Wednesday, November 4, 2015

ஞானானந்த பஞ்சகம் – ஸ்வாமி ஹரிதாஸ்கிரி

     ஞானானந்த பஞ்சகம் – ஸ்வாமி ஹரிதாஸ்கிரி
அன்பே! ஆராவமுதே! அருட்கடலே! அவிநாசா!
இன்பப்பொருள் நீயே! இனி உனை நான்விடுவேனோ?
துன்பம் இனி அணுகாதென்னை தொழுதேன் உனதடியே!
என்பால் அருள் செய்யும் ஞானானந்த பெருமானே !
என்பால் அருள் செய்யும் ஞானானந்த பெருமானே!

அதிகாலையில் எழுந்தே உனை அனுதினம் துதிப்போரை
விதிதான் என்னா செய்யும் ஊழ்வினை தான் உடன் வருமோ?
கதி நீ என்ற கருத்தில் உணர்ந்தேத்தும் எனதுள்ளத்தில்
உதித்தே எழுந்தருளும் ஞானானந்த பெருமானே!
உதித்தே எழுந்தருளும் ஞானானந்த பெருமானே!

தனிமை அது இனிமை என்று தயையோடருள் ஞானக்
கனியே கனிரஸமே! கார்முகிலே! கண்மணியே!
தனியே உனைக் காண தினம் தவம் செய்கின்றேனே!
இனியாகிலும் வருவாய் ஞானானந்த பெருமானே!
இனியாகிலும் வருவாய் ஞானானந்த பெருமானே!

நினைத்தால் முக்தியளிக்கும் திருவண்ணாமலையருகில்
என் நினைப்பாய் வந்தமர்ந்த எந்தன் நினைப்பே! ஞானக்களிப்பே!
அனைத்தும் அறிவோனே! ஆதிகுருவாய் வருவோனே!
எனையே உனக்களித்தேன் ஞானானந்த பெருமானே!
எனையே உனக்களித்தேன் ஞானானந்த பெருமானே!

சிறியேன் ஒன்றுமறியேன் என்று அறிந்தே அருள் செய்யும்
ஹரியாய் ஆதிசிவனாய் ஆறுமுகனாய் எப்பொழுதும்
வருவாய் வந்தருள்வாய் ஹரிதாஸகிரி கல்ப-
தருவே இது தருணம் ஞானானந்த பெருமானே!

கல்ப தருவே இது தருணம் ஞானானந்த பெருமானே! 

         நமஸ்காரங்கள் ; ஞானானந்த கிரி பீடம், தென்னாங்கூர்

Wednesday, January 28, 2015

சிவசைலம் - 12

பன்னிரண்டாவது அத்யாயம்
ஸூதர் சொல்கிறார்:- இப்பொழுது பாபநாச லிங்கத்தின் ஆவிர்பாவத்தைச் சொல்கிறேன். முன் ஒரு ஸமயம் மஹாதேவர் பார்வதியை கல்யாணம் செய்து கொள்ளத் தீர்மானத்தார். மூவுலக ஜனங்களுக்கும் கூடிய ஹிமாலயத்தில் பார்வதி கல்யாண மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக நடந்தது. கல்யாணத்தை தரிசிப்பதற்காக பாரதவர்ஷத்திலுள்ள ஸ்தாவரஜங்கமப்ராணிகள் யாவரும்  அங்கு கூடிவிட்டார்கள். ப்ராணிகளின் பாரத்தால் பூமியின் வடபாகம் கீழே இறங்கி தென்பாகம் மேலே எழும்பிவிட்டது. இதைப்பார்த்து மஹாதேவர் எந்த உபாயத்தால் தென்பாகம் கீழே தாழ்ந்து பூமி ஸமமாகும்என்று ஆலோசித்து அகஸ்த்யரைப் “பூமி ஸமநிலையடைவதர்காக நீர் தென் திசை செல்ல வேண்டும் எதிர் வார்தை ஒன்றும் பேசாமல் சீக்கிரம் செல்ல வேண்டும். பூமியை ஸமமாக ஆக்குகிறவர் உன்னைத் தவிர வேறு ஒருவருமில்லை.” என்று சொன்னார்.

இவ்வாறு ஈச்வரன் சொன்னதும் கல்யாண உத்ஸவத்தை பார்க்க முடியாமல் போய்விடுமே என்ற வருத்தமுள்ள போதிலும் சிவனுடைய உத்தரவை சிரஸால் ஏற்றுக் கொண்டு ஆலோசித்தார். சிவனுடைய உத்தரவையும் நிறைவேற்ற வேண்டும். கல்யாண உத்ஸவத்தையும் தர்சிக்க வேண்டும் இந்த இரண்டும் நிறைவேற என்ன உபாயம் என்று ஆலோசித்து ஒன்றும் தோன்றாமல் மனம் ஊசலாடியது.

இவ்வாறு அகஸ்த்யர் கவலையுற்றிருக்கும் போது மஹாதேவர் ‘மஹர்ஷே ! கவலையைவிடும். சைத்ரமாதத்தின் ஆரம்பத்தில் விஷுவன்று உமக்கு கல்யாண வைபவத்தைக் காட்டுகிறேன். சீக்கிரம் கிளம்ப வேண்டும் விந்த்ய மலையின் கர்வத்தையடக்கிவிட்டுச் செல்லும் தென்கடலின் கரையில் த்ரிகூடம் என்ற மலை உள்ளது. அதன் சமீபத்தில் கீழ்பக்கத்தில் கடநா நதியின் தென்கரையில் அனாதி சிவசைலேசர் என்று ப்ரஹ்மாவால் பூஜிக்கப்பட்டு வாஸம் செய்கிறேன். அங்கு சென்று என்னை பூஜை செய்யும். அங்கு வ்ருத்தரான அத்ரி முனிவரை தர்சனம் செய்து அவரிடம் அனிமதி பெற்றுக்கொண்டு மலய பர்வதம் சென்று அங்கு வெகு காலம் வாஸம் செய்யும். இந்த கங்கையும் என் உத்தரவால் உன் ஸ்மீபத்தில் தாம்ரபர்ணீ என்ற பெயருடன் தோன்றுவாள். மலயபர்வதத்தின் வடபக்கத்தில் தாம்ரபர்ணீ நதிக்கு மேற்கே உமது ஸந்தோஷத்திற்காக பாபநாசேச்வரர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக தோன்றி அங்கு எப்பொழுதும் ஸாந்நித்யம் கொண்டு வாஸம் செய்வேன். அங்கு தினமும் நதியில் ஸ்நாநம் செய்து விதிப்படி என்னை பூஜை செய்யும். அங்கு சித்திரை மாத ஆரம்பத்தில் விஷுவன்று என்னுடைய கல்யாண ஸ்ந்தர ரூபத்தைக் காட்டுகிறேன். உடனே புறப்பட்டுச் செல்லும் தாமதம் வேண்டாம்’ என்று சொன்னார்.

