Wednesday, July 4, 2012

தாம்ரபரணி - 4

தாம்ரபரணி - 4
தாம்ரபரணியில் தீர்த்த யாத்திரை
தாம்ரபர்ணி நதியானவள் பொதிகை மலையிலுள்ள குப்த ஸ்ருங்கம் எனப்படும் கொடுமுடியிலிருக்கும் குஹையிலிருந்து உற்பத்தியாகி
முதலில் பூர்வ வாகினியாக ( கிழக்கு  திசையில் ) பாய்ந்து கலம்பகர்த்தம் என்று அழைக்கப் படும் பெரிய தடாகத்தில் அருவியாக விழுகிறாள்.
இந்த  கலம்பகர்த்தம் தான் புகழ் பெற்ற பாண  தீர்த்தம் ஆகும்.
இதன் பெயர் காரணத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
முற்காலத்தில் த்ரிபுரர்கள் என்னும் கொடிய அசுரர்களால் உலகம் துன்புற்ற பொழுது பரமேஸ்வரன் மிகவும் கோபம் கொண்டு பூமியை ரதமாகவும் பிரம்மாவை சாரதியாகவும்  மேரு மலையை வில்லாகவும் விஷ்ணுவைப் பாணமாகவும் தரித்து அவர்களை வதம்  செய்தார். திரிபுர சம்ஹாரம் ஆன  பின்னும் பாணத்தின் கோபாக்னி குறையாமல் தகித்துக் கொண்டு இருந்ததால் ருத்ர மூர்த்தியானவர் அதை உஷ்ண சமனத்திற்காக கலம்பகர்த்த தடாகக் குழியில் வைத்தார்.
அந்தக் குழியில் மிகுந்த வெப்பத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்த பாணத்தின் மீது பெரும் வெள்ளமாக தாம்ரபர்ணி தேவியானவள் பாய்ந்து அதன் தாபத்தை தீர்த்தாள். ஸ்ரீ நாராயணன் பாண ரூபம் பெற்று தாம்ரபர்ணியால் ஆராதிக்கப் பட்டதால் பாண தீர்த்தம் என்று புகழ் பெற்றது.
இந்த பாண  தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணுவோர் ஸ்ரீ நாராயணனுடைய அருளைப் பெறுகின்றனர் என்றும் பிரயாகை முதலான பற்பல புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் தங்களின் சுத்திக்காக ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் இங்கு வருகின்றன, என்றும் ஹயக்ரீவ முனிவரின் வாக்காக தாம்ரபர்ணி மாஹாத்மியம் கூறுகிறது.
 

தாம்ரபரணி-3

தாம்ரபரணி-3
பின்னர் உரிய காலம் வந்தவுடன் நதி ரூபம் அடைந்து அகஸ்திய முனிவருடன் புறப்பட்டு கிரமமாகப்  பல புண்ணிய தீர்த்தங்களை உருவாக்கி சமுத்ர ராஜனோடு சேர்ந்தாள்.
பகீரத மகாராஜாவின் விஷயத்தில் கங்கா தேவியானவள் தேவ லோகத்தை விட்டு பூலோகம் வந்தது போல லோக மாதாவான ஸ்ரீ தாம்ரபர்ணி தேவியானவள் பாரத பூமியின் தென் திசையில் எழுந்தருளி  ஸமஸ்தமான ஜனங்களின் பாபத்தையும் தாகத்தையும் போக்குகிறாள்.
இந்த நதி தேவியின் சரிதத்தை கேட்டவர்களும் படித்தவர்களும் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைகின்றனர், என்று சூத பௌராணிகர் கூறினார்.
 

தாம்ரபரணி - 2

தாம்ரபரணி - 2
 உடனே சிவபெருமான் உலகச் சமன் செய்யும் பொருட்டு அகஸ்திய முனிவரையும் லோபாமுதிரையையும் தென் திசை செல்லுமாறு பணித்து கல்யாண கோலத்தை அங்கே காணலாம் என்றும் உறுதி அளித்தார்.
முன்பு பராசக்தியால் அளிக்கப் பட்டதும், திருமண வைபவத்தில் பார்வதியால் தோள் மாலையாக அணிவிக்கப் பட்டதுமான தாமிரை மாலையை சிவன் அகஸ்தியரிடம் அளித்தார்.
அந்த மாலையை அகஸ்தியர் பெற்றுக் கொண்டதும், அது ஒரு பெண்ணாக மாறியது. அங்கு கூடியிருந்த தேவர்கள் பூமாரி பெய்து, தாமிரை மாலையிலிருந்து தோன்றியதால் தாமிரைபர்ணி என்றும் நல்ல அருண சிவந்த வர்ணமுள்ளதால் தாம்ரபர்ணி என்றும் பலவாறு புகழ்ந்து போற்றினர்.
மேலும் அந்த தாம்ரபர்ணி  தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும் உரிய காலத்தில் நதி உருவம் பெற்று சிறந்த மேன்மையை உண்டாக்குவாள்  என்றும் ஈஸ்வரன் அருளிச் செய்து அவளையும் தென் திசைக்கு அழைத்து செல்லுமாறு அகஸ்தியருக்கு உத்தரவிட்டார்.
அகஸ்தியரும் சிவனை வலம்  வந்து கைலாச பர்வதத்திலிருந்து  புறப்பட்டு மலைய பர்வதம் என்னும் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு மலைய பர்வத ராஜன் தனது மனைவி நந்த தேவியுடன் சிறப்பாக வரவேற்று பூஜைகள் செய்தான். முனிவரின் உத்தரவுப்படி தாம்ரபர்ணி தேவியை தன் புத்திரியாக ஸ்வீகாரம் செய்து கொண்டு வளர்த்து வந்தான்.

