Tuesday, January 27, 2015

சிவசைலம் - 6

ஆறாவது அத்யாயம்.
சௌநகாதி முனிவர்கள் ஸூதரைப் பார்த்துக் கூறுகிறார்கள்:-- முனிச்ரேஷ்டரே அநாதி சிவசைலேசர் என்று சம்புவால் சொல்லப்பட்டதாக உங்கள்முகமாகக் கேள்விப்பட்டோம். அது எப்படி? அது எப்படி அநாதியாயுள்ளது? இப்பொழுது தத்வத்தை சொல்ல வேணும். மேலும் எந்த யுகத்தில் ஹரன் யாருக்கு ப்ரியத்தைச் செய்வதர்காகத் தானாகவே எப்படி ஸ்வயம்புலிங்கமாகத் தோன்றினார்? யாரால் பூஜிக்கப்பட்டார்? எல்லாவற்றையும் சொல்ல வேணும்.
 இவ்வாறு கேட்கப்பட்ட ஸூதமுனிவர், சௌனகாதி ரிஷிகளை ஸந்தோஷப்படுத்திக்கொண்டு முன்காலத்தில் நடந்த சிவமாஹாத்ம்யத்தை சொன்னார். உலகில் சிவபக்தர்களான நீங்கள் விஷேசமாக பாக்யசாலிகள். ஏனெனில் புதிதுபுதிதான சிவகதைகளை அடிக்கடி கேட்கிறீர்கள். கல்பத்தின் ஆரம்பத்தில் பகவான் ப்ரம்ஹா உலகை ஸ்ருஷ்டிக்க முயற்சித்தும் சக்தியில்லாதவராக மோஹமடைந்தார். ப்ரம்ஹாவுக்கு கவலை ஏற்பட்டது. உலகைப் படைக்கும் காரியத்தில் ஏவப்பட்டிருக்கிறேன். நான் என்ன செய்வென்? இப்பொழுது ஸ்ருஷ்டியில் என் புத்தி செல்லவில்லையே ! அந்த புத்தி மழுங்கிவிட்டதே? என்ன காரணம்? இவ்வாறு அவர் ஆலோசிக்கும் பொழுது அசரீரி வாக் உண்டாயிற்று.
  “ஏ! ப்ரம்ஹாவே கவலைப்படவேண்டாம். தெற்கு ஸமுத்ரத்தின் கரையில் மலயபர்வதத்தின் வடக்குக் கரையில் “சிவசைலம்” என்ற ஒரு பர்வதம் இருக்கிறது. அதற்கு கிழக்கு பாகத்தில் இருந்து கொண்டு தவம் செய்யும். அது மிகவும் புன்ண்யமான் ப்ரதேசம் . மனதிற்கு சுத்தியை {சாந்தியை}க் கொடுக்கக்கூடியது. அங்கு லிங்க வடிவமாக ஆவிர்பாவம்செய்து ஸ்ருஷ்டி செய்வதற்குரிய உபாயத்தைச் சொல்கிறேன்”.
  ப்ரம்ஹா அதைக்கேட்டு மிகவும் ஆச்சர்யத்தை அடைந்தார்.! தேவச்ரேஷ்டரான ப்ரஹ்மா அங்கு சென்று கடுமையான தபஸ்ஸைச் செய்தார். மிகவும் கருணாநிதியான பரமேச்வரரும் லிங்கரூபியாக ஆவிர்பவித்தார். ப்ரஹ்மா தன்முன் ஸ்வயமாக ஆவிர்பாவம் அடைந்த லிங்க பரமேச்வரரைப் பார்த்து மயிர்க் கூச்ச அடைந்த சரீரத்துடன் ஸ்தோத்ரம் செய்ய ஆரம்பித்தார்.
ப்ரஹ்மா கூறுகிறார் :- தாங்கள் எப்பொழுதும் மங்களத்தைச் செய்பவர். ( ஸர்வமங்களா என்று சொல்லக் கூடிய ) அம்பாளுடன் கூடியவர். மிகவும் ச்ரேஷ்டமானவர். பரமாத்ம ஸ்வரூபர் தாங்கள் தான்.
தன் ஆத்மாவில் அளவற்ற குணங்கள் மறைவாக இருந்து கொண்டே மிகவும் பிரகாசமான மஹிமையுடவர். ஸர்வக்ஞராக ப்ரஹ்மஸ்வரூபியாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். தாங்கள் எப்பொழுதும் கலப்பற்ற ஸத்வகுணம் பொருந்தியவர். உலகங்களுக்கெல்லாம் மேலானவர். (ஜங்கமஸ்தாவரமான ஸகல உலகங்களையும் வியாபித்தவர்.)                 
அணுவிலும் அணுவானவர். பெரிதுக்கும் பெரிதானவர். தங்களுக்கு நமஸ்காரம்.
இவ்வாறு பரமேச்வரனை ஸ்தோத்ரம் செய்தார். ப்ரஹ்மா ஸ்ருஷ்டி ஸாமர்த்யத்தை அடைந்து முன் போல் ஜகத்தை ஸ்ருஷ்டி செய்து மிகவும் ஸந்தோஷமடைந்தார். (இங்கு ப்ரஹ்மா பரமேச்வரனை வணங்காமல் ஒரு கார்யத்தை ஆரம்பித்ததனால் இந்தமாதிரி ஏற்பட்டதென்று தெரியவருகிறது. எந்த கார்யம் ஆரம்பித்தாலும் ஈச்வரனை ப்ரார்த்தித்துவிட்டுத் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.)
அம்பிகை – பரமேச்வரர் இருவருக்கும் ப்ரஹ்மாவானவர் ஆலயம் நிர்மாணம் செய்தார். 16 உபசாரங்களால் பூஜை செய்தார். வஸந்த ருதுவின் ஆரம்பத்தில் சிவசைலத்தில் த்வஜாரோஹணத்துடன் மஹோத்ஸவம் ப்ரஹ்மாவினால் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று உலகங்களிலிருக்கும் ஜனங்களால் உத்ஸவம் மிகவும் கொண்டாடப்பட்டது. உத்ஸவ முடிவில் அவப்ருத ஸ்நானம் செய்து மிகவும் பக்தியுடன் பூஜித்துத் தண்டம் போல் விழுந்து பரமேச்வரனை நமஸ்காரம் செய்து ப்ரஹ்மா சொன்னதாவது:-
“ கல்பத்தின் ஆரம்பத்தில் சிவசைலம் என்ற பிரதேசத்தில் எனக்குப் பரமேச்வரனான நீர் ஸ்வயம்பூ லிங்க ரூபமாக ஆவிர்பவித்து ஸ்ருஷ்டி செய்யும் உபாயத்தைச் சொன்னீர். அதனால்
“ அநாதி சிவசைலேசர் “ என்ற ப்ரஸித்தியுடன் நீர் விளங்க வேணும். உம் ஆக்ஞைகளை நிறைவேற்றுவதற்காக என் இருப்பிடமான ப்ரஹ்ம லோகம் போகிறேன் “ என்று விடை பெற்றுக் கொண்டு ப்ரஹ்மா மிகவும் க்ருதார்த்தராகத் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். அநாதி சிவசைலேசர் இவ்விதமான மஹிமையுள்ளவர். ஆதி காலத்திலேயே இது ஏற்பட்டிருப்பதால் “ஆதி சைலேசர்” என்ற பிரஸித்தியும் ஏற்பட்டது. முனிவர்களே, தாங்கள் எதெதைக் கேட்டீர்களோ அவைகளையெல்லாம் சொல்லி விட்டேன்.

     ஆறாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 5

 ஐந்தாவது அத்யாயம்.
சிவன் கூறுகிறார் :-- மூன்று ஸ்தலங்களைப் பற்றிக் கூறுகிறேன் ஸாவதானமாகக் கேளும் முதலாவது க்ஷேத்ரங்களுக்குள் மிகச் சிறந்ததான சிவசைலம். இரண்டாவது க்ஷேத்ரத்தின் மஹிமையை கேளும்.
   முன் ஒரு காலத்தில் இந்த்ரன் பிள்ளையான வாலி ஸூர்யன் குமாரனான ஸுக்ரீவனால் {யுத்தத்தில்} தோற்கடிக்கப்பட்டு எதிரியின் பாதி பலத்தை அடையவேணும் என்ற ஆசையால் தவம் செய்தான். மனதை அடக்கி ஸ்வயம்புலிங்கத்தில் என்னை பூஜை செய்தான். கடுமையாக தவம் செய்வதைப் பார்த்து நான் ஸந்தோஷத்துடன், அவன் முகத்தைப் பார்க்கும் எதிரிகளின் பாதி பலம் இவனை அடையும்படி வேறு யாருக்கும் கிடைக்காத வரத்தைக் கொடுத்து வாலியால் பூஜிக்கப்பட்ட புராதனமான லிங்கத்தில் ‘வாலிநாதர்’ என்ற பெயருடன் வஸிக்கிறேன். இதை மோக்ஷத்தைக் கொடுக்கும் இரண்டாவது க்ஷேத்ரமாக அறிந்து கொள்ளும். {இந்த க்ஷேத்ரம் இப்பொழுது “திருவாலீச்வரம்” என்ற பெயருடன் விளங்குகிறது}, இனி க்ஷேத்ரங்களுக்குள் சிறந்த மூன்றாவது க்ஷேத்ரத்தைப் பற்றிக் கூறுகிறேன்.
  முன் ஒரு ஸமயம் க்ருதயுகத்தில் ப்ரம்ஹாவால் பூஜிக்கப்படதும் பிறகு ஒவ்வொரு யுகத்தின் ஆரம்பத்திலும் அனேகம் ப்ரம்ஹாக்களால் பூஜிக்கப்பட்டதுமான க்ஷேத்ரத்தை “ப்ரம்ஹவ்ருத்தபுரம்” என்றும் ப்ரம்ஹதேசம்  என்றும் வித்வான்கள் சொல்கிறார்கள். இங்கு ப்ரம்ஹபுத்ரரான ரோமசமஹர்ஷியால் பூஜிக்கப்பட்டு மிகச் சிறப்பான நித்யத்வத்தை {சாவற்ற தன்மையை} அவருக்குக் கொடுத்து தேவர்கள், சித்தர்கள், வேதம் அறிந்தவர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்டதும் , மனதைக் கவருவதும் அழகிய மலர்ச் செடிகளுடன் கூடியதும் கைலாஸபர்வதத்தைக் காட்டிலும் நன்மையைத் தருவதுமான இந்த க்ஷேத்ரத்தில் வாஸம் செய்வதால் சாஸ்த்ரஸித்தாந்தத்தின் ரஹஸ்யமறிந்த முனிவர்கள் இங்கு என்னை “கைலாஸநாதர்” என்று புகழுகிறார்கள் கைலாஸ பர்வதத்திற்கொப்பான இந்த க்ஷேத்ரத்தை மூன்றாவதாக தெரிந்துகொள். இங்கு மூன்று நாட்கள் வஸிப்பவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களும் கிடைக்கும். தேவர்களால் புகழப்பட்ட இது தேவபூமிக்கு ஸமமானது.
மஹரிஷியே, மற்றொரு ஆச்சரியத்தக் கேள். ப்ரஹ்மா ஓர் ப்ரதிக்ஞை செய்துள்ளார்.
” கங்கா நதி “ ‘கடநா’ என்ற பெயருடன் ப்ரஹ்மவிருத்தபுர ( ப்ரஹ்ம தேச ) த்தின் அருகில் வெகுகாலம் கழித்து விளங்கட்டும். என்னால் சிவன் பூஜிக்கத்தக்கவரானால் அங்கு ஸ்நானம் செய்து தன் சக்திக்கு தக்கவாறு செய்யும் தானம்., ஜபம், ஹோமம் இவை அல்பமாயிருந்தாலும் அதிகம் ஆகட்டும். அந்நதியில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நானம் செய்து கைலாஸநாதரை ஸேவிப்பவருக்கு எல்லா பாபங்களும் நாசமடையட்டும். கைலாஸநாதர் என்னிடம் ப்ரஸன்னராக இருப்பாரேயானால் அங்கு வஸிப்பவர்களுக்கு யமபாதை ஏற்படக்கூடாது. ஐச்வர்யம் தொடர்ந்து வ்ருத்தியடையட்டும்.இவ்வாறு ப்ரம்ஹா ப்ரதிக்ஞை செய்துவிட்டு ஸ்வஸ்தானம் சென்றார். ஆகையால் இந்த க்ஷேத்ரம் மிகச்சிறந்தது.
  ப்ரம்ஹரிஷியே, நீர் செய்த ஸ்தோத்ரத்தால் நான் ஸந்தோஷமடைந்தேன்.  இந்த க்ஷேத்ரத்தில் புண்ய காலங்களில் தீர்த்தச்ராத்தம் செய்து க்ஷேத்ரபிண்டம் கொடுத்தால் அவனுடைய இரண்டு வர்கத்திலுள்ள பித்ருக்கள் த்ருப்தியடைகிறார்கள். ப்ரதி தினமும் மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்களுக்கு நான்கு புருஷார்த்தங்களையும் நான் கொடுப்பேன். இதில் ஸ்ந்தேஹமில்லை. பஞ்சக்ரோச மத்தியில் செய்யும் ஜபம், தானம், ஹோமம், இவை என் அனுக்ரஹத்தால் அக்ஷயமாக இருக்கும். இந்த ரூபத்துடனேயே லிங்கமத்தியில் எப்பொழுதும் மனிதர்களுக்குக் காக்ஷியளிக்கிறேன். கலியுகம் வந்தபிறகு மறைந்து வஸிப்பேன். அப்படியே நீயும் எல்லோர் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்திருந்து ப்ரதிதினமும் முக்காலத்திலும் என்னை பூஜை செய்யும். இவ்வாறு சிவசைலபதி ப்ராம்ஹணரிடம் சொல்லிவிட்டு அழகிய சிவசைலத்தில் வலது பக்கத்தில் கல்யாணியுடனும் அந்தந்த ஸ்தானங்களில் நந்திகேச்வரர், விநாயகர், குஹர், மாத்ருகணங்கள், சண்டேச்வரர், ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன் முதலான தேவர்கள், அப்ஸரஸ், கந்தர்வர்கள், திக்பாலர்கள், ப்ருகு முதலான முனிவர்கள், நாரதாதி ரிஷிகள் இவர்கள் எல்லோருடனும் கூடியவராக நித்யவாஸம் செய்தார்.
முனிவரும் தன் தபோபலத்தால் விச்வகர்மாவைக் கூப்பிட்டு எல்லோருக்கும் ஆலயம் நிர்மாணம் செய்யும்படிச் சொன்னார். விச்வகர்மாவும், சிவனுகும் தேவிக்கும் தேவர்களுக்கும் ஆலயம் கட்டினான். முனிவர் ஐந்து காலங்களிலும் சிவசைலபதியை பூஜித்துக்கொண்டு தன் அபீஷ்டங்களைப் பெற்றுக் க்ருதக்ருத்யரானார்.