இதைக் கேட்டு அகஸ்த்யர் பரமசிவனின் உத்தரவை தலையால் ஏற்றுக் கங்கையை எடுத்துக்கொண்டு மலயபர்வதம் சென்றார். நடுவில் சிவசைலேசரை தர்சித்து பக்தியுடன் பூஜித்து அத்ரி முனிவரைக் கண்டு வணங்கி அனுமதி பெற்று கடநா நதியில் ஸ்நாநம் செய்து மலயமலைக்கு சென்றார். அங்கு நுழைந்ததும் மேலே எழும்பியிருந்த தென்பாகம் தாழ்ந்து அகஸ்த்யரின் மஹிமையால் பூமி ஸமநிலையையடைந்தத்து. அப்பொழுது அம்மலையில் கங்கையும் தாம்ரபர்ணீ என்ற பெயருடன் ஆவிரபவித்தாள். பரமசிவன் அகஸ்த்யருக்கு ப்ரீதியை உண்டு பண்ணுவதர்காக பாபநாசேசர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக ஆவிர்பவித்தார். அகஸ்த்யர் தாம்ரபர்ணீ நதியில் ஸ்நாநம் செய்து பாபநாசேச்வரரை பலவித ஸ்தோத்ரங்களால் துதித்து ஆனந்தமடைந்தார். வருஷாரம்பத்தில் சைத்ரமாஸத்தின் ஆதியில் சித்திரை விஷுவன்று பார்வதியுடன் கூட கல்யாணவேஷத்தில் ப்ரம்ஹாதிதேவர்களால் துதிக்கப்படும் சிவனை தர்சித்து நிறைந்த மனதுடன் பிறவிப்பயனைப்பெற்று க்ருதார்தரானார்.

ஹே விப்ரச்ரேஷ்டர்களே !பாபநாசேச்வரர் தோன்றிய வரலாறு உங்களுக்குச் சொல்லப்பட்டது. பாபநாசேச்வரரின் மாஹாத்ம்யம் முழுவதையும் யாரால் வர்ணிக்கமுடியும்? மூன்று லிங்கங்களின் உத்பத்தி என்னால் கூறப்பட்டது மூன்று லிங்கங்களுள் சிவசைலேசலிங்கம் சிறந்த்தது. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருப்பதாலும் ப்ரம்ஹாதிகளால் பூஜிக்கப்பட்டதாலும் மேற்கு முகமாக இருப்பதாலும் ஸ்ரீசிவசைலேசர் மேலானவராகக் கருதப்பட்டுள்ளார்.

இந்த சிவசைல ஸ்தலத்திற்கு ஸமமாக மற்றொறு ஸ்தலம் இருப்பதாக எவன் சொல்கிறானோ அவன் பாபத்தை சித்ரகுப்தனும் எண்ணமுடியாது. எவன் சிவசைல ஸ்தலத்தில் நித்யமாக வாஸம் செய்கிறானோ அவனுடைய புண்யங்களை எண்ணுவதற்கு சித்ரகுப்தனுக்கும் சக்தியில்லை. மூவுலகிலும் சிவசைலத்துக்கு ஸமமான க்ஷேத்ரமில்லை. சிவசைலேசலிங்கத்திற்கு எவன் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்கிறானோ அவன் பிள்ளை பேரன்களுடன் வெகுகாலம் ஸுகமாக வாழ்வான். சிவசைல க்ஷேத்ரத்திற்கு எவன் ஜீர்ணோத்தாரம் செய்கிறானோ அந்த புண்யசாலிக்கு எல்லா ஸித்திகளும் கையில் கிடைத்தமாதிரி தான்.    

இந்த சிவசைலமாஹாத்ம்யத்தில் ஒரு ச்லோகமோ அரை ச்லோகமோ எவன் ச்ரவணம் செய்கிறானோ  அவன் இவ்வுலகில் பலவித போகங்களை அனுபவித்து சிவசைலபதியை அடைவான். 12 அத்யாயம் கொண்ட சிவசைலமாஹாத்ம்யத்தை எவன் ப்ராம்ஹணர்களுடன் சொல்கிறானோ அவன் கல்யாணீசரின் அருளால் எல்லா அபீஷ்டங்களையும் அடைவான். எவன் 12 அத்யாயங்களை எழுதி பூஜிக்கிறானோ அவனுக்கு கல்யாணீசரின் அனுக்ரஹத்தால் ஸந்தான வ்ருத்தி ஏற்படும். எவன் 12 அத்யாயங்களையும் ச்ரவணம் செய்கிறானோ அவன் சிவசைசேசர்தான். இதைப் பற்றி விசாரிக்கவே வேண்டாம். சிவசைலேச லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை நடக்கும்படி எவன் ஏற்பாடு செய்கின்றானோ அவனுடைய இஷ்டங்களெல்லாம் நிறைவேறும். ஸந்தேஹமில்லை. இந்த 12 அத்யாயங்களை அமாவாஸை பௌர்ணமீ ஆகிய பர்வகாலங்களில் எவன் படிக்கிறானோ மூவுலகமும் அவனுக்கு வசமாகிவிடும் ஸம்சயமில்லை.

எவன் சிவனிடம் பக்தியுடன் இந்த சிவசைலபதியின் கதையை கேட்கிறானோ சொல்கிறானோ அவன் சிவசைலேசரின் க்ருபைக்கு பாத்ரமாவான். சிவனைப் போலவே இவனுடைய சரணங்களையும் எல்லோரும் வணங்குவார்கள். சிவசைல புண்யஸ்தலம் சிவஸாயுஜ்ய பலனைத்தரும் பெருமையுள்ளது. ஆகையால் இதன் வைபவம் முழுவதையும் வர்ணிப்பதற்கு சிவன் ஒருவருக்கு தான் ஸாமர்த்யமுண்டு.

ஸ்னேகபுரியை (அன்பூர் = ஆம்பூர்) வணங்குகிறேன். கல்யானி அம்பிகையை வணங்குகிறேன். கடநா நதியை வணங்குகிறேன்.

     பன்னிரண்டாவது அத்யாயம் முற்றும்.

   சிவசைல மாஹாத்ம்யம் முற்றுப் பெற்றது. 