 

Tuesday, July 3, 2012

தாம்ரபரணி -1

தாம்ரபரணி -1
தக்ஷ பிரஜாபதியின் புதல்வியாக இருந்த தாக்ஷாயணி தக்ஷன் செய்த சிவ அபராதத்தால் தக்ஷ யாகத்தில் சரீரத் த்யாகம் செய்தாள். மறுபடியும் ஹிமவானின் மகளாக பார்வதியாக அவதாரம் செய்து பரமேஸ்வரனை மணம் செய்யும் பொருட்டு ஸ்ரீ புர  தேவியான பரா சக்தியை  இடைவிடாது ஆராதனை செய்து வரும்போது  பராசக்தி அம்பிகை முன் தோன்றி ஒரு தாமிரை புஷ்ப மாலையை கொடுத்து அந்த மாலையால் உலக நன்மை ஏற்படும் என்று வாழ்த்தி அருளினாள். பின்னர் பார்வதி கல்யாண வைபவம் தொடங்கியது.
அதைக் காண அகஸ்திய முனிவரும் தன்  பத்தினியான லோபாமுத்திரையுடன் வந்திருந்தார். உலகம் முழுவதும் அங்கே  கூடி இருந்ததால் தென் திசை உயர்ந்தது.

தாம்ரபரணி

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் இன்று தென் பொதிகை மலையின் ஆபரணமாம் தாம்ரபரணி நதியைப் பற்றி சில விஷயங்கள் எழுத நினைக்கிறேன். 
பல பெரியவர்கள் நடந்த முறையினைப் பின்பற்றி நாமும் நடக்க இறைவனின் துணையை நாடுவோம்.

சிறந்த தவ சீலரும் பௌராணிகர்களில்  சிறந்தவருமான சூத மாமுனிவர்,
ஒரு சமயம் பாரத பூமி முழுவதும் சஞ்சாரம் செய்து அநேக ஆலயங்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் தரிசித்து பின்னர் நைமிசாரண்யம் என்னும் சௌனகாதி முனிவர்கள் கூடி இருந்த  இடத்தை அடைந்தார்.  அங்கு அந்த தவ சீலர்கள் கேட்டுக் கொண்ட படி தனது யாத்திரை விவரங்களை தெரிவிக்கும் பொழுது அதிசய நதியான தாம்ர பரணியை ப்பற்றி கூறினார்.. 



Wednesday, February 15, 2012

அரசு

தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல் படவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். மின்பற்றாக்குறை தீரவில்லை. சென்னை தவிர மற்ற இடங்களில் பல மணிகள் மின் வெட்டு ஏற்படுகிறது. இலவச மின்சாரம் தேவையானவர்களுக்கு மட்டும் வழங்கினால் பொது மக்களுக்கு இன்னும் அதிக அளவு மின்சாரம் கொடுக்க முடியும்.
தேவையில்லாமல் கூடங்குளம் பிரச்னை நீடித்துக் கொண்டே போனால் மின்பற்றாக்குறை சமாளிக்க முடியாமல் போகும்.
சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள பல வசதியான கல்லூரிகளையும் பெரிய அளவு வணிக நிறுவனங்களையும் சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வற்புறுத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வேண்டும். தெரு விளக்குகளுக்கும் சூரிய ஒளி பயன் படுத்தினால் பொது மக்களுக்கு மின்சாரம் அதிக அளவில் கொடுக்க முடியும்.
கடலில் வீணாக சென்று அடையும் மழை நீரை சரியான முறையில் சேமிக்க திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும்.
இலவச மடிக்கணினி களுக்குப் பதிலாக இந்தியாவில் தயாராகும் குறைந்த விலை டேபிலேட் என்று சொல்லப் படும் கணினிகளை வழங்கலாம்.
அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்.
எல்லோருக்கும் இருப்பிடங்களின் அருகிலேயே அரசின் மருத்துவமனைகள் இருக்கும்படி செய்ய வேண்டும்.

Wednesday, January 4, 2012

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.