      ஐந்தாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம்- 4

நான்காவது அத்யாயம்
அத்ரி முனிவர்: - கங்கையை சிரஸ்ஸில் தரித்தவரும் விஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவரும் ஸ்கந்தரின் மனதிற்கு ஆனந்தம் தருபவரும்  போற்றத்தக்கவரும், தேவமுனி
ஸமூஹத்தால் ஸேவிக்கப்பட்டவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிக்கும் சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
( சிவசைலத்திற்கு ஸ்ரீசைலம் என்ற பெயர் உண்டு. இதன் விபரம் அத்யாயம் 7, ஸ்லோகம் 27ல் காணலாம். இந்த ஸ்தோத்ரத்தில் ஒவ்வொரு ஸ்லோகமும் நம: சிவாய என்ற பஞ்சாக்ஷரத்தில் முடிவடைவதால் இது வேதத்திற்கு ஒப்பானது. இந்த சிவசைல நாதாஷ்டகத்தில் விராஸத்தைக் காணலாம். )
இந்திரனால் பூஜிக்கப்பட்ட பாதங்களுள்ளவரும், விருஷபத்தில் அமர்ந்திருப்பவரு, மழை முதலான தன்மைகளைச் செய்பவரும், தர்மஸ்வரூபரும், வளர்ச்சி (பிறப்பு,இருப்பு,வளர்ச்சி,மாறுதல்,குறைவு,நாசம் என்னும் ஆறு விகாரங்களற்று எப்பொழுதும் ஏகரூபமாயிருப்பவர்.)
முதலான தோஷங்களற்றவரும் சித்ஸ்வரூபியாக விளங்குபவரும் ஸ்ரீசைலபதியுமான சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
கைலாஸ மலையில் லீலா ரூபமான காரியங்களைச் செய்வதில் பிரியமுள்ளவரும், மலையரசனின் குமாரியான பார்வதியுடன் கூடியவரும், வராஹ உருவமெடுத்த விஷ்ணுவால் நேரில் பார்க்கமுடியாமல் ஊகித்து அறியப்பட்டவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிக்கும் மங்களரூபியான உமக்கு நமஸ்காரம்.

எல்லாருக்கும் ஈச்வரனும், எல்லா ஆகமங்களாலும் போற்றப்பட்டவரும், பிரளய காலத்தில் எல்லோரையும் அழிப்பவரும், எல்லா பிராணிகளும் செய்யும் கர்மாக்களுக்கு
பலனையளிப்பவரும், எல்லா உருவமாக இருப்பவரும்,
எல்லாருடைய துன்பத்தையும் போக்குபவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிப்பவருமான மங்களரூபியான உமக்கு நமஸ்காரம்.
பக்தர்களிடம் ப்ரீதி கொண்டவரும் பக்தர்களின் பயத்தைப் போக்குபவரும் பர்கரும் மனதில் த்யானம் செய்பவர்களுக்கு ஸுகத்தைத் தருபவரும் ஒளியுள்ள கிரீடம் கடகம் இவைகளையணிந்தவரும் பிறவியைப் போக்குபவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவருமான மங்கள ரூபியான உமக்கு நமஸ்காரம்.
துக்கத்தை போக்குபவரும் (துஷ்டர்களை கதறச் செய்பவரும்) உருவமற்றவரும் ரமாபதியான விஷ்ணுவின் பிரீதிக்கு இருப்பிடமானவரும் ராமரால் பூஜிக்கப்பட்டவரும், ராகம் முதலிய தோஷங்களற்றவரும் மேலானவற்றிற்கும் மேலானவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவருமான சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
காமனைகளை நிறைவேற்றும் ஈசனும் கலியின் தோஷங்களை போக்குபவரும் காலஸ்வரூபியும் காலத்தால் மாறுதலடையாதவரும் மேருமலையை வில்லாக கொண்டவரும் ஸ்ரீசைலமலையின் அடியில் வஸிப்பவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
உமையுடன் கூடியவரும் சந்திரன், ஸூரியன்,அக்னி இவர்களை கண்களாகக் கொண்டவரும் பிராமண சிரேஷ்டர்களால் ஸோம யாகத்தால் பூஜிக்கப்பட்டவரும் ஸோமனுக்கு ஈசுவரரும் தேவர்களால் வணங்கத்தக்க திருப்பாதங்கள் உள்ளவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவரும் சிவனுமாகிய உமக்கு நமஸ்காரம்.
ஹே தேவ மஹாதேவ, எப்பொழுதும் இருப்பவரே, மங்களத்தருகின்றவரே, எல்லா தேவர்களுக்கும் தலைவரே, எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவரே,அழிவற்றவரே, உருவமற்றவரே, உலகங்களை தாங்குகிறவரே, குறைவில்லாதவரே, உலகத்தாரால் வணங்கத்தக்க ஈசனே, சிரேஷ்டமான ஸர்ப்பங்களை ஆபரணமாகக் கொண்டவரே, கெளரீபதியே, சம்போ, அர்த்தசந்திரனை சிரஸில் அணிந்தவரே, கோடி ஸூரிய ப்ரகாசமுள்ளவரே, அழிவற்றவரே, தோஷமற்றவரே, தலைவரே, கருணைக்கடலே, பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவரே, தாண்டமுடியாத ஸம்ஸாரக் கடலிலிருந்து கரை ஏற்றுபவரே, பிரபோ, தாங்கள் மேன்மையுடன் விளங்க வேண்டும்.
தேவர்களின் ஈசனே, ஸம்ஸாரத்தால் பீடிக்கப்பட்டு வருந்துகிற எனக்கு அருள் புரிய வேணும். பரமேச்வரா! எப்பொழுதும் இங்கு ஸாந்நித்யம் கொண்டு என்னைக் காப்பாற்ற வேணும்.

இவ்வாறு துதிக்கப்பட்ட சந்திரனை சிரஸ்ஸில் அணிந்த, க்ஷேமத்தைச் செய்கிற மஹாதேவர்,
ஹே த்விஜர்களே, அம்முனிவரை ஸந்தோஷப்படுத்திக் கொண்டு கம்பீரமான வாக்கால் சொன்னார்.
பிரம்ம ரிஷியே! உன்னிடம் ஸந்தோஷமடைந்துள்ளேன். உண்மையான யோகிகளல்லாதவர்கள் என்னை ஸந்தோஷப்படுத்த முடியாது. வரம் கேள், உனக்கு நன்மை உண்டாகட்டும். உன் மனதில் விரும்பியதைக் கேள். எல்லாவற்றையும் தருகிறேன்.

ஸூதர் கூறுகிறார் :- இவ்வாறு பரமேஷ்டியான சம்புவால் கூறப்பட்ட த்விஜ சிரேஷ்டரான அத்ரி முனிவர் ஸர்வபூதங்களுக்கும் ஈசுவரனான சிவனை வணங்கி அஞ்ஜலி பந்தம் செய்து கொண்டு சொன்னார்.