சிவசைலம் - 11

பதினோறாவது அத்யாயம்
ருஷிகள் கேட்கிறார்கள் : ‘ சிவசைலேசர், ராமேசுவரர் ( ராமநாதர் ) வஹ்நீச்வரர், பாபநாசேச்வரர் இந்த நான்கு லிங்கங்களுக்கும் மத்தியில் உள்ள பஞ்சக்ரோசம் என்று தங்களால் ,முன்னர் கூறப்பட்டது. இங்கு வாஸம் செய்பவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும். மேலும் சிவசைலேச லிங்கள் தோன்றிய விவரம் கூறப்பட்டது. மற்ற லிங்கங்களின் ஆவிர்பாவத்தையும் கூற வேண்டும்’.
ஸூதர் கூறுகிறார் : - முன்னால் தசரத குமாரரான ஸ்ரீராமர், இறந்த பிராமண குமாரனைப் பிழைக்கச் செய்வதற்காக தவம் செய்து கொண்டிருக்கிற ‘ சம்புகன் ‘ என்ற சூத்ரனைக் கொன்றார்.
தாபஸனான சூத்ரனைக்கொன்றதாலெற்பட்ட பாபத்தால் துன்பமடைந்த தார்மிகரான சிறிது நேரம் ஆலோசித்து கொன்ற பாபத்தைப் போக்கும் சிறந்த ஸாதனம் சிவபூஜை என்று எண்ணினார். இவ்வாறு தீர்மானித்து சீக்கிரம் சிவபூஜை செய்ய விருப்பம் கொண்டவராய் சிவாராதனம் செய்வதற்குத் தகுந்த ஸ்தலத்தை ஆலோசித்தார். பிறகு எங்கு தாபஸ சூத்ரனை கொன்றாரோ அந்த ஸ்தலத்திலேயெ ராகவன் தன் பெயரிலேயெ ( ராமேசுவரர் அல்லது ராமநாதர் )  ஒரு லிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து முறைப்படி ஆலய நிர்மாணம் செய்து தேவதேவனை எல்லா உபசாரங்களாலும் பூஜித்து ஆனந்தமடைந்தார். தன் பெயரிலேயே புண்யதீர்த்தத்தையும் நிர்மாணித்து அதில் ஸ்நானம் செய்து சிவனை பூஜித்து பரிசுத்தியடைந்தவராக சிவனை வணங்கி மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“ பிரபோ! உலகங்களுக்கு நாதனான தங்களுக்கு நமஸ்காரம். தாங்கள் உலக உருக் கொண்டவர். விஷத்தை சாப்பிட்டதால் கருப்பான கழுத்தை உடையவர். துஷ்டர்களை அழச்செய்பவர், பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவர். பக்தர்கள் விரும்பும் பலன்களை வர்ஷிப்பவர். பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர். மேலானவர். பரமாத்மா பசுக்கள் போன்ற ஜீவர்களுக்கு பதி. பக்தர்களின் துன்பமாகிற இருட்டைப் போக்கும் ஸூரியன். பரம மங்கள ஸ்வரூபி. மங்களத்தைத் தருபவர். மஹாதேவா! உமக்கு நமஸ்காரம். கிருபையால் என்னை காப்பாற்ற வேண்டும். “
இவ்வாறு ராமர் மஹாதேவனை துதித்துவிட்டு பக்தி பரவசரானார். அப்பொழுது பக்தவத்ஸலரான மஹாதேவர் ராமரைபார்த்துக் கூறுகிறார்.
சிவன் ;- ‘ ஹே ராம! நான் ஸந்தோஷமடைந்தேன். சூத்ர தாபஸனைக் கொன்ற பாபத்திலிருந்து விடுபட்டு விட்டாய். நீ எப்போதும் சுத்த ஸ்வரூபன். மனிதரைப் போல் நடிக்கிறீர். நீரே உலகங்களுக்கு ஆத்மா. உம்மிடத்தில் எல்லாம் நிலை பெற்றிருக்கின்றன். ‘ இவ்வாறு கூறப்பட்ட ராமர் சம்புவைப் பார்த்துக் கூறினார்.
ராமர்:- என் பெயருடன் விளங்கும் இந்தப் புண்யதீர்த்ததில் புண்யகாலங்களில் எந்த மனிதன் ஸ்நானம் செய்து அதன் அங்கமான தீர்த்த ச்ரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளால் பித்ருக்கள், தேவதைகள், ரிஷிகள் இவர்களை த்ருப்தி செய்து என்னால் பூஜிக்கப்பட்ட உம்மை தர்சனம் செய்கிறானோ, அவனுடைய அபீஷ்டங்களெல்லாம் உமதுஅருளால் நிறைவேற வேணும். எல்லாப் பாபங்களுடன் கூடினவனாயிருந்தாலும் இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து என் நாதனான தங்களை தர்சனம் செய்கிறானோ அவன் சுத்தனாகட்டும். இந்த ராமேசுவர ஸ்தலத்தைச் சுற்றி ஒரு யோஜனை தூரத்தில் உள்ள பிரதேசம் உமது அனுக்ரஹத்தால் குருக்ஷேத்ரத்தைக் காட்டிலும் அதிகமான பலனைக் கொடுக்கட்டு. “
இவ்வாறு தேவேசனைப் ப்ரார்த்தித்து அவரிடம் விடைபெற்றுக் கொண்டு ஸந்தோஷத்துடன் புறப்படும் சமயத்தில் மறுபடியும் சிவசைலேசரை தரிசித்து நமஸ்கரித்து துதித்துத் தன் இருப்பிடம் சென்றார்.
முனிவர்களே! இவ்வாறு ராமநாத லிங்கம் தோன்றிய விவரம் உங்களுக்கு கூறப்பட்டது . வஹ்னீச்வரரின் உத்பத்தியைக் கூறுகிறேன். முன் ஒரு சமயம் அக்னி பகவான் ஸப்த்ரிஷிகளின்ம் மனைவிகளிடம் ஆசை கொண்டான். இது தெரிந்த முனிவர்கள் தம் தபோபலத்தால் ஒளியற்றுப் போகும்படி அக்னியை சபித்தார்கள். உடன்  அக்னி தேவன் சிவசைலம் சென்று சாபம் நீங்குவதற்காக தவம் செய்தான். பிறகு சிவசைலத்திற்கு முன்னால் தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை நிர்மாணம் செய்து தீர்த்தத்திற்கு மேற்கில் வரநதிக்குக் கிழக்கில் வஹ்நிநாதேசர் என்ற லிங்கத்தை ஸ்தாபித்தார். பிரதி தினமும் முக்காலங்களில் ஸ்நானம் செய்து பக்தியுடன் சிவனைப் பூஜித்து இதனால் ரிஷிகளின் சாபத்திலிருந்து விடுபட்டு அக்னி தேவன் முன்போல் ஒளியுடன் விளங்கினார். அதனால் வஹ்நிநாதர் விளங்கும் ஸ்தலம் பரிசுத்தமானது. ஒப்பற்றது. வஹ்னீச்வர லிங்கத்தைச் சுற்றிலும் ஒரு யோஜனை தூரம் பரிசுத்தமானது. மஹாபாபங்களையும் போக்கவல்லது. பிராமணர்களே! வஹ்னிநாத லிங்கத்தின் ஆவிர்பாவம் கூறப்பட்டது. பாபநச லிங்கத்தின் உத்பத்தியை கூறுகிறேன் கேளுங்கள்.
   பதினோறாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 10

