Saturday, December 18, 2010

ஆலயம்

எல்லாம் வல்ல சத்குருவின் அருளாலே நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றோம். தரிசனம் நன்றாக இருந்தது. ஏற்கனவே பல பதிவர்களால் சிதம்பரம் கோவிலில் பிரச்னைகளைப் பற்றி பதிவு எழுதப் பட்டு அதைப் படித்தோம். இப்போது நம் கருத்தைப் பதிவு செய்ய இந்தப் பதிவு.
எல்லாக் கோவில்களையும் அரசு தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வர நினைப்பது கோவில்களை சரிவரப் பராமரிப்பதற்காக இல்லை. பல கோவில்களின் நிலையைப் பார்த்தாலே இது புரிகிறது. கோவில்களில் உள்ள சக்தி எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்று தான் கோவில்கள் உள்ளன. அதற்கு கோவில்களின் சரியான பராமரிப்பு மிகவும் முக்கியம்.

Saturday, August 14, 2010

மானா!

மானா
இந்திய நாட்டின் இந்த எல்லையில் உள்ள கடைசி இடம் மானா. இது பத்ரி நாத்தின் அருகில் உள்ளது. இங்கு வேத வியாசர் குகை, கணேச குகை உள்ளன. வியாசர் மகாபாரதத்தை இந்த குகையிலிருந்து சொல்ல விநாயகர் கணேச குகையிலிருந்து எழுதினாராம். மற்றும் சரஸ்வதி உற்பத்தி ஆகும் இடத்தையும் தரிசித்து மகிழ்ந்தோம்.

பத்ரிநாத்

பத்ரிநாத்
ஜூலை 21 ம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு த்ரியுக் நாராயணன் என்ற இடத்தில் தரிசனம் செய்தோம். இங்கு த்ரேதா யுகம். த்வாபரயுகம், கலியுகம் மூன்று யுகங்களிலும் விஷ்ணு இங்கே இருப்பதால் த்ரியுக் நாராயணன் என்ற பெயர். இங்கு சிவன் பார்வதி கல்யாணத்தில் இருந்த அக்னி இருக்கிறது. பிரம்ம குண்டம், ருத்ர குண்டம், விஷ்ணு குண்டம், சரஸ்வதி குண்டம் என்ற நான்கு குண்டங்கள் உள்ளன. இவற்றில் பிரம்ம, ருத்ர குண்டங்களில் ஸ்நானமும் விஷ்ணு குண்டத்தில் ஆசமனமும் சரஸ்வதி குண்டத்தில் தர்ப்பணமும் செய்ய வேண்டுமாம். விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி தரிசனம் செய்து புறப்பட்டு கேதார் நாத் சுவாமி பனிக் காலங்களில் இருக்கும் இடமான ஓம்காரேஸ்வர் ( ஊகிமத்) என்று சொல்கிறார்கள், தரிசனம் செய்து மாலை 5 .30 மணியளவில் மாயாபூர் என்ற இடத்தில் இரவு தங்கினோம். ஜூலை 22 காலை 4 மணிக்கு கிளம்பி ஜோஷிமட் வழியாக 8 மணிக்கு பத்ரிநாத்தை அடைந்து வெந்நீர் குண்டங்களில் குளித்து பத்ரிநாதரை தரிசனம் செய்தோம்.

கேதார்நாத்

கேதார்நாத்
ஜூலை 19 ம் தேதி காலை 6 மணிக்கு நேதாலாவிலிருந்து புறப்பட்டு உத்தரகாசி என்ற இடத்தில் சிவன் கோவிலில் தரிசனம் செய்தோம். மாலை 6 மணிக்கு குப்த காசி என்ற இடத்தில் சிவன் கோவிலை தரிசனம் செய்தோம். முன்பு சிவன் காசியில் காணப் படாமல் இங்கு காணப் பட்டதால் இந்த இடத்திற்கு குப்த காசி என்று பெயர். இந்த இடத்தில் கங்கையும் யமுனையும் இரண்டு கோமுகிகள் வழியாக வருகின்றன. மாலை 7 .30 மணிக்கு ராம்பூர் என்ற இடத்தை அடைந்து இரவு தங்கினோம். ஜூலை 20 ம் தேதி காலை 5 .30 மணிக்கு கிளம்பி கௌரி குண்டம் என்ற இடத்தில் வெந்நீர் குண்டத்தில் குளித்து 14 கி. மீ. நடந்து 11 .30 மணிக்கு கேதார் நாத்தை சென்று அடைந்தோம். மந்தாகினி நதியில் ப்ரோக்ஷித்துக் கொண்டு கேதார் நாத்தில் தரிசனம் செய்து மீண்டும் நடந்து கௌரி குண்டத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து அடைந்து இரவு 8 மணியளவில் ராம்பூர் சென்று அடைந்தோம்.