பகவானே, ஸர்வபூதேசனே, பக்தர்களின் அபீஷ்டங்களைக் கொடுப்பவனே, சம்போ இப்பொழுது நான் உங்களை தரிசித்த ரூபத்துடன் இங்கே எப்பொழுதும் தாங்கள் ஸாந்நித்யம் செய்ய வேண்டும். இங்கு வஸிக்கும் ஜனங்களுக்கு போகத்தையும் மோக்ஷத்தையும் அருள வேண்டும். இங்கே செய்யும் ஜபம், ஹோமம், தானம் இவை குறைவற்றதாக இருக்க வேணும்.
தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே, த்ரிகூடம் என்ற மலை இன்றுமுதல் உலகில் சிவசைலம் என்று ப்ரஸித்தியடையட்டும் எனக்கும் என் சிஷ்யனுக்கும் எப்பொழுதும் உம்மிடம் வேறு விஷயத்தில் மனம் செல்லாத பக்தி இருக்கட்டும். இது தான் என்னுடைய உயர்ந்த வரம்.
பிராமண சிரேஷ்டர்களே, இவ்வாறு முனிவரால் வேண்டப்பட்ட மகாசம்பு புத்திமானாக பிரம்ம குமாரரான அந்த அத்ரிமுனிவருக்கு கேட்டது எல்லாவற்றையும் கொடுத்தார். ஸந்தோஷத்தால் தழதழத்த குரலில் முனிவரைப் பார்த்துச் சொன்னார்.
பிரஹ்மரிஷியே, உம்மால் செய்யப்பட்ட இந்த ஸ்துதியால் உம்மிடம் ஸந்தோஷம் கொண்டிருக்கிறேன். மிகவும் ரஹஸ்யமான ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். கேளும்.
கடனை என்ற பெயருள்ள கங்கையினுடைய அழகியதும் சிறப்புவாந்ததுமான தென்கரையில் மூன்று இடங்களில் எப்பொழுதும் லிங்கத்தில் சிறப்பாக வஸிக்கிறேன்.

     நான்காவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 3

மூன்றாவது அத்யாயம்
இவ்வாறு தனது ஆச்ரமத்தில் வஸித்துவரும் பரிசுத்தமனமுள்ள அத்ரி மஹரிஷிக்கு மனதில் ஸந்தோஷமின்மையும் வெறுப்பும் ஏற்பட்டது. என்ன ஆச்சர்யம்?. எனது துஷ்டத்தனத்தைப் பார்! எப்பொழுதும் ஸந்தோஷத்துடன் இந்த ஆச்ரமத்தில் வஸித்துவரும் எனக்கு ஸ்வயம்பு லிங்கத்தில் விளங்கும் சிவனுடைய தர்சனமில்லாமலேயே அநேக வருஷங்கள் வீணாகக் கழிந்துவிட்டனவே. க்ஷேமத்தைக் கொடுக்கும் சிவன் எங்குமிருந்த
போதிலும்விஷயங்களில் மனம் ஈடுபட்டவர்களுக்கு அநுக்ரஹம் செய்வதற்காக க்ருபையால் ஸ்வயம்பு லிங்கத்தில் ஸாந்நித்யம் செய்துள்ளார். பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தபோதிலும் அதன் மடுவில் தான் நம்மால் காணப்படுகிறது. இதுபோல் எங்குமுள்ள சிவன் ஸ்வயம்பு லிங்கத்தில் ஸாந்நித்யம் செய்கிறார். அகஸ்தியர் மிகுந்த பாக்யசாலி. அவர் மூன்று காலங்களிலும் பாபநாசேச லிங்கத்தில் விளங்கும் மங்களரூபியான சாம்பனை ஸேவிக்கிறார்.
இவ்விதம் முனிவர் எண்ணி ஈசனை தியானம் செய்யும் பொழுது ” மஹரிஷியே! அநாதி சிவசைலேசர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக முன்னாலேயே நான் இங்கே வாஸம் செய்து வருகிறேன். என்னைப்பார்! “ என்று ஆகாசவாணி கேட்டது. இது என்ன?. இந்த வார்த்தை யாரால் சொல்லப்பட்டது?. என்று மனதில் ஆவலுடன் யோஜித்து “ ஸர்வேசுவரனுடைய வார்த்தை தான் “ என்று தீர்மானித்து ஆகாசவாணி கேட்ட திசைக்கு நமஸ்காரம் செய்து ஆனந்தமடைந்தார்.
இந்த ஸமயத்தில் அத்ரி சிஷ்யனான கோரக்ஷகன் ஸமித்,புஷ்பம், தர்ப்பம்,பழம் இவைகளைக் கொண்டுவர ஆசையுடன் ஆச்ரமத்திற்கு முன்னால் கடநா நதியின் தென்கரையில் மாமுதலான பழம் புஷ்பம் தரும் மரங்களும் கொடிகளும் நாணல் தர்ப்பைகளும் நிறைந்த மார்க்கமாகப் போகும்பொழுது மரங்கள் அடர்ந்த இடத்தில் மறைந்திருக்கும் அழகான அமைப்புடன் விளங்கும் அநாதி சிவசைலேச லிங்கத்தைக் கண்டு ஸந்தோஷமடைந்து ஆச்ரமம் வந்து குருவான அத்ரி முனிவரிடம் தெரிவித்தான்.
சிஷ்யனின் வார்த்தையைக்கேட்ட அத்ரி முனிவர் மிகுந்த வேகத்துடன் அங்கு சென்று மஹாலிங்கத்தைப் பார்த்து  மிகுந்த ஸந்தோஷமடைந்து ப்ரீதி என்னும் அமிருதக் கடலில் மூழ்கி சுயநினைவின்றி பரவசமாகி விட்டார். வெகுநேரத்திற்குப் பிறகு நினைவு வந்து லிங்கத்தைப் பார்த்தார். அப்பொழுது லிங்கமத்தியிலிருந்து சம்புவானவர் மான்,உளி,வரம்,அபயம் இவற்றுடன் விளங்கும் நான்கு கைகளுடனும் அருகில் பார்வதி யுடனும் வ்ருஷபத்தின் மீது அமர்ந்தவராகத் தோன்றினார்.
ஸம்ஸார நோயை அகற்றும் மருந்து போன்றவரும், கோடி சந்திரர்களுக்கு ஒப்பான ஒளியுள்ளவரும் மூன்று கண்களுள்ளவரும், சந்திரனை சிரஸில் தரித்தவரும், பிங்கள வர்ணமான ஜடாபாரமுள்ளவரும் சிரஸில் ரத்னகிரீடம் அணிந்தவரும் (விஷத்தால்) கருப்பான கழுத்துள்ளவரும் புலித்தோலையணிந்தவரும், அழகைய சரீரமுள்ளவரும், அம்பிகையுடன் கூடியவரும், தேவர்களுக்கு ஈசனுமான சிவனை தர்சித்து சிறந்த தர்மத்தையறிந்த அத்ரி முனிவர் அதிக ஸந்தோஷத்தால் இந்திரியங்கள் கலக்கமடைய தண்டம் போல் பூமியில் விழுந்து வணங்கி திரும்பித் திரும்பி தர்சித்தார். திரும்பத் திரும்ப வணங்கினார். பிறகு சரீரம் புல்லரிக்க மிகுந்த பக்தியுடன் பரமேசனை துதிக்க ஆரம்பித்தார்.
     மூன்றாவது அத்யாயம் முற்றும். 