 பத்தாவது அத்யாயம்.
சிவன் கூறுகின்றார் :-- மணலூருதேசாதிபதியான பாண்ட்யராஜனே பக்தருக்கு அபீஷ்டத்தைக் கொடுக்கும் நான் உனது பக்தியால் மிகவும் ஸந்தோஷமடைந்தேன். என் பக்தர்களில் உனக்கு ஸமமானவர் ஒருவருமில்லை ஆகையால் உன் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன். உனக்கு வரம் கொடுப்பதற்காக நான் வந்திருக்கிறேன். வேண்டிய வரங்களைக் கேள் உன்னை ப்ரீக்ஷிப்பதற்காக என் உத்தரவின் பேரில் குஹன் முனிகுமார வேஷங்கொண்டு உன்னுடன் சண்டையிட்டு உன்னைத் தோல்வியுறச்செய்தான். அதை மன்னித்து விடு.
சண்டையிட்ட வீரர்கள் முக்ய மந்த்ரிகள் உன் தம்பி ஸத்யகீர்த்தி யானை, குதிரை, தேர், காலாட்படைகள் எல்லோரும் என் அருளால் பிழைத்துப் பழைய பலத்துடனும் அலங்காரத்துடனும் விளங்குவதைப்பார் எல்லோருடனும் நீ தேரில் ஏறிக்கொண்டு ஸந்தோஷத்துடன் குதிரையைப் பிடித்துக் கொண்டு உன் நகரம் சென்று யாகத்தைப் பூர்த்தி செய். யாகமுடிவில் என் அருளால் குஹன் உனக்குப் புத்ரனாக வருவான். எல்லோரையும் ஜயிப்பதற்காக சத்ருக்களையழிக்கக்கூடிய சூலாயுதத்தையும், பாசுபதாஸ்த்ரத்தையும் தருகிறேன். பெற்றுக்கொள். அனேக யாகங்களைச் செய்து பூவுலகில் மற்றவர்களுக்குக் கிடைக்காத போகங்களை அனுபவித்துக்கொண்டு அரஸாக்ஷி செய்து பிள்ளை பேரன்களுடன் பூவுலகில் வெகுகாலம் வாழ்ந்து முடிவில் தேஹத்தை விட்டு என் ஸாயுஜ்யத்தை அடைவாய்.
இவ்வாறு ஈசனால் கூறப்பட்ட வார்த்தையைக் கேட்டு அரசன் மிகவும் ஸ்ந்தோஷமடைந்தவனாய் குரல் தழதழக்க ஈசனைப் பார்த்துக் கூறினான். என் மனதில் ஏற்படும் எண்ணங்களெல்லாம் உன் திருவடித் தாமரையைப் பற்றினதாகவே இருக்க வேணும். என் வாக்குகள் உன் நாமாக்களைச் சொல்ல வேணும். என் சரீரம் உன்னை வணங்குவதில் ஈடுபட வேண்டும். என்னிடம் தாங்கள் மிகவும் ஸ்னேகம் (அன்பு) காட்டியதால் இந்த நகரம் ஸ்னேகபுரீ என்ற பெயருடன் விளங்கட்டும். (sneh அன்பு purI ஊர். அன்பூர் இந்த பெயர் இப்பொழுது ஆம்பூர் என்று மாறிவிட்டது.) நானும் குஹனும் சண்டை செய்த இந்த பூமி குஹன் பெயரால் விளங்கட்டும் ”  என்று ப்ரார்த்தித்தான். ஈசனை திருப்பி திருப்பி வணங்கினான். பிறகு மயில்வாஹனத்தில் அமர்ந்திருக்கும் ஷண்முகரை வணங்கி ப்ரபோ ! என் குற்றத்தை மன்னித்துக்காப்பாற்ற வேண்டும் என்று கூறி வணங்கினான். ஸ்கந்தர் பரம்பக்தனான அரசனைப் பார்த்து ‘ எல்லாம் ஈசன் செயல் ’ என்பதை நினைவுறுத்திக் கொள் அரசனே! சம்புவால் எது சொல்லப்பட்டதோ அது அப்படியே நடைபெறும்.
இவ்வாறு சொல்லப்பட்ட அரசன் ஸ்கந்தரையும் சிவசைலபதியையும் வணங்கிவிட்டு குதிரையுடனும் ஸைன்யங்களுடனும் மந்திரிகளுடனும் தம்பியுடனும் தன் நகரம் வந்து ஈசனை மனதில் த்யானித்து யாகத்தை நடத்தி ஸந்தோஷமடைந்தான். குஹனும் ஈசன் வாக்கியத்தை ஸத்தியமாக்குவதற்காக அரசனுக்கு புத்திரனாக பிறந்து மனித ஸ்வபாவப்படி பாலலீலைகளைச் செய்தான். குஹனைப் புத்திரனாகப் பெற்ற ஸுதர்சன ராஜன் சாலிவாடீபுரத்திற்கு ( திருநெல்வேலிக்கு ) கிழக்கில் ஓர் நகரத்தை நிர்மாணம் செய்து குஹனை ராஜ்யத்தில் அமர்த்தி தான் ஸ்நேகபுரியில் வாஸம் செய்து கொண்டு மிகுந்த பக்தியுடன் சிவசைலேசரை பூஜித்தான். சிவாகமமறிந்த பிராமணனை வரவழைத்து தினமும் ஐந்து கால பூஜை நடத்தி வைத்தான். 18 வாத்யங்களாலும் ஆயிரக்கணக்கான தாஸீ தாஸர்களாலும் பலவித ரத்னங்கள் பதித்த ஆபரணங்களாலும் சிறந்த வஸ்திரங்களாலும் ஈசனுக்கு ப்ரீதி உண்டு பண்ணினான். தன் பெயரால் கடநா நதியில் அணைகட்டி வயல், தோட்டம், தோப்பு, நந்தவனங்களை நிர்மாணித்தான். சிவசைலத்தின் தினமும் உத்ஸவம் நடந்தது. இவ்வாறு சிவசைலபதியைப் பூஜித்து தந்து ஆயுளின் முடிவில் சிவஸாயுஜ்யம் அடைந்தான். பிறகு குமாரன் பல வருஷங்கள் அரசனாக ராஜ்யத்தை பரிபாலித்துக் கொண்டு எல்லோராலும் பூஜிக்கப்பட்டு விளங்கினான். முனிவர்களே, நீங்கள் கேட்டபடி கலியின் ஆரம்பத்தில் மனிதர்களால் சிவசைலபதி பூஜிக்கப்பட்ட விருத்தாந்தம் சொன்னேன்.

