Saturday, December 19, 2015

Tuesday, December 1, 2015

லலிதா நவரத்ன மாலை

ஞான கணேசா சரணம்! சரணம்! ஞான ஸ்கந்தா சரணம்! சரணம்!
ஞான புரீசா சரணம்! சரணம்! ஞானாம்பிகையே சரணம்! சரணம்!
ஞான ஸத்குரோ சரணம்! சரணம்! ஞானானந்தா சரணம்! சரணம்!

                                                  காப்பு
               ஆக்கும் தொழில் ஐங்கரனாரற்ற நலம்
                                   பூக்கும் நகையாள் புவனேச்வரிபால்
                சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
                               காக்கும் கணநாயக வாரணமே!

         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
          மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                            மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                                   வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்
                                 கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவம்
                               பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாழ் வயிரப்
                          பகைவர்க்கெமனாக எடுத்தவளே!
வற்றாத அருட்சுனையே வருவாய்
                                 மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

                                          நீலம்
 மூலக்கனலே சரணம்! சரணம்!
                       முடியா முதலே சரணம்! சரணம்!
கோலக்கிளியே சரணம்! சரணம்!
                      குன்றாத ஒளிக்குவையே சரணம்!
நீலத்திருமேனியிலே நினைவாய்
                  நினைவற்றளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
                    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                         முத்து
முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
                        முன் நின்றருளும் முதல்வீ சரணம்!
வித்தே விளைவே சரணம்! சரணம்!
                  வேதாந்த நிவாஸினியே! சரணம்!
 தத்தேறிய நான் தனயன் தாய் நீ
                 சாகாத வரம் த்ரவே வருவாய்!
மத்தேறுததிக்கிணை வாழ்வடையேன்
                     மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                     பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம்
                      அன்னை நடம்செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிவாரோ
             தேம்பொழிலாமிது செய்தவளாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
               எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தாள்
மந்திர வேத மயப்பொருளானாள்
                           மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                          மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே!
                 கருதக்கிடையாக் கலையானவளே!
பூணக்கிடையாப் பொலிவானவளே!
              புனையக் கிடையாப் புதுமைத்தவளே!
நாணித்திரு  நாமமும் நின் துதியும்
                   நவிலாதவரை நாடாதவளே!
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
                         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                    மரகதம்
மரகதவடிவே சரணம்! சரணம்!
                   மதுரிதபதமே சரணம்! சரணம்!
ஸுரபதி பணியத்திகழ்வாய் சரணம்!
               ச்ருதிஜதிலயமே இசையே சரணம்!
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
                          அவரருள் பெற அருளமுதே சரணம்!
வரநவநிதியே சரணம்! சரணம்!
                          மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                     கோமேதகம்
பூ மேவிய நான் புரியும் செயல்கள்
                      பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெய சக்தி எனத்
                     திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
                                குழல்வாய் மொழியே தருவாய்! தருவாய்!
மாமேருவிலே வளர்கோகிலமே
                              மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                         பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
                   ராகவிலாஸ வியாபினி அம்பா
 சஞ்சல ரோக நிவாரணி வாணி
                      சாம்பவி சந்த்ரகலாதரி ராணி
அஞ்சனமேனி அலங்க்ருத பூரணி
                   அம்ருத ஸ்வரூபிணீ  நித்ய கல்யாணி
மஞ்சுளமேரு ஸ்ருங்க நிவாஸினி
                        மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                        வைடூரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
                                மருளப்  பறையா  றொலியொத்தவிதால்
நிலையற்றளியேன் முடியத்தகுமோ
                           நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற் றசைவற்றநுபூதிபெறும்
                             அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்!
                         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                             பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
           நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
             சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே!

   மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
     மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                             மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

ஜெய சிவரமணீ குருகுஹ ஜனனீ - ஜெய மனவன ஹரிணீ
ஜெய ஓம் ஸ்ரீமாதா மாதா - ஜெய ஜெய ஜகன் மாதா
மாதா - ஜெய ஓம் ஸ்ரீமாத மாதா - ஜெய ஜெய ஜகன் மாதா !
                              ஸத்குரு பாதம் துணை