கங்கோத்ரி

கங்கோத்ரி
ஜூலை 18 ம் தேதி காலை 5 . 30 மணிக்கு மாடலியிலிருந்து புறப்பட்டு கங்கநாணி என்ற இடத்தில் வெந்நீர் குண்டத்தில் குளித்து கங்கோத்ரியை 11 மணிக்கு சென்று அடைந்தோம். அங்கு நன்றாக ஸ்நானம் செய்து கங்கையைக் கொஞ்சம் கேன்களில் எடுத்துக் கொண்டு நேதாலா என்ற இடத்தை மாலை 5 .30 மணியளவில் அடைந்தோம்.

Tuesday, August 3, 2010

யமுனோத்ரி

ஹரித்வாரில் இருந்து காலை 9 மணியளவில் புறப்பட்டு raiwala , டேஹ்ரடுன், முசௌரி ,பர்கோட் வழியாக ராணாசட்டி என்ற இடத்தை மாலை 7 மணியளவில் அடைந்தோம்! வழியில் முசௌரியில் ஆப்பிள், பேரிக்காய், பிஸ்கட், மாத்திரைகள் வாங்கிக் கொண்டோம். விடுதியில் தங்கி இரவு சாப்பிட்டு உறங்கினோம். இரவு நல்ல மழை, காலையிலும் தொடர்ந்தது! இருப்பினும் மழை கோட் 15 ரூபாய்க்கு கிடைத்ததை வாங்கிக் கொண்டு 6 மணியளவில் கிளம்பினோம்! ஹனுமான் சட்டி என்ற இடத்தைக் கடந்து செல்லும்போது மழையால் மலையில் சரிவு ஏற்பட்டு மண் நெகிழ்வு வேறு ஏற்பட்டிருந்தது. பல வாகனங்களின் ஓட்டுனர்களின் முயற்சியால் போக்குவரத்து தொடங்கியது. ஜானகி சட்டி என்ற இடத்தை 8 மணியளவில் அடைந்தோம். இங்கிருந்து 7 கி.மீ. நடையாகவோ, குதிரையிலோ. டோலி மூலமாகவோ தான் யமுனோத்ரியை அடைய முடியும். செங்குத்தான மலைப் பாதையில் 5 கி.மீ. வரை நடந்தும் 2 கி.மீ. வரை குதிரையிலுமாக யமுனோத்ரியை அடைந்து அங்கு உள்ள வெந்நீர் குண்டத்தில் ஸ்நானம் செய்து யமுனோத்ரி கோவிலில் தரிசனம் செய்து மதியம் 2 மணியளவில் மீண்டும் ஜானகி சட்டியை அடைந்து சாப்பிட்டு எல்லோரும் வருவதற்காக காத்திருந்து மாலை 4 ,மணியளவில் கிளம்பி இரவு 10 மணியளவில் மாடலி என்ற இடத்தில் இரவு தங்கினோம்!

யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் -1

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் 13 ஜூலை அன்று இரவு சென்னையிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் புறப்பட்டு 15 ஜூலை அன்று காலை டெல்லியை அடைந்து அன்று இரவு முசௌரிஎக்ஸ்ப்ரஸில் 16 ஜூலை காலை ஹரித்வாரை அடைந்தேன்! அங்கு கங்கையில் ஸ்நானம் செய்தேன்! காலை 9 மணியளவில் ஹரித்வாரில் இருந்து வேனில் 13 பேருடன் யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் தரிசனத்திற்காக கிளம்பினோம்! 11 பேர் ஆந்த்ராவிலிருந்தும், 2 பேர் உத்திரப்ரதேசத்திலிருந்தும் வந்திருந்தார்கள்!

எங்கள் பயணம் யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத், இந்த வரிசையிலேயே அமைந்தது!

Wednesday, July 28, 2010

இமய திருத்தலப் பயணங்கள்

எல்லாம் வல்ல சத்குருவின் திருவருளால் ஜூலை 13ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் தலங்களுக்கு சென்று வந்தேன்! விபரமாக எழுதவும் குருவின் அருளே துணை நிற்க!

Wednesday, May 5, 2010

நவக்ரஹ துதி

கணபதி காப்பு
முதல்வன் கணபதி முந்தி நின்றிந்தப்
பதமார் நவக் கோள்பாவினைப்படிப்போர்
நிதமும் செல்வம் நிலவும் எல்லா
இதமார் நலமும் எய்திட காப்போம்!

சூரியன்
சூரியன் என்னும் சோதிடச் சுடரொளி த்தேவன்றானை ப்
பாரினிற்ப் பற்றி என்றும் பாங்குடன் போற்றி செய்யும்
சீருடை மாந்தர் யாரும் செல்வமும் புகழும் சேயும்
சேர்ந்திடப் பெற்று நன்மை துய்த்தவன் அருள் கொள்வாரே!

