததி போலவும் மந்திரங்களுக்குள் ப்ரணவம் ( ஓங்காரம் ) போலவும் தானங்களுக்குள் அபயதானம் போலவும் பக்ஷிகளுக்குள் கருடன் போலவும் லோஹங்களுக்குள் தங்கம் போலவும் விருக்ஷங்களுக்குள் அஸ்வத்த (அரச)விருக்ஷம் போலவும் மிருகங்களுக்குள் பசு போலவும் ஈஸ்வரர்களுக்குள் சிவன் போலவும் இந்த க்ஷேத்ரம் சிவ க்ஷேத்ரங்களுக்குள் முக்யமானது.
இந்த க்ஷேத்ரத்தில் ஒருநாள் வாஸம் செய்தால் அதிபாதகத்திலிருந்து விடுதலையடைகிறான். நிரம்ப சொல்லி என்ன ப்ரயோஜனம்?. இந்த க்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் கிடையாது. கடநா நதியில் யாதொரு மனிதன் சதுர்த்தசி, அஷ்டமி, பூர்ணிமை, அமாவாஸ்யை, ஆடிமாதப்பிறப்பு, தை மாதப்பிறப்பு, சந்திரகிரஹணம், ஸூர்யகிரஹணம், சித்திரை மாதப்பிறப்பு, ஐப்பசிமாதப்பிறப்பு, விஷ்ணுபதி என்றி சொல்லக் கூடிய வைகாசி, ஆவணி,கார்த்திகை, மாசி மாதப் பிறப்புகள், ஷடசீதி என்று சொல்லக் கூடிய ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதப் பிறப்புகள் இந்த புண்ய தினங்களில் விதிப்படி ( ஸங்கல்பம், வருணஸூக்த படனம், மார்ஜனம், அகமர்ஷணம்,தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் என்ற பஞ்சாங்க முறைப்படி ) ஸ்நானம் செய்து தில அக்ஷதைகளால் தேவரிஷிபித்ரு தர்ப்பணம் செய்து,
மேற்கு முகமாக ஸ்வயம் ஆவிர்பவித்த, அழகிய 16 ஆவடையாளுடன் கூடிய சிவசைலேச லிங்கத்தையும்,
ஸகலலோக மாதாவும் பாசம், அங்குசம், அபயம்,வரதானம், இவைகளுடன் விளங்கும் நான்கு கைகளுள்ளவளும், அகன்ற கண்களுள்ளவளும் மேற்கு திசை நோக்கியவளும் எல்லா லக்ஷணங்களும் பொருந்தி, எல்லா அங்கங்களிலும் மிக்க அழகுடன் விளங்குபவளுமான பரமகல்யாணி அம்பாளையும் தரிசித்து ஒருமுறை வணங்கியவன் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு தேவபாவத்தை அடைகிறான்.
தினமும் மூன்று தடவை பரமகல்யாணி அம்பாளை ஸேவிப்பவன் எல்லா அபீஷ்டங்களையும் பெறுகிறான். ப்ரஹ்மா விஷ்ணு முதலியவர்களால் இங்கு பூஜிக்கப்பட்ட
ஸ்ரீசாம்ப மூர்த்தியின் ஸாந்நித்யமுள்ள சிவசைலக்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் இல்லவே இல்லை. இது முக்காலும் உண்மை. அத்ரி முனிவருக்கு அநுக்ரஹம் செய்வதற்காக ஈச்வரர் இங்கு எப்பொழும் ஸாந்நித்யத்துடன் இருக்கிறார்.