            பத்தாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 9

ஒன்பதாவது அத்யாயம்.
ரிஷிகள் கூறுகிறார்கள்:- சிவசைலபதியை முதலில் ப்ரம்ஹா பூஜித்ததாகவும் , பிறகு முனிவர்கள் பூஜித்ததாகவும் கூறினீர்கள். முதன் முதலாக மனிதர்களால் எப்பொழுது பூஜிக்கப்பட்டார்? இந்த விபரத்தை எங்களுக்கு சொல்ல வேண்டும். சிவசைலபதியின் கதையை எவ்வளவு கேட்டாலும் மனதில் த்ருப்தி ஏற்படுவதில்லை. நாங்கள் மிகுந்த பாக்யசாலிகள். இவ்வாறு முனிவர்களால்  கேட்கப்பட்ட ஸூதர் மறுபடியும் சிவசைலபதியின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
மூவுலகங்களிலும் புகழ் வாய்ந்த ஸுதர்சனன் என்னும் பாண்ட்யராஜன் மணலூரில் வஸித்துக் கொண்டு அரஸாக்ஷி செய்து வந்தான். இவன் எல்லா சாஸ்த்ரங்களையும் அறிந்தவன். ப்ராம்ஹணர்களிடம் பக்தி உள்ளவன். உண்மையே பேசுவான். ப்ரஜைகளின் நன்மையில் ஈடுபட்டவன். ஒரு ப்ராணிக்கும் த்ரோஹம் செய்யமாட்டான். இரக்கமுள்ளவன். புலன்களை ஜயித்தவன். பெரியோர்களை ஸேவிப்பவன். கோபத்தை ஜயித்தவன். புத்திமான் அஸூயை இல்லாதவன். ஸந்தோஷமுள்ளவன். யாகம் செய்பவன். ஸாதுக்களுக்கு இருப்பிடம். சம்புவிடம் மிகுந்த பக்தியுடன் சிவதீக்ஷை பெற்றவன். எங்கும் சிவ ஸ்வரூபத்தை பார்ப்பவன்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த அரசனுக்கு குழந்தை இல்லை. குழந்தை பெறுவதற்காக அச்வமேதயாகம் செய்யவேண்டுமென்ற நல்ல எண்ணம் அரசனுக்கு உண்டாயிற்று. தனக்கு குருவான ஜமதக்னி முனிவரைக் கூப்பிட்டு தன் எண்ணத்தைத் தெரிவித்தான். இதைக் கேட்ட ஜமதக்னி முனிவர் ‘சக்ரவர்திகளால் அனுஷ்டிக்கப்படும் அச்வமேதயாகத்தில் தேவர்களால் இடையூறுகள் ஏற்படக்கூடும். அதிலும் பாபத்திற்கே உறவினரான கலி ஆக்ஷிசெலுத்தும் காலம் தார்மிக அரசர்களுக்கு பலவித துன்பங்கள் ஏற்படும். ஆகையால் வேறு யாகம் நடத்தலாம் என்பது என் எண்ணம்’ என்று கூறினார். இதைக்கேட்ட அரசன் ‘முக்யமாக அச்வமேதயாகம் சிவனுக்கு மிகுந்த ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது. ஈச்வரப் ப்ரஸாதத்தாலும் ப்ராம்ஹணர்களின் ஆசீர்வாதத்தாலும் யாகங்களில் சிறந்த அச்வமேதயாகத்தை ஸுலபமாக நடத்தலாம். தாங்கள் அனுமதி கொடுக்கவேண்டும்’ என்று சொன்னான்.அந்த ஸமயத்தில் மஹாராஜாவே உன்னால் அச்வமேதயாகத்தை நடத்த முடியும். ஆலோசிக்க வேண்டாம் உடனே யாகத்தை ஆரம்பம் செய். என்று ஆகாயத்தில் அசரீரி வாக்கு கேட்டது. இதைக் கேட்ட அரசன் மிகவும் ஸந்தோஷம் அடைந்தான். பக்தியுடன் ஈசனை த்யானித்தான். ஜமதக்னி முனிவரும் ஆச்சர்யமடைந்து அரசனைப்பார்த்து ‘ஈச்வரனே உன்னிடம் ப்ரீதியுள்ளவராக இருக்கிறார். யாகம் நடைபெறட்டும். தாம்ரபர்ணீ நதிக்கரையில் யக்ஞசாலை நிர்மாணம் செய்யப்படட்டும். மந்த்ரிகள் எல்லா ஸாமக்ரிகளையும் சேகரிக்கட்டும். சாஸ்த்ரப்படி இடையூறு நீங்க சாந்திகள் நடத்தப்படட்டும். திறமையுள்ள வீரனின் பொறுப்பில் குதிரையானது உபாத்யாயருடன் (பூப்ரதக்ஷிணத்திற்காக) விடப்படட்டும். என்று சொன்னார். எல்லா மந்த்ரிகளும் குருவின் உத்தரவுப்படி எல்லா காரியங்களையும் செய்து தெரிவித்தார்கள். (அச்வமேதயாகத்தில் பூப்ரதக்ஷிணத்திற்காக குதிரையை அவிழ்த்துவிட வேண்டும். குதிரையுடன் ப்ரதானவீரன், ஸைன்யம், உபாத்யாயர், ரித்விக்குகள் எல்லோரும் செல்ல வேண்டும். குதிரை யாராலும் தாக்கப்படாமல் ஒருவிதத் தீங்கும் இல்லாமல் திரும்பி வரவேணும். பிறகுதான் யாகத்தை நடத்தலாம் என்பது விதி).
 பிறகு அரசன் புரோஹிதரான ஜமதக்னியை வணங்கி புத்ரனைப் பெறுவதற்காக அச்வமேதயாகத்தை நடத்திவைக்க வேண்டுமென்று ப்ரார்த்தித்தார். ஜமதக்னி அரசன் அபிப்ராயம் அறிந்து வஸந்தருதுவில் முனிவர்களுடன் யாகத்தை ஆரம்பித்தார். உபாத்யாயருடன்கூட நல்ல லக்ஷணமுள்ள குதிரையை விடுத்தார். இந்த யக்ஞ்த்தை தர்சிப்பதற்காக தத்வமறிந்த முனிவர்கள், அரசர்கள், ப்ராம்ஹணர், க்ஷ்த்ரியர், வைச்யர், எல்லோரும் பல தேசங்களிலிருந்து அங்கு வந்து கூடிவிட்டார்கள். சாஸ்த்ரமுறைப்படி யாவரும் அதிசயிக்கத்தக்க முறையில் யாகம் நடந்தது. ஸுதர்சன ராஜாவின் தம்பியும் ஒப்பற்ற பலமுள்ளவனும் தார்மிகனுமான ஸத்யகீர்த்தி அச்வமேதக் குதிரயை நடத்திச் சென்றான். முதலில் குதிரையை கிழக்கு திசையில் நடத்திச் சென்று அங்குள்ளவர்கள் யாவரையும் ஸ்வவசப்படுத்தி பிறகு தென் திசை சென்றான். அங்கு உள்ள அரசர்கள் அவனையும், குதிரையையும் வணங்கி அவனுக்கு உட்பட்டுவிட்டார்கள். பிறகு மனதில் சிறிதும் பயம் இல்லாமல் மேற்கு திசையில் பல இடங்களுக்குச் சென்று சிவசைலம் வந்தான்.