சிவசைலம் -2

      இரண்டாவது அத்யாயம்
செளனகாதி ரிஷிகள் கேட்கிறார்கள்: - ஸூத முனிவரே! தாமரை போன்ற தங்கள் திருமுகத்திலிருந்து வெளிவருகிற புனிதமான சிவகதைகளைக் கேட்டு திருப்தி ஏற்படவில்லை. ஸாம்ப பரமேச்வரனாகிய சிவசைலநாதரின் மஹாத்ம்யம் கேட்கக்கேட்க புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. சிவசைலம் என்ற பெயர் எப்படி வந்தது?. ஸர்வக்ஞராயும் முனிச்ரேஷ்டராயும் குலபதியாகவும் விருத்தராயும் தபோதனராயும் உள்ள அத்ரி முனிவரின் மஹிமை என்ன?. அவர் எவ்விதமான தவம் செய்தார்?. அவர் சிஷ்யர் எவ்விதமானவர்?. எவ்வித தவத்தால் ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கும் பரம்சிவன் ஸந்தோஷமடைந்து அவர்முன் தோன்றினார்?. சிவஞானத்தைக் கொடுக்கக்கூடிய இவை எல்லாவற்றையும் தயவு செய்து கூற வேண்டும்.
இதைக்கேட்டு ஸூத முனிவர் கூறுகிறார்:-
த்ரிகூடம் என்ற பர்வதம் பிரஸித்தமானது. ஆகாயத்தைத் தொடும்படியான விசாலமான அநேக சிருங்கங்களுடன் கூடியது. பலவித மரங்களோடும் அருவிகளோடும் யானைகளோடும் பலவித பக்ஷிகளோடும் வீணை வாசிப்பதில் தேர்ச்சியுள்ள கின்னரர், கிம்புருஷர்கள் நாட்யமாடும் அப்ஸர ஸ்த்ரீகள், வித்யாதரர் முதலான தேவகணங்கள் கையில் ஜபமாலையுடன் ஜபம் செய்து கொண்டும், “ நான் சித்ஸ்வரூபம் “ என்று த்யானம் செய்து கொண்டுமிருக்கும் யதிகள், யோகிகள், முனிவர்கள் இவர்களுடன் கூடியது. இங்கு தான் கஜேந்திரனின் காலை முதலை பிடித்த பொழுது விஷ்ண்னு சக்ரபாணியாக வந்து காப்பாற்றினார்.
புண்யசாலிகள் வாழும் இந்த பர்வதத்தில் அத்ரி மஹரிஷி அநஸூயையுடனும் சிஷ்யருடனுடன் கூடி கிருஹஸ்த தர்மங்களைச் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் அவருடைய சிஷ்யன் கோ ரக்ஷகன் கங்கா ஸ்நானம் செய்ய யாத்திரை செல்ல வேண்டுமென்று ப்ரார்த்திக்க அத்ரி முனிவர் அவனுக்கு ஞானம் ஏற்படுவதற்காக ஓர் உபாயத்தை ஆலோசித்தார். பிறகு தன் சிஷ்யனின் கோரிக்கை நிறைவேறுவதற்காகவும் அங்கு வாழும் ஜனங்களின் க்ஷேமத்திற்காகவும் தன் கையில் இருக்கும் தண்டத்தால் பூமியில் தட்டவே அங்கிருந்து தீர்த்தம் கிளம்பியது.
அதற்கு அத்ரி தீர்த்தம் என்று தன் பெயரைக் கொடுத்து கங்கையை அழைத்தார். உடனே அங்கு வந்த கங்கையை தான் நிர்மாணித்த ஜலத்துடன் சேர்த்து விட்டார். இதனால் (கடனாத்)
அந்த தீர்த்ததிற்கு ‘ கடநா ‘ என்ற பெயர் ஏற்பட்டது. தைமாதம் புஷ்ய நக்ஷத்ரத்தன்று அங்கு கங்கை வந்து சேர்ந்த படியால் அங்கு தைப்பூசத்தன்று ஸ்நானம் செய்வது சிலாக்யமாகச் சொல்கிறார்கள்.
வெகுகாலத்திற்குப்பின் கங்கையானவள் “ நான் ஸமுத்ரம் செல்ல ஆசைப்படுகிறேன். அனுமதி தர வேண்டும் “ என்று பிரார்த்தித்தாள். முனிவரும் எப்பொழுதும் ’ கடனை ’ என்ற பெயரை தாங்கிக் கொண்டு ஸமுத்ரம் செல்வாயாக! என்று அனுமதி அளித்தார். உடனே கங்கை ’ கடனா ‘ என்ற  பெயருடன் கிழக்கு திசை நோக்கிச் சென்றாள். வழியில் இரு கரைகளிலும் உள்ள பாக்கு, தென்னை, பலா, மருது, மா, நெட்டலிங்கம்,கூந்தல் பனை, பில்வம், அத்தி, எலுமிச்சை முதலான விருக்ஷங்கள் அவளுக்கு ஆபரணங்களாக அமைந்தன. இரு கரைகளிலும் பாபமற்ற முனிவர்களால் சிவாலங்களும் விஷ்ணு ஆலயங்களும் அமைக்கப்பட்டன. தாயார் குழந்தைகளைப் போல தனது தீர்த்தத்தால் எல்லாப் ப்ரஜைகளையும் ரக்ஷித்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் அந்தப் பூமியைப் பரிசுத்தம் செய்து கொண்டும் கங்கை ”கடனை” என்ற பெயருடன் கிழக்கு திசையில் ஸமுத்ரத்தை அடைந்தாள்.
” கடநா “ என்ற பெயருடன் தன் பர்த்தாவான ஸமுத்திரத்தை நோக்கிச் செல்கிற கங்கை என்ற பெண்ணுக்கு அந்த நதியில் மலர்ந்த தாமரை முகமாகவும் கருநெய்தல் மலர்கள் கண்களாகவும் சக்ரவாக பக்ஷிகள் ஸ்தநங்களாகவும்  ராஜஹம்ஸங்களின் வரிசையாகிற தோழிகளுடன் சூழப்பட்டவளாய் விளங்கினாள். ஸாரஸ பக்ஷிகளின் நாதம் ஒட்டியாண ஒலியாகவும் செந்தாமரை பாதமாகவும் இருகரைகளிலுமுள்ள மரங்கள் குண்டலங்களாகவும், சுற்றி வரும் வண்டுகள் கேசங்களாகவும் வெண்மையான நாணல் மேலாடையாகவும் விளங்கியது.
வஹ்நீச்வரர், ராமேச்வரர், ஸுந்தரேசர், இவர்களின் ஆலயங்களுக்கு தெற்கே, வாலிநாதருக்கும் ரோமச முனிவரால் பூஜிக்கப்பட்ட பிரஹ்மவிருத்தபுரம் என்னும் பிரம்மதேசத்திற்கும் அங்குள்ள கைலாஸேச்வரருக்கும் ச்வேதேச்வர லிங்கத்திற்கும் வடக்கே கிழக்கு திசை நோக்கிச் சென்று புடார்ஜுநேச்வரலிங்கத்திற்கு மேற்கே தெற்கு நோக்கி பிரவஹித்தாள். அங்கு மிக கர்வத்துடன் ஓடிவரும் கடநா நதியைப் பார்த்து புடார்ஜுநேச்வரர், அவள் அஹங்காரத்தையடக்குவதற்காக ஹுங்காரம் செய்தார். அதனால் கடனை என்ற கங்கை வெகுகாலம் அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தாள். பிறகு ’தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஈசனே! ஜகந்நாதா,அர்ஜுநேச்வரா, பார்வதிநாத, பக்தர்களின் இஷ்டங்களைத் தருபவரே உனக்கு நமஸ்காரம். என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று துதித்து வெகுகாலம் தவம் செய்தாள்.
ஸ்தோத்ரத்தாலும் தவத்தாலும் சந்தோஷமடைந்த புடார்ஜுநேச்வரர் அவள் முன் தோன்றி “ அகஸ்தியர் இங்கு வந்த பின் தாம்ரபர்ணீ என்று ப்ரஸித்தமான நதி வரப்போகிறாள். அப்பொழுது அவளுடன் சேர்ந்து நீயும் செல்லலாம். “ என்று கூறிவிட்டு ஸ்வயம்பூலிங்கத்தில் மறைந்தார். ( இதனால் தாம்ரபர்ணீ நதி வரும் வரை கடநா நதி ப்ரவாஹம் புடார்ஜுனத்திற்கு அப்பால் செல்லாமல் அங்கேயே பூமிக்குள் சென்று மறைந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.)
தர்ம தத்வமறிந்த அத்ரி மாமுனிவர் சிவனிடம் தன் மனதைச் செலுத்தி சிஷ்யருடன் முக்காலங்களிலும் சைலேச லிங்கத்தைப் பூஜித்து வந்தார். மஹாபுத்திமானான சிஷ்யன் கோரக்ஷகன் சிவத்யானத்துடன் குரு சுச்ரூஷையில் ஈடுபட்டு திவ்ய ஞானமடைந்தான். இவ்விதமிருந்து வரும் பொழுது மஹாபுத்திமானான மஹரிஷி அத்ரி முனிவருக்கு அகஸ்த்ய முனிவரை தரிசிக்க வேணும் எண்ணம் ஏற்பட்டது. உடனே சிஷ்யனுடன் மலய பர்வதம் சென்று பாபவிநாசேசர் ஸந்நிதியில் தியானத்தில் அமர்ந்திருந்த அகஸ்த்ய முனிவரை தர்சித்து மிக ஸந்தோஷமடைந்து பாபவிநாசேச்வரரை வணங்கி மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“ மங்களரூபியும் அம்பிகையுடன் கூடியவருமான பாபநாசேச்வரருக்கு நமஸ்காரம். ஞானஸ்வரூபியும் எல்லாப் பிராணிகளுக்கும் ஸாக்ஷியான உமக்கு நமஸ்காரம். மூவுலக நாதரும் மூவுலகஸ்வரூபரும் சைதன்ய ஸ்வரூபரும் விகாரமற்றவருமான உமக்கு நமஸ்காரம்.”
இவ்வாறு துதித்து பக்தியால் பரவசமடைந்தார். அத்ரி முனிவரைக் கண்டு அகஸ்த்யர் திடீரென்று எழுந்து பாத்யம், அர்க்யம், ஆஸனம், வந்தனம் முதலான உபசாரங்களால் பூஜித்தார். இரு முனிவர்களும் மிக்க ஸந்தோஷமடைந்தவர்களாக பாபவிநாசேசரின் ஸந்நிதியில் பாபத்தைப் போக்கும் ஆச்சர்யமான சிவகதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு அத்ரி முனிவர் தனது ஆச்ரமத்திற்குப்போக எண்ணம் கொண்டவராய் அகஸ்த்யரிடம் விடைபெற்றுக் கொண்டு பாபநாசேச்வரரை வணங்கி த்ரிகூடாசலம் வந்து தந்து ஆச்ரமத்தில் ஸுகமாக வஸித்து வந்தார்.