1.சிவசைலேச்வரர்,2.ராமேச்வரர்,3.வஹ்நீச்வரர்,4.பாபநாசேச்வரர். இந்த நான்கு மூர்த்திகளுக்கும் மத்தியில் உள்ள பிரதேசம் பஞ்சக்ரோசம் எனப்படும். ( காசியில் கங்கைகரையில் பஞ்சக்ரோசம் உள்ளது. அங்கு செல்பவர்கள் பஞ்சக்ரோச யாத்ரை செய்கிறார்கள் ) அது போல தக்ஷிணகங்கையிலும் பஞ்சக்ரோசமுள்ளது.
இங்கு வஸிக்கும் மனிதன் பஞ்சக்ரோச மத்தியில் எங்கு மரணமடைந்தாலும் ருத்ரானுக்ரஹத்தால் சிவஸாரூப்யத்தை அடைவான். ( காச்யாம் து மரணான் முக்தி என்றபடி ). இதுவும் காசிக்கு ஸமானம் என்று அறியவும். இங்கு செய்யும் தானம், ஹோமம், ஜபம், தவம் இவை அழிவற்ற பலனைக் கொடுக்கும். பொய் பேசுபவன், துஷ்டன், நாஸ்திகன், நன்றிமறந்தவன், குருத்ரோஹி, இரக்கமில்லாதவன், பிராணிகளுக்கு த்ரோஹம் செய்பவன் இவர்கள் இங்கு ஸுகமடைய மாட்டார்கள். இங்கு வஸிப்பவர்களுக்கு பாவம் செய்வதில் புத்தி செல்லாது.
சிவசைலத்தைச் சுற்றி ஐந்து யோஜனை வரையுள்ள பூமி பரிசுத்தமானது. புண்யத்தைத் தரும். கைலாஸபர்வதத்திற்கு ஸமமானது. இங்கு வஸிக்கும் மனிதர்கள் தேவர்களாகின்றார்கள். சிவசைலத்தில் ஒருமாதம் வஸிப்பவன் சிவபதத்தையடைகிறான்.எப்பொழும் வஸிப்பவனைப் பற்றிக் கேட்பானேன்?. சிவதீக்ஷை பெற்று சைவாகம முறைப்படி சிவசைலேசரைப் பூஜிக்கிறவன் சிவசைலேசனே. அவன் பூஜிக்கத்தகுந்தவன். சிவசைல க்ஷேத்ரத்திற்கு ஜீர்ணோத்தாரணம் செய்கிறவன் எல்லா அபீஷ்டங்களையும் அடைவான். பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் படி செய்பவனிடம் அஷ்டைச்வர்களும் செழிப்பாக இருக்கும்.
முனிவர்களே! நான் உண்மையாகச் சொல்கிறேன். சிவசைலநாதரின் பெருமைகளை முழுவதும் சொல்வதற்கு ஆயிரன் நாவுகள் படைத்த ஆதிசேஷனாலும் முடியாது என்றால் என்னைபோன்றவர் எப்படிச் சொல்ல முடியும்?. இந்த சிவசைல மாஹாத்மியத்தை தினமும் படிக்கிறவனும், கேட்கிறவனும் புண்யத்தை எப்பொழும் செய்வதில் ஆசையுள்ளவனாக ஆகி எல்லாச் செல்வங்களையும் செழிப்புகளையும் அடைந்து எல்லாராலும் வணங்கத்தக்கவனாகிறான்.
   முதலாவது அத்யாயம் முற்றிற்று.            