சந்திரன்
வாரமாம் மொற் சோமன் விளங்கிடும் நாளும் ஒன்று
சேர்வே உள்ளத் தந்தச் சதிர் மதிப் பாதம் போற்றின்
கோரிடும் வெற்றியெல்லாம் கொள்ளுவர் மக்கள் என்றும்
ஆர்வமாய் அயன் மேல் பக்தி ஆற்றலும் கடமையாமே!

செவ்வாய்
ஆமேநம் செயல்கள் யாவும் அளவிலா மேன்மை சேரும்
ஆமேநம் வாக்கின் வாழ்த்து அனைவரும் வியக்கும் வண்ணம்
ஆமே பன்னவனும் அந்த அருங் கிரக செவ்வாயதனால்
ஆமேநம் பாதுகாப்பும் அச்செவ்வாய் அருளதாலே!

புதன்
செய்தலால் ஆகும் பொன்னும் செய்யாத பெருமையெல்லாம்
செய்பவன் புதனே யாதலால் சீருடன் அவனைப் போற்றி
செய்பவர் என்றும் பூவில் செவ்வராய்ப் பேரு யாவும்
எய்திடப் பெறுவர் புதனில் எழிலடி காப்பதாமே!

வியாழன்
குருவிலா வித்தை பாழாம் குணமிலாப் பெண்டிர் பாழாம்
பெருமதி குருவாம் வியாழன் பூசையை ப் புரிவோர் யாரும்
அருநிதிக் கல்வி ஞானம் அனைத்து நல்வித்தை குணமும்
உறுதியாய் பெறுவராமல் உயர்குரு சரண் என்போமே!

சுக்ரன்
சுக்கிரன் கடைக்கண் பார்வை சூழ்ந்திட பெற்றவர்க்கு
அக்கரை ஏதுமில்லை அனைத்துமே அவர்க்கே சொந்தம்
பக்தியாய் பணிவோர்க்கு எல்லாம் புரிகுவான் அருளாம் மாரி
சக்தி சேர் சுக்கிரன்றனை சந்ததம் துணை கொள்வோமே!

சனி
சனித்த மானிடர்கள் நல்ல சென்மமாய் வாழ்வதற்காகத்
தனிப்பெரும் மகிமை வாய்ந்த தகை சுடர் மகனாம் காரி
எனப்புகல் சனியின் பாதம் இறைஞ்சுதல் வேண்டும் வேண்டும்
இனிப்புறக் காக்கச் சனியை எண்ணி நாம் போற்றுவோமே!

ராகு
அமரர்கள் அமுதம் கண்ட அத்தினம் புகழே கொண்ட
அருங்கிரகமாகும் ராகு அடியினை நாளும் ஏற்றி
அகிலமேல் நன்கு வாழ்வோம் அவனருள் நமக்கேயாகும்
புகலரும் கீர்த்தி செம்மல் புனிதரும் ராகு போற்றி!

கேது
சேதுவிற் சென்று மூழ்கி சிவராமன் பதம் போற்றி
மேதகு மகப்பேறடையும் மாபெரும் பாக்கியத்தை
கேதுவாம் கிரஹத்தை பணிவோர் கை வரப் பெறுவாராமால்
தீதது கேதுவே நின் துதி செயும் தமியேற்கருள்வாயே!

Thursday, April 1, 2010

பிரார்த்தனை பலித்தது!

பிரார்த்தனை பலித்தது
இறைவனிடம் நான் மிகுந்த பலம் வேண்டுமென்று கேட்டேன்!
அவர் எனக்கு சில கஷ்டங்களை உண்டாக்கி என்னைப் பலமுள்ளவனாக்கினார்!
மிகுந்த அறிவாற்றல் வேண்டுமென்று கேட்டேன்!
பல பிரச்சினைகளை உண்டாக்கி அவற்றினை தீர்க்கும் வாய்ப்பினையும் உருவாக்கித் தந்தார்!
குறையாத வளமைகள் வேண்டுமென்று கேட்டேன்!
தளராமல் உழைப்பதற்கு ஆற்றல் மிகு மூளையைத் தந்தார் இறைவன்!
அஞ்சா நெஞ்சம் வேண்டுமென்று பிரார்த்தித்தேன்!
ஆபத்துகளை உருவாக்கி அவற்றைக் கடக்கும் திறமையைத் தந்தார்!
அன்பு வேண்டுமென்று வேண்டினேன்!
துன்பத்தில் உழலும் மக்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பினைத் தந்தார்!
நான் பல சலுகைகளைக் கேட்டேன்!
அவர் பல வாய்ப்புகளைத் தந்தார்!
நான் விரும்பிக்கேட்டது எதையும் பெறவில்லை!
ஆனால் என் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டன!
என் பிரார்த்தனை பலித்தது!


இது என்னால் எழுதப்படவில்லை! எழுதியவருக்கு நன்றிகள்!