 சிவசைலபதி தன் பக்தனை பரிசோதித்து ப்ரியத்தைச் செய்வதற்காக ஸுப்ரம்ஹண்யரைப் பார்த்து குதிரையைப் பிடித்துக் கட்டு என்றார். ஈசனின் உத்தரவுப்படி ஸ்கந்தர் முனிகுமார வேஷத்துடன் அங்கு வந்து விளையாட்டாக அச்வமேதக் குதிரையை மரத்தடியில் கட்டி விட்டார். ப்ராம்ஹணச் சிறுவனுடையச் செய்கையைக் கண்டு ஸேநா வீரர்களும் ஸத்யகீர்த்தியும் ஆச்சர்யமடைந்தனர். ஹேமுனிகுமாரனே தாமதியாமல் உடனே யாகக் குதிரையை அவிழ்த்துவிடு விளையாட்டு போதும் என்று கூறினார்கள். இதைக் கேட்டு முருகன் ‘ வீரர்களாக தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள் என்னுடன் போர்புரிந்து என்னை ஜயித்த பிறகு குதிரையை விடுவித்துக் கொண்டு போகலாம் இல்லாவிடில் நான் குதிரையை விடுவிக்கமாட்டேன்’ என்றான்.
  இதைக் கேட்ட வீரர்கள் ‘இந்த ப்ராம்ஹண குமாரன் சக்தி ஆயுதத்துடன் யுத்தத்திற்கு வந்திருக்கிறான் நம்மைக் கொல்ல வந்த இவனைக் கொல்வதால் பாபமில்லை’ என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு கத்தி, சூலம், பரசு முதலிய ஆயுதங்களால் குஹனையடித்தனர். இவை அவனைத் தாக்கவில்லை மலைபோல் அசைவற்று இருந்தான். பிறகு குஹன் ஸிம்ஹம் சிறிய மிருகங்களைப் போலவும், கருடன் பாம்புகளைப் போலவும், சக்தி ஆயுதத்தால் ஸேநா வீரர்களையடித்தார். சக்தி ஆயுதத்தால் அடிக்கப்பட்ட வீரர்கள் யாவரும் ஆயிரக்கணக்காக பூமியில் விழுந்தனர்.
  இதைக் கண்டு ஸத்யகீர்த்தி ப்ராம்ஹணபந்துவே சிறுவனே சீக்கிரம் குதிரையை விட்டுவிடு. இல்லாவிட்டால் உன்னைக் கொல்வேன். அரசர்களுக்குக் கருணை எப்போதும் இருக்காது. என்று கூறி குஹன் பேரில் ஐந்து அம்புகளை விட்டான். உடனே கோபம் கொண்ட மஹாஸேநர் சக்தி ஆயுதத்தால் அவனை அடித்தார். சக்தி ஆயுதத்தால் உடல் பிளக்கப்பட்டு ஸத்யகீர்த்தி பூமியில் விழுந்தான். உடனே மிஞ்சியிருந்த வீரர்கள் மண்லூருபுரம் சென்று அரசரிடம் எல்லா வ்ருத்தாந்தங்களையும் கூறினார்கள்.
இதைக் கேட்ட அரசன் ஸுதர்சனன் சதுரங்க ஸைன்யத்துடனும், மந்த்ரிகளுடனும் அங்கு வந்தார். முனி வேஷம் தரித்தவனும் காந்தியுள்ளவனும் எல்லா லக்ஷணங்களும் பொருந்தி கோடி மன்மதர்களின் அழகு வாய்ந்தவரும், எல்லாம் அறிந்தவரும், கருணைக்கடலும், ஈச்வரகுமாரனுமான குஹனைப் பார்த்து அவருடைய ஒளியால் தாக்கப்பட்டு ப்ரீதியுடன் கேட்டான்.
  அழகு நிறைந்தவனும் சிறுவனுமான நீ யார்? எந்த மஹர்ஷியின் குமாரன்? உண்மையைச் சொல்? இவ்வாறு கேட்ட அரசனைப் பார்த்து குஹன் ‘அரசனே! யுத்தம் செய்ய வந்த வீரர்கள் வீணாக புகழுரைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். நான் யாராயிருந்தால் என்ன? நீ வீரனாக இருந்தால் யுத்தம் செய்’ என்று சொன்னான். இதைக் கேட்டு ஸுதர்சனன் கோபம் கொண்டவனாய் தன் சைன்யங்களை ஏவினான். தானும் அம்புகளை எறிந்தான். தேரிலும் குதிரைகளிலும் யானைகளிலும் அமர்ந்து படைகள் பூமியை அதிர்ச்சியடையச்செய்து கொல்ல எண்ணம் கொண்டவைகளாய் குஹனைஅ சுற்றி நான்கு புறமும் சூழ்ந்துகொண்டு எதிர்த்தன.
   இதைக்கண்ட பார்வதியின் குமாரனான குஹன் சக்தி ஆயுதத்தை எறிந்தான். அது தீப்பற்றிக்கொண்டு அந்த நிமிஷமே ஸைன்யம் முழுவதையும் சாம்பலாக்கிவிட்டது. ஸைன்யம் முழுவதும் நாசமடைந்தபின் ஸுதர்சனன் ஐந்த்ரம் , யாம்யம், ப்ராம்ஹம், கௌபேரம், வாருணம் முதலான எல்லா அஸ்த்ரங்களையும் விட்டான். தன் சக்தி ஆயுதத்தால் அவைகள் எல்லாவற்றையும் அழித்தான் குஹன். தன் வில் ஒடிந்து தேர், குதிரை, தேர்பாகன் அழிந்து சக்தி ஆயுதத்தால் மார்பு பிளக்கப்பட்டு அரசன் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார். வெகுநேரத்திற்குப்பின் ஞாபகம் வந்தது. ச்ரமமின்றி கம்பீரமான தோற்றத்துடன் நிற்கும் குமாரனைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார். சிறிது நேரம் பரமேச்வரனை த்யானம் செய்து கடநா நதியில் ஸ்நாநம் செய்து ஷடக்ஷர [பீஜஸஹிதமான பஞ்சாக்ஷர] மந்த்ரத்தை ஜபம் செய்து பார்வதீ ஸ்கந்தர் விநாயகர் இவர்களுடன் கூடிய சிவசைலபதியை மாநஸ உபசாரங்களால் பூஜித்து பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
  “துன்பங்களைப் போக்குபவரும், ஒளிஸ்வரூபரும் பசுக்களுக்கு [ஜீவர்களுக்கு] பதியும் யாகம் செய்கிறவர்களுக்கு தலைவரும் யக்ஞபதியும் மங்கள ரூபியும் அம்பிகையுடனும் கணங்களுடனும், புத்ரர்களுடனும் கூடியவருமான உமக்கு நமஸ்காரம், மஹாதேவா, சங்கரா, சரணமடைந்த என்னை கருணையால் காப்பாற்றவேணும்” இவ்வாறு துதித்து விட்டு பக்திபரவசராய் சிவஸன்னிதியில் இருந்தார்.
    அப்பொழுது அழகுக்கு இருப்பிடமான சம்புவானவர் கைலாஸாசலம் போன்ற வெண்மையான வ்ருஷபவாஹனத்தில் அமர்ந்து நந்தி, குண்டோதரன் முதலான எல்லா கணங்களுடன் அரசனுக்கு முன்னால் தோன்றி தர்சனம் கொடுத்து தாமரை போன்ற முக மலர்ச்சியுடன் அரசனை ஆனந்தமுறச்செய்து மேகம்போல் கம்பீரமாகக் கூறினார்.
     ஒன்பதாவது அத்யாயம் முற்றும்.