நன்றி ; நிதீஷ்வரன். 

Wednesday, December 3, 2014

ஸ்ரீமதி ஜானகி ராமச்சந்திரன் ( வக்கீல் மாமி )



                                                             

ஸத்குருபாதம் துணை

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருள் எங்கும் நிறைந்துள்ளது.
” யத்ராஸ்தி போகோ ந ச தத்ர மோக்ஷ:
      யத்ராஸ்தி மோக்ஷோ ந ச போக: |
ஸ்ரீசுந்தரீஸாதகபுங்கவானாம் போகஸ்ச
மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ || “
போகத்தைத் தரும் மார்க்கங்கள் மோக்ஷத்தைத் தருவதில்லை. மோக்ஷத்தைத் தரும் இதர யோகாதி மார்க்கங்கள் போகத்தைத் தருவதில்லை.
ஸ்ரீவித்யா உபாஸ்தி செய்துவரும் சாதகச்ரேஷ்டர்களுக்கு
போகமும் யோகமும் கைமேலேயே இருக்கின்றன என்பதற்கு உதாரணமாகவே வாழ்ந்து எங்கும் நிறைந்திருக்கிறார்கள் ஸ்ரீமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள்.

சிறந்த சிஷ்யனைத் தேடி குரு தானே வருவார் என்பதற்கும் உதாரணமாக சிறந்த குரு மூலமாகவே ஸ்ரீ வித்யா உபாசனையை அடைந்து எப்போதும் அம்பாள் நினைவிலேயே, தன் வாழ்வை சிறந்த முறையில் நடத்தித் தானே மற்ற பெண்மணிகளுக்கு சிறந்த உதாரணமாகவும் விளங்கி வந்தார்கள்.


அவர்கள் போல நம்மாலும் ஜபம் செய்ய முடியுமா? என்ற மலைப்பை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
தனக்காக மட்டுமல்ல எல்லோருக்காகவும் நாள் முழுதும் ஜபம் செய்து கொண்டே, காரியங்களையும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஸ்ரீபாஸ்கரப்ரகாச ஆஷ்ரமத்தின் முக்கிய வெளியீடாக ” ஸ்ரீவித்யா நித்யானுஷ்டானம் “ வெளிவரச் செய்து பல உபாஸகர்களுக்கு ” ஸ்ரீசக்ர ந்யாஸம் “
முதலான பல விஷயங்கள் தெரிந்துகொள்ள முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்கள்.

எப்போதும் எல்லோருக்காகவுமே வாழ்ந்து இப்போதும் எங்கும் நிறைந்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருள் எப்போதும் நம்மை வழி நடத்தப் ப்ரார்த்தனை.
  ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் ச தீமஹி புத்திம் யான: ப்ரசோத்யாத். 

Friday, November 7, 2014

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருளால்
ஸூதக, ஆசெளசம்.
நாலாவது மாதத்தில் கர்ப்பத்தில் விச்சித்தி உண்டானால் பிதாவுக்கு ஸ்நானம், மாதாவுக்கு 4 நாள் தீட்டு.
5 வது, 6 வது மாஸங்கங்களில் விச்சித்தியுண்டானால் பிதாவுக்கும் ஸபிண்டர்களுக்கும் ஸ்நானம்,
5 வது, 6 வது மாஸங்களில் பிண்டம் போல் விழுந்தால் மேற்சொன்னவர்களுக்கு 3 நாள் தீட்டு.
மாதாவுக்கு 5 வது மாஸத்தில் 5 நாள் தீட்டு.

6 வது மாஸத்தில் 6 நாள். 

Saturday, October 25, 2014

ஒரு வேண்டுகோள்

அனைவருக்கும் நமஸ்காரம். ஒரு வேண்டுகோள்.
ஸ்ரீ காஞ்சி மடத்தின் பூர்வ ஆசார்யர்களின் அதிஷ்டானங்கள் இருக்கும் முகவரி, முடிந்தால் படம், ஆராதனை தினம் ஆகியவை போடுங்களேன்.

இதன் மூலம் அந்தந்த அதிஷ்டானங்களின் அருகில் இருப்பவர்கள்
முடிந்த போது சென்று தீபம் ஏற்றி நமஸ்காரம் செய்ய முடியும்.

ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஆசார்யர்கள்

ஸ்ரீ குருப்யோ நமஹ : ஸ்ரீ ஆசார்யர்களின் திருவடிக்கே சரணம்!
ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஆசார்யர்கள், ஆராதனை தினம், அதிஷ்டானம் இருக்கும் இடம்.