       இரண்டாவது அத்யாயம் முற்றிற்று.           

Sunday, January 25, 2015

சிவசைலம் -1

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருளால் சிவசைலம் மாஹாத்மியம் கொஞ்சம் எழுத முயற்சி. முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.
சிவசைலபதியையும் பரமகல்யாணி நாயகியையும் அழகிய ஸ்நேகபுரத்தையும் கடநா நதியையும் வணங்குகிறேன்.
அத்ரி மஹரிஷியால் பூஜை செய்யப்பட்டவ்ரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமான சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்ரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரமகல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன்.
 கற்பூரம் போல் நிர்மலமான சரீரத்துடன் கூடியவளும் எதை நினைக்கிறார்களோ அதைக் கொடுக்கிறவளும் சங்கு போல் அழகிய கழுத்துடன் கூடியவளும் பூஜ்யையாயும் இருக்கின்ற அந்த ஸரஸ்வதியானவள்  என்னுடைய வாக்கிலிருந்து கொண்டு எனக்கு அனுக்ரஹத்தைச் செய்யட்டும். என்னுடைய கைகளிலிருந்து கொண்டும் அனுக்ரஹம் செய்யட்டும்.
சிரஸில் சந்திரனை தரித்திருப்பதாலுண்டான சோபையுடன் கூடிய ஜடாமண்டலத்தையுடையவரும் க்ருசமான உதரத்துடன் வேடுவ உருக்கொண்டவளுமான பார்வதியை சகாயமாகவுடையவரும் எப்பவும்
மங்களத்தைக் கொடுக்கின்றவரும் தன்னை உபாஸனை செய்கின்றவர்களுக்கு எப்பவும் பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமாகிய சிவசைலபதியை ஸேவிக்கிறேன். இவ்விடத்தில் வசிக்கும் மஹான்கள் எவருடைய  சரணகமலங்களை பூஜித்துஇங்கே சகல பாக்யங்களையும் அனுபவித்து முடிவில் மோக்ஷபதவியை அடைகின்றார்களோ அந்த சந்த்ர சூடனாகிய சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.

அண்டின ஜனங்களின் கஷ்டங்களை விவரிக்கின்றவளே சந்த்ரனை சிரோபூஷணமாகவுடையவளே மங்களத்தைச் செய்கின்றவளே, சிவசைலபதியின் பத்னியே, நெய்தல் புஷ்பத்திற்கு சமமான காந்தியுடையவளே. மனோஞ்ஞமானவளே,உன்னுடைய கருணைப்பார்வையை என்னிடம் இடைவிடாது செலுத்தவேண்டும். வணங்கின ஜனங்களின் பாபங்களாகிற ஹம்ஸங்களுக்கு புதிய நீருண்டமேகம் போலழகிய சரீர காந்தியுடன் கூடியவளும் குயிலுக்கு சமமான ம்ருதுவசனமுடையவளுமாகிய பரமகல்யாணியை நான் தினந்தோறும் வணங்குகிறேன்.

மங்களமாயும் வ்யாஸமஹர்ஷியின் முகமாகிய தாமரையில் நின்றும் பெருகினதாயும் சிவசைலனாதருடைய மஹிமையென்ற மதுவை இருகாதுகளின் வழியாக பக்தியுடனும் ஆதரவோடும் நித்யமாக எவன் பானஞ்செய்கின்றானோ அந்த புருஷன் பிறப்பு இறப்பு வ்யாதி முதலிய கஷ்டங்களுக்கிருப்பிடமான இந்த ஸம்ஸார பந்தத்தில் நின்றும் விடுபட்டு அழிவில்லாத சிவபதத்தை அடைகின்றான்.

             || சிவசைலமாஹாத்ம்யம் ||
             || முதலாவது அத்யாயம் ||
ஸகல லோகங்களிலும் ப்ரஸித்தமான நைமிசாரண்யம் என்பது மஹா தபஸ்விகல்ளும் வெகுநாள் யாகம் செய்யும் ரிஷிகளும் வாஸம் செய்யும் புண்யமான ஸ்தல விசேஷம் ஒருஸமயத்தில் அங்கு புராணங்களை நன்றாக அறிந்த ஸூதமுனிவரைக் குறித்து சௌனகாதி மஹர்ஷிகள் மிகவும் பணிவுடன் கேட்கிறார்கள்.

ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுணர்ந்த ஸூத மஹர்ஷியெ ! முன் சிவக்ஷேத்ரங்களுடைய வைபவங்களை மிகவும் சிறப்பாக சொன்னீர்கள். அதில் சிவசைலம் என்ற சிவக்ஷேத்ரத்தைப்பற்றி சுருக்கமாகச்சொன்னீர்கள் . இப்பொழுது அதை விஸ்தாரமாகக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம்.

அத்ரிமஹர்ஷி வாஸம் செய்த புனிதமான சிவசைலத்தில் சிவன் லிங்க உருவில் ஆவிர்பவித்தாரல்லவா ! மிகவும் அழகு பெற்ற கைலாசபர்வதத்தை விட்டுவிட்டு பரமேச்வரன் இங்கு ஏன் ஆவிர்பாவம் ஆனார் ? சிவசைலம் என்ற க்யாதி எவ்விதம் ஏற்பட்டது ? த்ரிகூடசைலம் என்று தானே முனிவர்கள் சொல்லிவந்தார்கள் ! சிவசைலத்தின் கிழக்கும் பக்கத்தில் மேற்குமுகமாக பரமகல்யாணீ நாயகராக விளங்குகிறார் . மலய பர்வததிற்கு வடக்குத் திசையில் கடநா நதிக்கு தென்கரையில் ஸாக்ஷாத் பரமேச்வரர் தன்னுடைய கணங்களுடன் பக்தர்களுக்கு அருள் புரிவதாகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டது, அதையும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும் என்றும் ப்ரச்னம் செய்தார்கள்.

இவ்விதம் மஹரிஷிகளால் செய்யப்பட்டு மிகவும் ஸந்தோஷமடைந்து ரிஷிகளுடைய வார்தைகளை மனதால் ச்லாகித்துக்கொண்டு ஸூதமுனிவர் ப்ரம்ஹா , விஷ்ணு , ருத்ரர் , விநாயகர் , ஸுப்ரம்ஹண்யர் , ஸரஸ்வதீ , சிஷ்யர்களுடைய ஆனந்தமாகிற தாமரை மலருக்கு ஸூர்யன் போல் விளங்குகின்ற குரு வ்யாஸர் , இவர்களை நன்றாக வணங்கினார் கல்யாணீ நாயகரும் கலியின் மலத்தைப் போக்குகிறவரும் மன்மதன் , காலன் ,(யமன்) அந்தகன் இவர்களை அடக்கியவரும் காமம் க்ரோதம் முதலிய சத்ருகணங்களை ஜயித்த யோகிகளுடைய மனதாகிற உப்பரிகையில் வஸிப்பவரும் கல்யாணாத்ரி என்கிற மஹாமேரு பர்வதத்தை வில்லாகச் செய்தவரும் ப்ரம்ஹா முதலிய தேவர்களால் வணங்கப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவருமான ஸ்ரீசைலபதியை தத்வார்தங்கள் ஸித்திக்கும் பொருட்டு வணங்குகிறேன்.

(இங்கு ஸூதமுனிவர் புராணத்தின் யதார்த்தமான பொருள் நன்கு விளங்குவதர்காக த்யானம் செய்தார். தத்வார்த்தஸித்தியை , என்பதை “ புத்ரார்த்த ஸ்த்யை கார்யார்த்த ஸித்யை ” என்று பிரார்தனைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ளலாம்.) இவ்வாறு ஸ்ரீ பரமகல்யாணீ சமேதரான சிவசைலேசரை மிகவும் ஸ்ந்தோஷத்துடன் வணங்கிவிட்டு சிவக்ஷேத்ரங்களில் உத்தமமான ஸ்ரீ சிவசைலத்தின் மஹிமையை கூறத் தொடங்கினார்.

ஸூதமுனிவர் :---  மஹர்ஷிகளே ! உங்களால் கேட்கப்பட்ட சிவசைல மாஹாத்ம்யம் மிகவும் லோகத்திற்கு மங்களகரமானது. கல்யாணீசகதை புண்யத்தைத் தரும் எப்பொழுதும் மங்களகரமானது . ஸம்ஸாரமாகிர கடலைக் கடக்கிறவர்க்கு ஸாதகமானது ஸகலாபீஷ்டங்களையும் கொடுக்கக்கூடியது.