சிவசைலம் - 8

எட்டாவது அத்யாயம்
ரிஷிகள் கூறுகிறார்கள்:- கோபம் கொண்ட பார்வதி சிவசைலபதியின் ஸந்நிதிக்கு வந்ததும் அவளுக்கு சிவன் தன் பாதிசரீரம் கொடுத்ததும் விபரமாகச் சொல்ல வேண்டும். இதக் கேட்க எங்களுக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.
இவ்வாறு ப்ரார்த்திக்கப்பட்ட ஸூதர் தன் வார்த்தையால் முனிவர்களை ஸந்தோஷப் படுத்துகிறவராக தேவிக்கு ஸ்ந்தோஷம் ஏற்பட்டதன் காரணத்தைச் சொன்னார்.
பார்வதி தவம் செய்யும் பொழுது கருணாநிதியான ஈசுவரன் பார்வதியின் பிரிவைத் தாங்கமுடியாமல் அதனால் துன்பமுற்றவராய் உண்மையே பேசுகின்றவளும் தர்மசீலையுமான அத்ரியின் பத்னி அநசூயையைக் கூப்பிட்டு தேவியை ஸமாதானப்படுத்துவதற்காக அவளை அனுப்பிகிறவராய்ச் சொன்னார்.
“ ஹே அநஸூயா தேவியே! பார்வதியின் பிரிவால் உண்டான வேதனையைத் தாங்கமுடியவில்லை. துஷ்டனான மன்மதன் முன் விரோதத்தை நினைத்துக் கொண்டு முன்னால் அவன் சரீரத்தில்க் என் கண்ணால் செய்த கார்யத்தை என் மனதில் பாணத்தால் செய்கிறான். எப்பொழுதும் அவனுடைய ஐந்து அம்புகளுக்கும் என்னை இலக்காக்குகிறான். அவளை அழைத்து வருவதற்காக நான் அனுப்பிய கங்கை இன்னும் திரும்பிவரவில்லை. ஆகையால் நீ அவள் தவம் செய்யும் இடம் சென்று ஸமாதானமாயும் ப்ரியமாயும் இனிமையாயும் மனதைக் கவரும்படியான வாக்யங்களால் அவளை ஸமாதானப்படுத்தி இங்கு அழைத்து வா.
  இவ்வாறு சம்புவால் சொல்லப்பட்ட பதிவ்ரதையான அநஸூயை பார்வதி தவம் செய்யுமிடம் சென்று மெதுவாக ஸமாதானப்ப்டுத்தினாள். “ஹே கல்யாணீ! நீ சிவசைலேசன் ஸந்நிதிக்கு வரவேணும். ஹே புவனேச்வரீ! நீங்கள் இல்லாமல் சிவன் சூன்யர் போல் தோன்றுகிறார். அவர் ஸச்சிதானந்த ரூபராயிருந்தாலும் உன்னுடன் கூடியிருந்தால்தான் நன்கு விளங்குவார். உன் பிரிவால் அவருக்கு இரவில் தூக்கமில்லை. சாப்பிடுவதில்லை. உன்னிடமே மனதை செலுத்தி எப்பொழுதும் த்யானம் செய்கிறார். “ஹே ப்ரியே, கல்யாணீ எங்கு சென்றுவிட்டாய் என்று உன்னை பற்றியே பேசுகிறார். இவ்வாறு ஸ்மாதானப்படுத்திய அனஸூயையைப் பார்த்து தேவி சொல்கிறாள்.
 அனஸூயாதேவியே ! எனக்கு சிவனின் பாதி சரீரம் கிடைக்கும் வரை தவம் செய்வேன். இப்பொழுது சிவசைலேசரின் ஸந்நிதிக்கு வரப்போவதில்லை. நீ அத்ரி முனிவருடன் கலந்து யோஜித்து எனக்கு சிவனுடைய பாதி சரீரம் கிடைப்பதற்கு உபாயம் சொல்லவேணும்.
இந்த ஸமயம் அத்ரி முனிவர் கௌதமர் முதலான முனிவர்களுடன் தேவியை தரிஸிப்பதற்கு யத்ருச்சையாக அங்கு வந்தார். தவம் செய்யும் தேவியை ஷோடசோபசாரங்களால் பூஜித்து பக்தியுடன் வணங்கினார். அநஸூயை தந்து கணவரான அத்ரிமுனிவரிடம் பார்வதியின் விருப்பத்தைத் தெரிவித்தாள். உடனே அத்ரிமுனிவர் சிறிது நேரம் த்யானித்து விட்டு பிறகு தேவியைப் பார்த்து சொல்கிறார்.
  “ஹே மஹாதேவி ! ஈச்வரனுடைய பாதி தேஹம் அடைவதற்கு ஓர் உபாயமுள்ளது. கேதாரவ்ரதம் என்பது சிவனுக்கு மிகவும் ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது. இந்த வ்ரதத்தை அனுஷ்டானம் செய்தால் இதனால் ஸந்தோஷமடைந்து பரமேச்வரன் கட்டாயம் உனக்கு தன்னுடைய பாதி சரீரத்தைக் கொடுப்பார். இது உண்மை.” இவ்வாறு கூறிய அத்ரிமுனிவரையும் தர்மமறிந்த அனஸூயையையும் வணங்கி தேவி கூறுகிறாள். {தனக்குத் தெரிந்தும் தான் உபதேசிக்காமல் அனஸூயை தன் பர்த்தாவைக் கொண்டு கேதாரவ்ரதத்தை உபதேசிக்கும்படி செய்ததன் மூலம் தன் பதிவ்ரதா தர்மத்தை காட்டியதால் “தர்மக்ஞா” என்று கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.} ஹிமவானுக்குப் போல் உங்களுக்கும் நான் பெண்ணாக ஆய்விட்டேன். கேதார விரதத்தை அனுஷ்டிக்கும் விதிமுறைகளைக் கூற வேண்டும் என்று கேட்ட தேவிக்கு அத்ரிமுனிவர் எல்லாவற்றையும் கூறினார்.
     அத்ரிமுனிவரிடம் கேட்டு விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு பார்வதீதேவி பாத்ரபதமாதம் சுக்லபக்ஷ அஷ்டமியன்று ஆரம்பித்து 21 நாட்கள் கேதாரநாதரைப் பூஜித்து உபவாஸ நியமத்தைக் கைக்கொண்டு 21 ஸூத்ரங்களால் செய்த ப்ரதிஸரத்தை{காப்பை}க் கட்டிக்கொண்டு வ்ரதானுஷ்டானம் செய்தாள். பாத்ரபத க்ருஷ்ண சதுர்த்தியன்று அனஸூயையுடன் கேதாரநாதரை விதிப்படி பூஜித்து கையில் தோரகத்தை {சரடு} கட்டிக்கொண்டு சிவனை வணங்கினாள். {இங்கு பார்வதிக்கு அனஸூயை சரடு கட்டியிருக்கலாம்}.     

உடனே கோடி சந்திரர்களின் காந்தியுள்ளவரும் மிக்க அழகியவரும் கைகளில் மான், உளி, வரம், அபயம் இவைகளைத் தாங்கியவரும் விருஷப வாஹனத்தில் அமர்ந்திருப்பவருமான பரமேசன் எல்லா தேவர்களுடனும் பரிவாரங்களுடனும் தேவியின் முன் தோன்றி பிரஸந்நமான முகத்துடன் தேவியைக் கூப்பிட்டு “ கல்யாணீ! உன் விரதத்தாலும், தவத்தாலும் நியமத்தாலும் நான் ஸந்தோஷமடைந்திருக்கிறேன். என் சரீரத்தில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன். ஸூரியனோடு ஒளி சேர்ந்திருப்பது போல் நீ எப்போதும் என்னுடன் சேர்ந்திருக்கிறாய். நீ என்னைக் காட்டிலும் வேறல்ல. ஆனாலும் இப்பொழுது சரீரார்த்தத்தைக் கொடுக்கிறேன். ஸந்தோஷத்துடன் பிரஸன்னனான என்னைப் பார்! “ என்று கூறினார். இதைக் கேட்டு மனதில் ஸந்தோஷம் நிறைந்தவளாய் பார்வதி திரும்பத் திரும்ப பரமேசனைப் பார்த்தாள். தேவி ஸந்தோஷத்துடன் இருப்பதை அறிந்த சிவசைலபதி ஹே கல்யாணி ! வா, நாம் நமக்கு பிரியமான சிவசைல ஸ்தலத்திற்குப் போவோம் என்று கூறி அம்பிகையை தனது இடது மடியில் ஏற்றி வைத்துக் கொண்டு சிவசைலஸ்தலம் சென்று அவளுடன் இன்புற்றிருந்தார். முனிவர்களே! தேவியின் ஸந்தோஷத்திற்கு காரணமான இச்சரித்திரத்தை உங்களுக்கு சொன்னேன். வேறு என்ன கேட்க விரும்புகிறீர்கள், என்று ஸூதமுனிவர் கேட்டார்.