ஸ்ரீ சங்கர பகவத்பாதர் (482 – 477) – காஞ்சி.
ஸ்ரீ சுரேஷ்வராச்சார்யார் (477 – 407)  -  ஜ்யேஷ்ட மாதம், சுக்ல ஏகாதசி, பவ வருஷம், காஞ்சி
ஸ்ரீ ஸர்வக்ஞாத்மனேந்திர ஸரஸ்வதி (407 – 364) – வைசாக க்ருஷ்ண சதுர்த்தசி, நள வருஷம், காஞ்சி
ஸ்ரீ ஸத்ய போதேந்திர ஸரஸ்வதி (364 – 268) – வைசாக க்ருஷ்ண அஷ்டமி, நந்தன வருஷம், காஞ்சி
ஸ்ரீ ஞானானந்தேந்திர ஸரஸ்வதி (268 – 205)  – மார்க சீர்ஷ சுக்ல ஸப்தமி, மன்மத வருஷம்,  காஞ்சி
ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி (205 – 124)   – ஜ்யேஷ்ட சுக்ல ஷஷ்டி, நள வருஷம், காஞ்சி
ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர ஸரஸ்வதி (124 – 55)  – வைசாக க்ருஷ்ண நவமி, க்ரோதன வருஷம்,  ஸ்ரீ சைலம்
ஸ்ரீ கைவல்யானந்த யோகேந்திர ஸரஸ்வதி (55 – 28) – மகர மாதம் முதல் நாள், ஸர்வதாரி வருஷம், காஞ்சி  
ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி (28 – 69) – கார்த்திக மாதம் க்ருஷ்ண த்ருதியை, விபவ வருஷம், விந்த்யாசலம் அருகில்.
ஸ்ரீ சுரேஷ்வரேந்திர ஸரஸ்வதி (69 – 127) – ஆஷாட பூர்ணிமா, அக்ஷய வருஷம், காஞ்சி
ஸ்ரீ சிவானந்த சித்கனானேந்திர ஸரஸ்வதி (127 – 172) – ஜ்யேஷ்ட சுக்ல தசமி, விரோதிக்ருத் வருஷம், விருத்தாசலம்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 1 (172 – 235) – ஆஷாட மாதம், சுக்ல நவமி, ஆனந்த வருஷம், சேஷாசலம் அருகில் குகையில் மறைந்தார்.
ஸ்ரீ ஸத்சித்கனேந்திர ஸரஸ்வதி (235 – 272) – மார்கசீர்ஷ சுக்ல ப்ரதமை, கர வருஷம், காஞ்சி. காயாரோஹணேஸ்வரராக மாறினார்.
ஸ்ரீ வித்யா கனேந்திர ஸரஸ்வதி 1 (272 – 317) – மார்கசீர்ஷ அமாவாசை, தாது வருஷம், அகஸ்திய மலை அருகில்.
ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி 1 (317 – 329) – சைத்ர சுக்ல ப்ரதமை, ஸர்வதாரி வருஷம், அகஸ்திய மலை அருகில்.
ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி (329 – 367) – வைசாக சுக்ல அஷ்டமி, அக்ஷய வருஷம், காலாபுரி. உஜ்வல மஹாயதி புரம் என்று அழைக்கப் படுகிறது.
ஸ்ரீ ஸதாசிவேந்திர ஸரஸ்வதி (367 – 375) – ஜ்யேஷ்ட சுக்ல தசமி, பவ வருஷம், த்ரியம்பகம் ( நாசிக் அருகில் ).
ஸ்ரீ யோக திலகசுரேந்திர ஸரஸ்வதி (375 – 385) – மார்கசீர்ஷ சுக்ல ப்ரதமை, தாரண வருஷம், உஜ்ஜயின் அருகில்.
ஸ்ரீ மார்த்தாண்ட வித்யா கனேந்திர ஸரஸ்வதி (385 – 398) – பாத்ரபத க்ருஷ்ண நவமி, ஹேவிளம்பி வருஷம், கோதாவரி நதிக்கரையில் ஒரு கிராமம்.
ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி (398 – 437) – ச்ராவண பெளர்ணமி, தாது வருஷம், கோதாவரி நதிக்கரையில் ஒரு கிராமம்.
ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி 2 (437 – 447) – ச்ராவண க்ருஷ்ண அஷ்டமி, வ்யய வருஷம், காசி.
ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி (447 – 481) – கார்த்திக சுக்ல நவமி, ரெளத்ரி வருஷம், ஜகன்னாத க்ஷேத்ரம் அருகில்.
ஸ்ரீ ஸத்சித்சுகேந்திர ஸரஸ்வதி (481 – 512) – வைசாக சுக்ல ஸப்தமி, கர வருஷம், ஜகன்னாதக்ஷேத்ரம் அருகில்.
ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி 1 (512 – 527) – ச்ராவண பகுள நவமி, ப்ரபவ வருஷம், ரத்னகிரி அருகில் ( கோங்கண் பகுதியில்).
ஸ்ரீ ஸத்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி (527 – 548) – ஆஷாட சுக்ல ப்ரதமை, ப்ரபவ வருஷம், கோகர்ணத்தில் லிங்கமாக மாறினார்.
ஸ்ரீ ப்ரக்ஞான கனேந்திர ஸரஸ்வதி (548 – 565) – வைசாக சுக்ல அஷ்டமி ஸ்வபானு வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சித்விலாஸேந்திர ஸரஸ்வதி (565 – 577) – சைத்ர மாதம் முதல் தேதி, துர்முகி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 1 (577 – 601) – ஆஸ்வின க்ருஷ்ண தசமி, ரெளத்ரி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பூர்ண போதேந்திர ஸரஸ்வதி 1 (601 – 618) – ச்ராவண சுக்ல ஏகாதசி, ஈஸ்வர வருஷம், காஞ்சி.
ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி 1 (618 – 655) – வைசாக க்ருஷ்ண சதுர்த்தி, ஆனந்த வருஷம், காஞ்சி.
ஸ்ரீ ப்ரம்ஹானந்த கனேந்திர ஸரஸ்வதி 1 (655 – 668) – ஜ்யேஷ்ட சுக்ல த்வாதசி, ப்ரபவ வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி (668 – 672) – மார்கசீர்ஷ சுக்ல ஷஷ்டி, ப்ரஜோத்பத்தி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ ஸத்சிதானந்தேந்திர ஸரஸ்வதி (672 – 692) – ப்ரோஷ்டபத க்ருஷ்ண ஷஷ்டி,கர வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 3 (692 – 710) – மார்கசீர்ஷ அமாவாசை, செளம்ய வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி 2 (710 – 737) – ஆஷாட சுக்ல ஷஷ்டி, தாது வருஷம், ஸஹ்ய மலைப்பகுதி.
ஸ்ரீ சித்சுகானந்தேந்திர ஸரஸ்வதி (737 – 758) – ஆஸ்வின பெளர்ணமி, ஹேவிளம்பி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ வித்யாகனேந்திர ஸரஸ்வதி 2 (758 – 788) – புஷ்ய க்ருஷ்ண த்விதீயை, ப்ரபவ வருஷம், சிதம்பரம்.
ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி (788 – 840) – ஆஷாட அமாவாசை, ஸித்தார்த்தி வருஷம், இமய மலையில் உள்ள ஆத்ரேய மலையில் உள்ள தத்தாத்ரேய குகைக்குள் ப்ரவேசித்தார்.
ஸ்ரீ ஸத்சித்விலாஸேந்திர ஸரஸ்வதி (840 – 873) – வைசாக பெளர்ணமி, நந்தன வருஷம், காஞ்சி.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 2 (873 – 915) – வைசாக சுக்ல ஷஷ்டி, பவ வருஷம், காஞ்சி.
ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி 2 (915 – 950) – ச்ராவண சுக்ல ப்ரதமை, செளம்ய வருஷம், காஞ்சி.
ஸ்ரீ ப்ரம்ஹானந்த கனேந்திர ஸரஸ்வதி 2 (950 – 978) – ச்ராவண சுக்ல ப்ரதமை, ஈஸ்வர வருஷம், காஞ்சி.
ஸ்ரீ ஆனந்த கனேந்திர ஸரஸ்வதி (978 – 1014) – சைத்ர சுக்ல நவமி,
ப்ரமாதி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பூர்ணபோதேந்திர ஸரஸ்வதி 2 (1014 – 1040) – ப்ரோஷ்டபத, க்ருஷ்ண த்ரயோதசி, ப்ரமாதி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி 1 (1040 – 1061) – ஆஸ்வின சுக்ல ஸப்தமி, ஸர்வதாரி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ சாந்திரானந்த போதேந்திர ஸரஸ்வதி (1061 – 1098) – ஆஷாட அமாவாஸ்யை, ஈஸ்வர வருஷம், திருவண்ணாமலை.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 4 (1098 – 1166) – சைத்ர அமாவாஸ்யை, பார்த்திவ வருஷம், திருவண்ணாமலை.