மேலும் 1. கல்யாணீநாயக: 2.சம்பு : 3.சிவசைலேச: இந்த நாமத்ரய மந்த்ரம் த்ரிவர்க பலனைத் தரும் . மூன்று லோகங்களை வசீகரணம் செய்யக்கூடியது. ஷெ மந்த்ரத்தை ஓங்காரபூர்வமாக உச்சரித்தால் சதுர்வர்க பலனைத்தரும் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பது நாலு வர்கம்,
1.ஓம் கல்யாணீநாயக: 2. ஓம் சம்பு : 3. ஓம் சிவசைலேச: என்பதாகத் தெரிகிறது.) 1. சம்பு: 2.பரமகல்யாணீ நாயக: 3. அத்ரிஸுபூஜித: இந்த நாமத்ரயத்தை ஜபித்தால் நிச்சயமாக முக்தி ஏற்படும். 1. சிவ: 2. பரமகல்யாணீ நாயக: 3.அந்தகமர்தன: 4.கங்காதர; 5.விரூபாக்ஷ: 6.கபர்தீ 7.சசிபூஷண: 8.பஸ்சிமத்வாரநிலய: 9.கடநாதீரபூஷண; 10.அத்ரிபூஜித பாதாப்ஜயுகள:,11,நீலலோஹித:,12.கோரக்ஷலக்ஷித:. இது த்வாதச நாமங்கள் அடங்கிய மந்திரம். இந்த 12 நாமங்களையும் தினம் மூன்று காலங்களிலும் உச்சாரணம் செய்தால் ஜீவன் முக்தனாகிறான்.
இந்த சிவசைல க்ஷேத்ரம் எல்லா சிவ க்ஷேத்ரங்களைக்
காட்டிலும் முக்யமானது. மேற்கு முகமாக வாசல் உடையது.
( எல்லா ஆலயங்களுக்கும் அநேகமாக கிழக்கு பக்கம் வாசல் இருக்கும். இங்கே மேற்கே வாசல். இதனால் இதற்கு விசேஷம் அதிகம் என்று தாத்பர்யம். )
கடநா நதிக்கரைக்கு அலங்காரமாக இருக்கக் கூடியது. அழிவற்றது. நதிகளில் கங்கை போலவும் தேவர்களுக்குள் விஷ்ணு போலவும் க்ருஹஸ்தர்களுக்குள் வஸிஷ்டர் போலவும் ஸ்த்ரீகளுக்குள் அருந்ததி போலவும் மந்திரங்களுக்குள் ப்ரணவம் ( ஓங்காரம் ) போலவும் தானங்களுக்குள் அபயதானம் போலவும் பக்ஷிகளுக்குள் கருடன் போலவும் லோஹங்களுக்குள் தங்கம் போலவும் விருக்ஷங்களுக்குள் அஸ்வத்த (அரச)விருக்ஷம் போலவும் மிருகங்களுக்குள் பசு போலவும் ஈஸ்வரர்களுக்குள் சிவன் போலவும் இந்த க்ஷேத்ரம் சிவ க்ஷேத்ரங்களுக்குள் முக்யமானது.
இந்த க்ஷேத்ரத்தில் ஒருநாள் வாஸம் செய்தால் அதிபாதகத்திலிருந்து விடுதலையடைகிறான். நிரம்ப சொல்லி என்ன ப்ரயோஜனம்?. இந்த க்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் கிடையாது. கடநா நதியில் யாதொரு மனிதன் சதுர்த்தசி, அஷ்டமி, பூர்ணிமை, அமாவாஸ்யை, ஆடிமாதப்பிறப்பு, தை மாதப்பிறப்பு, சந்திரகிரஹணம், ஸூர்யகிரஹணம், சித்திரை மாதப்பிறப்பு, ஐப்பசிமாதப்பிறப்பு, விஷ்ணுபதி என்றி சொல்லக் கூடிய வைகாசி, ஆவணி,கார்த்திகை, மாசி மாதப் பிறப்புகள், ஷடசீதி என்று சொல்லக் கூடிய ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதப் பிறப்புகள் இந்த புண்ய தினங்களில் விதிப்படி ( ஸங்கல்பம், வருணஸூக்த படனம், மார்ஜனம், அகமர்ஷணம்,தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் என்ற பஞ்சாங்க முறைப்படி ) ஸ்நானம் செய்து தில அக்ஷதைகளால் தேவரிஷிபித்ரு தர்ப்பணம் செய்து,
மேற்கு முகமாக ஸ்வயம் ஆவிர்பவித்த, அழகிய 16 ஆவடையாளுடன் கூடிய சிவசைலேச லிங்கத்தையும்,
ஸகலலோக மாதாவும் பாசம், அங்குசம், அபயம்,வரதானம், இவைகளுடன் விளங்கும் நான்கு கைகளுள்ளவளும், அகன்ற கண்களுள்ளவளும் மேற்கு திசை நோக்கியவளும் எல்லா லக்ஷணங்களும் பொருந்தி, எல்லா அங்கங்களிலும் மிக்க அழகுடன் விளங்குபவளுமான பரமகல்யாணி அம்பாளையும் தரிசித்து ஒருமுறை வணங்கியவன் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு தேவபாவத்தை அடைகிறான்.
தினமும் மூன்று தடவை பரமகல்யாணி அம்பாளை ஸேவிப்பவன் எல்லா அபீஷ்டங்களையும் பெறுகிறான். ப்ரஹ்மா விஷ்ணு முதலியவர்களால் இங்கு பூஜிக்கப்பட்ட
ஸ்ரீசாம்ப மூர்த்தியின் ஸாந்நித்யமுள்ள சிவசைலக்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் இல்லவே இல்லை. இது முக்காலும் உண்மை. அத்ரி முனிவருக்கு அநுக்ரஹம் செய்வதற்காக ஈச்வரர் இங்கு எப்பொழும் ஸாந்நித்யத்துடன் இருக்கிறார்.
1.சிவசைலேச்வரர்,2.ராமேச்வரர்,3.வஹ்நீச்வரர்,4.பாபநாசேச்வரர். இந்த நான்கு மூர்த்திகளுக்கும் மத்தியில் உள்ள பிரதேசம் பஞ்சக்ரோசம் எனப்படும். ( காசியில் கங்கைகரையில் பஞ்சக்ரோசம் உள்ளது. அங்கு செல்பவர்கள் பஞ்சக்ரோச யாத்ரை செய்கிறார்கள் ) அது போல தக்ஷிணகங்கையிலும் பஞ்சக்ரோசமுள்ளது.
இங்கு வஸிக்கும் மனிதன் பஞ்சக்ரோச மத்தியில் எங்கு மரணமடைந்தாலும் ருத்ரானுக்ரஹத்தால் சிவஸாரூப்யத்தை அடைவான். ( காச்யாம் து மரணான் முக்தி என்றபடி ). இதுவும் காசிக்கு ஸமானம் என்று அறியவும். இங்கு செய்யும் தானம், ஹோமம், ஜபம், தவம் இவை அழிவற்ற பலனைக் கொடுக்கும். பொய் பேசுபவன், துஷ்டன், நாஸ்திகன், நன்றிமறந்தவன், குருத்ரோஹி, இரக்கமில்லாதவன், பிராணிகளுக்கு த்ரோஹம் செய்பவன் இவர்கள் இங்கு ஸுகமடைய மாட்டார்கள். இங்கு வஸிப்பவர்களுக்கு பாவம் செய்வதில் புத்தி செல்லாது.
சிவசைலத்தைச் சுற்றி ஐந்து யோஜனை வரையுள்ள பூமி பரிசுத்தமானது. புண்யத்தைத் தரும். கைலாஸபர்வதத்திற்கு ஸமமானது. இங்கு வஸிக்கும் மனிதர்கள் தேவர்களாகின்றார்கள். சிவசைலத்தில் ஒருமாதம் வஸிப்பவன் சிவபதத்தையடைகிறான்.எப்பொழும் வஸிப்பவனைப் பற்றிக் கேட்பானேன்?. சிவதீக்ஷை பெற்று சைவாகம முறைப்படி சிவசைலேசரைப் பூஜிக்கிறவன் சிவசைலேசனே. அவன் பூஜிக்கத்தகுந்தவன். சிவசைல க்ஷேத்ரத்திற்கு ஜீர்ணோத்தாரணம் செய்கிறவன் எல்லா அபீஷ்டங்களையும் அடைவான். பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் படி செய்பவனிடம் அஷ்டைச்வர்களும் செழிப்பாக இருக்கும்.
முனிவர்களே! நான் உண்மையாகச் சொல்கிறேன். சிவசைலநாதரின் பெருமைகளை முழுவதும் சொல்வதற்கு ஆயிரன் நாவுகள் படைத்த ஆதிசேஷனாலும் முடியாது என்றால் என்னைபோன்றவர் எப்படிச் சொல்ல முடியும்?. இந்த சிவசைல மாஹாத்மியத்தை தினமும் படிக்கிறவனும், கேட்கிறவனும் புண்யத்தை எப்பொழும் செய்வதில் ஆசையுள்ளவனாக ஆகி எல்லாச் செல்வங்களையும் செழிப்புகளையும் அடைந்து எல்லாராலும் வணங்கத்தக்கவனாகிறான்.
   முதலாவது அத்யாயம் முற்றிற்று.            

நன்றி ; நிதீஷ்வரன். 

Wednesday, December 3, 2014

ஸ்ரீமதி ஜானகி ராமச்சந்திரன் ( வக்கீல் மாமி )



                                                             

ஸத்குருபாதம் துணை

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருள் எங்கும் நிறைந்துள்ளது.
” யத்ராஸ்தி போகோ ந ச தத்ர மோக்ஷ:
      யத்ராஸ்தி மோக்ஷோ ந ச போக: |
ஸ்ரீசுந்தரீஸாதகபுங்கவானாம் போகஸ்ச
மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ || “
போகத்தைத் தரும் மார்க்கங்கள் மோக்ஷத்தைத் தருவதில்லை. மோக்ஷத்தைத் தரும் இதர யோகாதி மார்க்கங்கள் போகத்தைத் தருவதில்லை.
ஸ்ரீவித்யா உபாஸ்தி செய்துவரும் சாதகச்ரேஷ்டர்களுக்கு
போகமும் யோகமும் கைமேலேயே இருக்கின்றன என்பதற்கு உதாரணமாகவே வாழ்ந்து எங்கும் நிறைந்திருக்கிறார்கள் ஸ்ரீமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள்.

சிறந்த சிஷ்யனைத் தேடி குரு தானே வருவார் என்பதற்கும் உதாரணமாக சிறந்த குரு மூலமாகவே ஸ்ரீ வித்யா உபாசனையை அடைந்து எப்போதும் அம்பாள் நினைவிலேயே, தன் வாழ்வை சிறந்த முறையில் நடத்தித் தானே மற்ற பெண்மணிகளுக்கு சிறந்த உதாரணமாகவும் விளங்கி வந்தார்கள்.


அவர்கள் போல நம்மாலும் ஜபம் செய்ய முடியுமா? என்ற மலைப்பை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
தனக்காக மட்டுமல்ல எல்லோருக்காகவும் நாள் முழுதும் ஜபம் செய்து கொண்டே, காரியங்களையும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஸ்ரீபாஸ்கரப்ரகாச ஆஷ்ரமத்தின் முக்கிய வெளியீடாக ” ஸ்ரீவித்யா நித்யானுஷ்டானம் “ வெளிவரச் செய்து பல உபாஸகர்களுக்கு ” ஸ்ரீசக்ர ந்யாஸம் “
முதலான பல விஷயங்கள் தெரிந்துகொள்ள முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்கள்.

எப்போதும் எல்லோருக்காகவுமே வாழ்ந்து இப்போதும் எங்கும் நிறைந்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருள் எப்போதும் நம்மை வழி நடத்தப் ப்ரார்த்தனை.
  ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் ச தீமஹி புத்திம் யான: ப்ரசோத்யாத்.