        எட்டாவது அத்யாயம் முற்றும் 

சிவசைலம் - 7

          ஏழாவது அத்யாயம்
அநேகமாக எல்லா ப்ரதேசங்களிலும் சிவலிங்கங்கள் கிழக்குப்
பார்த்து இருக்கின்றன. இந்த ஸ்வயம்பூ லிங்கரூபியான சிவசைலபதி , எந்தக் காரணத்தினால் மேற்குத் திசையைப் பார்த்து இருக்கிறார்?. உலகங்களால் பூஜிக்கப்பட்ட பார்வதி தேவி சிவசைலபதிக்குப் பத்னியாக அமைந்து எந்தக் காரணத்தினால் ‘கல்யாணீ’ என்ற பெயரையடைந்தாள்?.
வியாஸருடைய அனுக்ரஹத்தாலும் சிவபக்தியினாலும் நீர் ஸகலத்தையும் அறிந்தவர். மூன்று லோகங்களையும் அறிந்தவர். ஆகையால் இந்த விசேஷங்களை விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும். என்று முனிவர்களால் வேண்டிக் கொள்ளப் பட்ட ஸூதமுனிவர் கல்யாணீபதியான சிவசைலபதியை மனதில் தியானித்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
ஸூதமுனிவர் கூறுகிறார்:- முன்னொரு ஸமயத்தில் சிவசைல ஸ்தலத்தில் பரமேச்வரன் பார்வதியுடனும் பிரமத கணங்களுடனும் சேர்ந்து அமர்ந்திருந்து எல்லோருக்கும் தர்சனம் கொடுத்தார். அப்பொழுது ப்ரஹ்மா முதலிய தேவர்கள், இந்திரன் முதலிய 8 திக்பாலகர்கள், 12 ஆதித்யர்கள், 8 வஸுக்கள், 11(அநேக)ருத்ரர்கள், ஸித்தர்கள்,கந்தர்வர்கள்,கின்னரர்கள்,வஸிஷ்டர் முதலிய ப்ரஹ்ம ரிஷிகள், நாரதர் முதலிய தேவரிஷிகள்,கங்கா முதலிய நதீ தேவதைகள், ஊர்வசீ முதலான தேவ ஸ்த்ரீகள், ஓங்காராதி தேவதைகள், வேதங்கள் இவர்கள் ஆவலுடன் சிவ தர்சனம் செய்ய வந்திருந்தார்கள். எல்லாரும் பரமேச்வரரை வணங்கி அநேக ஸ்தோத்ரங்களால் ஸ்தோத்ரம் செய்து இருபக்கங்களிலும் பரமேச்வரருடைய முகத்தைப் பார்ப்பதற்காக நின்றார்கள். ப்ரஸந்நமான பார்வதீகாந்தனை தர்சனம் செய்து கிருதார்த்தர்களாக எண்ணினார்கள்.
பரமேச்வரருக்கு மிகவும் பிரியமான கணத்தலைவர் ‘ப்ருங்கிடி’ என்பவர். மிகவும் ஹாஸ்யங்களால் நிரம்பியதும் விசித்ரமானதுகளுமான செய்கைகளால் பரமேச்வரரை ஸந்தோஷப்படுத்தி சிவனிடம் விடைபெற்றுக் கொண்டு செல்லும்பொழுது அம்பிகையையும் சேர்த்துப் பிரதக்ஷிணம் செய்யாமல் சிவனை மட்டும் பிரதக்ஷிணம் செய்து விட்டு, அம்பிகையை விட்டு பரமேச்வரனை மட்டும் நமஸ்கரித்து ஸ்தோத்ரம் செய்து மெளனமாக நின்றார்.
இதைக் கண்டு பார்வ்வதீ தேவியானவள் தன் பர்த்தாவாகிய பரமேச்வரரைப் பார்த்து “கணங்களின் தலைவரான பிருங்கிடி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?. எதற்காக இந்தக் காரியத்தைச் செய்தான்?. ( என்னை விட்டு தங்களை மட்டும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டிய காரணம் என்ன?.)“ என்று கேட்டாள்.

அதைக்கேட்டு பரமேச்வரர் சிரித்துக் கொண்டு பார்வ்வதியைப் பார்த்துச் சொல்கிறார்:- “ உன்னையும் என்னையும் நன்றாகக் கவனித்து ஆலோசித்து, என்னை மட்டும் அண்டியவர்கள் வணங்கிக் காரிய ஸித்தியை அடைகிறார்கள். உன்னால் பிரயோஜனமில்லை என்பதையறிந்து (எல்லோருக்கும் இது தெரியட்டும் என்று) செய்தார். (என்னாலேயே கார்ய ஸித்தி ஏற்படும் பொழுது அதிகப்படி உன்னையும் ஸேவிக்க வேண்டியதில்லை) “ இவ்வாறு பரமேச்வரனால் சொல்லப்பட்ட ஜகத்ஸ்வரூபிணியான பார்வதீதேவி கோபமடைந்து கணதேவனாகிய பிருங்கிரிடியின் சரீரத்திலிருக்கும் சக்தியை அபஹரித்து விட்டாள்.சக்தியற்ற கணாபனாகிய பிருங்கிரிடி தேஹபலமற்று கீழே விழுந்தான். பார்வதியும் மேற்குத்திசை சென்றுவிட்டாள்.
பரமேச்வரன் பார்வதியை ஸமாதானம் செய்வதற்காக மேற்குமுகமாக ஆனார். ஸமாதானம் செய்வதற்கு கங்காதி நதிகளை அனுப்பினார். தானும் கூப்பிட்டார். “ ஹே கல்யாணீ! பார்வதீ! நீ எனக்குப் பிரியமானவள் அல்லவா! ஏன் கோபமடைந்து விட்டாய்?. நான் பரிஹாஸமாகச் சொன்ன வார்த்தையல்லவோ?. கோபம் வேண்டாம். வருவாயாக. இது பரிஹாஸம் என்பதை நீ அறியவில்லை. உண்மையென்று நினைத்துக் கொண்டுவிட்டால் கோபம் வேண்டாம், கட்டாயம் வர வேண்டும். “ இவ்விதம் அநேக விதமாகப் பேசியும் ஸமாதானம் அடையவில்லை. (பார்வதியானவள் தான் தனிப்பட்ட மூர்த்தியாக இருந்ததால் தான் நம்மை விலக்கிவைக்கிறார்கள்.பரமேச்வரனுடைய பாதி சரீரமாகவே ஆகிவிட்டால் நம்மை விடமுடியாதல்லவா என்ற எண்ணத்துடன்) பரமேச்வரருடைய பாதி சரீரத்தையடைய வேண்டியதற்காக அத்ரி மஹரிஷியின் ஆச்ரமத்தின் மேல்புறத்தில் கடுமையான தபஸ் செய்தாள்.
கங்காதேவியும் பரமேச்வரருக்கு ப்ரியம் செய்ய வேண்டுமென்ற விருப்பத்துடன் நதிரூபமாகவே வந்தாள்.
அப்பொழுது வந்தவர்களான கெளதமர் முதலிய மஹரிஷிகளும், அத்ரி முனிவர் முதலியவர்களும் கங்காதேவியைப் பூஜித்தார்கள். கங்காதேவியும் அங்கேயே வாஸம் செய்தாள். எல்லோரும் கேட்கும்படியாகவே கங்காதேவியானவள் பார்வதியை ஸமாதானம் செய்தாள். ஆனால் முடியவில்லை.
பரமெச்வரனே நேரில் ஆவிர்பவித்து “ ஹே கல்யாணீ “ என்று ஆஹ்வானம் செய்தார். அது முதல் பகவானும் மேற்குமுகமாக இருந்தார். பார்வதியும் அதுமுதல் கல்யாணீ என்ற நாமதேயத்தை அடைந்தாள். ஸ்ரீஸ்வரூபிணியான பார்வதியும் தபஸ் செய்யும் காரணமாக அங்கு வஸித்து வந்தாள்.
அதனால் சிவசைலம், ஸ்ரீசைலம் என்ற பெயரையும் அடைந்தது.
இவ்வாறு சிவசைலநாதர் மேற்குமுகமாக இருப்பதம் காரணமும், தேவிக்கு கல்யாணி என்ற பெயரை ஈசுவரன் கொடுத்ததும் விபரமாக சொல்லப் பட்டது. மேலும் எதைக் கேட்க விரும்புறீர்கள்’ என்று ஸூதர் சொன்னார்.

           ஏழாவது அத்யாயம் முற்றும்.