ஸ்ரீ அத்வைதானந்த போதேந்திர ஸரஸ்வதி (1166 – 1200) – ஜ்யேஷ்ட சுக்ல தசமி, ஸித்தார்த்தி வருஷம், சிதம்பரம்.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 3 (1200 – 1247) – ச்ரவண க்ருஷ்ண அஷ்டமி, ப்ரபவ வருஷம், கெடிலம் நதிக்கரையில்.
ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி 1 (1247- 1297) – ஜ்யேஷ்ட சுக்ல ஷஷ்டி, துர்முகி வருஷம், கெடிலம் நதிக்கரையில்.
ஸ்ரீ வித்யாதீர்த்தேந்திர ஸரஸ்வதி (1297 – 1385) – மாக சுக்ல ப்ரதமை, ரக்தாக்ஷி வருஷம், ஹிமயமலையில்.
ஸ்ரீ சங்கரானந்தேந்திர ஸரஸ்வதி (1385 – 1417) – வைசாக சுக்ல ப்ரதமை, துர்முகி வருஷம், காஞ்சி.
ஸ்ரீ பூர்ணானந்த ஸதாசிவேந்திர ஸரஸ்வதி (1417 – 1498) – ஜ்யேஷ்ட சுக்ல தசமி, பிங்கள வருஷம், காஞ்சி.
ஸ்ரீ வ்யாஸாசல மஹாதேவேந்திர ஸரஸ்வதி (1498 – 1507) – ஆஷாட க்ருஷ்ண ப்ரதமை, அக்ஷய வருஷம், வ்யாஸாசலம்.
ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி 2 (1507 – 1524) – மீன  சுக்ல ஏகாதசி, ஸ்வபானு வருஷம், திருவொற்றியூர்.
ஸ்ரீ ஸர்வக்ஞ ஸதாசிவ போதேந்திர ஸரஸ்வதி (1524 – 1539) – சைத்ர சுக்ல அஷ்டமி, விளம்பி வருஷம், இராமேஸ்வரம்.
ஸ்ரீ பரம சிவேந்திர ஸரஸ்வதி 2 (1539 – 1586) – ச்ரவண சுக்ல தசமி, பார்த்திவ வருஷம், திருவெண்காடு.
ஸ்ரீ ஆத்ம போதேந்திர ஸரஸ்வதி (1586 – 1638) – துலா க்ருஷ்ண அஷ்டமி, ஈஸ்வர வருஷம், தென்பெண்ணைக் கரையில்.
ஸ்ரீ பகவந்நாம போதேந்திர ஸரஸ்வதி (1638 – 1692) – ப்ரோஷ்ட பத பெளர்ணமி, ப்ரஜோத்பத்தி வருஷம், கோவிந்தபுரம்.
ஸ்ரீ அத்வைதாத்ம ப்ரகாசேந்திர ஸரஸ்வதி (1692 – 1704) – சைத்ர க்ருஷ்ண த்விதியை, ஸ்வபானு, அம்பி ( காஞ்சி அருகில்).
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 4 (1704 – 1746) – ஜ்யேஷ்ட சுக்ல நவமி, க்ரோதன வருஷம், திருவொற்றியூர்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 5 (1746 – 1783) – புஷ்ய சுக்ல ப்ரதமை, சுபக்ருத் வருஷம், கும்பகோணம்.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 5 (1783 – 1813) – ஆஷாட சுக்ல த்வாதசி, ஸ்ரீமுக வருஷம், கும்பகோணம்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 6 (1813 – 1851) – கார்த்திக சுக்ல ப்ரதமை, சாதாரண வருஷம், கும்பகோணம்.
ஸ்ரீ சுதர்சன மஹாதேவேந்திர ஸரஸ்வதி (1851 – 1891) – பால்குண அமாவாஸ்யை, விரோதி வருஷம், இளையாத்தங்குடி.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 7 (1891 – 1907) – மாக க்ருஷ்ண அஷ்டமி, ப்ரபவ வருஷம், கலவை.
ஸ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி 5 (1907) – பால்குண சுக்ல ப்ரதமை, ப்ரபவ வருஷம், கலவை.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி 8 (1907 – 1994) – தனுர் க்ருஷ்ண த்வாதசி, பவ வருஷம், காஞ்சி.             
ஸ்ரீஜெயேந்திரசரஸ்வதி(1994  - 2018) - மீன சுக்ல த்ரயோதசி,காஞ்சி.

Saturday, October 18, 2014

श्री गुरुभ्यो नम: