Saturday, August 14, 2010

மானா!

மானா
இந்திய நாட்டின் இந்த எல்லையில் உள்ள கடைசி இடம் மானா. இது பத்ரி நாத்தின் அருகில் உள்ளது. இங்கு வேத வியாசர் குகை, கணேச குகை உள்ளன. வியாசர் மகாபாரதத்தை இந்த குகையிலிருந்து சொல்ல விநாயகர் கணேச குகையிலிருந்து எழுதினாராம். மற்றும் சரஸ்வதி உற்பத்தி ஆகும் இடத்தையும் தரிசித்து மகிழ்ந்தோம்.

பத்ரிநாத்

பத்ரிநாத்
ஜூலை 21 ம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு த்ரியுக் நாராயணன் என்ற இடத்தில் தரிசனம் செய்தோம். இங்கு த்ரேதா யுகம். த்வாபரயுகம், கலியுகம் மூன்று யுகங்களிலும் விஷ்ணு இங்கே இருப்பதால் த்ரியுக் நாராயணன் என்ற பெயர். இங்கு சிவன் பார்வதி கல்யாணத்தில் இருந்த அக்னி இருக்கிறது. பிரம்ம குண்டம், ருத்ர குண்டம், விஷ்ணு குண்டம், சரஸ்வதி குண்டம் என்ற நான்கு குண்டங்கள் உள்ளன. இவற்றில் பிரம்ம, ருத்ர குண்டங்களில் ஸ்நானமும் விஷ்ணு குண்டத்தில் ஆசமனமும் சரஸ்வதி குண்டத்தில் தர்ப்பணமும் செய்ய வேண்டுமாம். விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி தரிசனம் செய்து புறப்பட்டு கேதார் நாத் சுவாமி பனிக் காலங்களில் இருக்கும் இடமான ஓம்காரேஸ்வர் ( ஊகிமத்) என்று சொல்கிறார்கள், தரிசனம் செய்து மாலை 5 .30 மணியளவில் மாயாபூர் என்ற இடத்தில் இரவு தங்கினோம். ஜூலை 22 காலை 4 மணிக்கு கிளம்பி ஜோஷிமட் வழியாக 8 மணிக்கு பத்ரிநாத்தை அடைந்து வெந்நீர் குண்டங்களில் குளித்து பத்ரிநாதரை தரிசனம் செய்தோம்.

கேதார்நாத்

கேதார்நாத்
ஜூலை 19 ம் தேதி காலை 6 மணிக்கு நேதாலாவிலிருந்து புறப்பட்டு உத்தரகாசி என்ற இடத்தில் சிவன் கோவிலில் தரிசனம் செய்தோம். மாலை 6 மணிக்கு குப்த காசி என்ற இடத்தில் சிவன் கோவிலை தரிசனம் செய்தோம். முன்பு சிவன் காசியில் காணப் படாமல் இங்கு காணப் பட்டதால் இந்த இடத்திற்கு குப்த காசி என்று பெயர். இந்த இடத்தில் கங்கையும் யமுனையும் இரண்டு கோமுகிகள் வழியாக வருகின்றன. மாலை 7 .30 மணிக்கு ராம்பூர் என்ற இடத்தை அடைந்து இரவு தங்கினோம். ஜூலை 20 ம் தேதி காலை 5 .30 மணிக்கு கிளம்பி கௌரி குண்டம் என்ற இடத்தில் வெந்நீர் குண்டத்தில் குளித்து 14 கி. மீ. நடந்து 11 .30 மணிக்கு கேதார் நாத்தை சென்று அடைந்தோம். மந்தாகினி நதியில் ப்ரோக்ஷித்துக் கொண்டு கேதார் நாத்தில் தரிசனம் செய்து மீண்டும் நடந்து கௌரி குண்டத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து அடைந்து இரவு 8 மணியளவில் ராம்பூர் சென்று அடைந்தோம்.

கங்கோத்ரி

கங்கோத்ரி
ஜூலை 18 ம் தேதி காலை 5 . 30 மணிக்கு மாடலியிலிருந்து புறப்பட்டு கங்கநாணி என்ற இடத்தில் வெந்நீர் குண்டத்தில் குளித்து கங்கோத்ரியை 11 மணிக்கு சென்று அடைந்தோம். அங்கு நன்றாக ஸ்நானம் செய்து கங்கையைக் கொஞ்சம் கேன்களில் எடுத்துக் கொண்டு நேதாலா என்ற இடத்தை மாலை 5 .30 மணியளவில் அடைந்தோம்.

Tuesday, August 3, 2010

யமுனோத்ரி

ஹரித்வாரில் இருந்து காலை 9 மணியளவில் புறப்பட்டு raiwala , டேஹ்ரடுன், முசௌரி ,பர்கோட் வழியாக ராணாசட்டி என்ற இடத்தை மாலை 7 மணியளவில் அடைந்தோம்! வழியில் முசௌரியில் ஆப்பிள், பேரிக்காய், பிஸ்கட், மாத்திரைகள் வாங்கிக் கொண்டோம். விடுதியில் தங்கி இரவு சாப்பிட்டு உறங்கினோம். இரவு நல்ல மழை, காலையிலும் தொடர்ந்தது! இருப்பினும் மழை கோட் 15 ரூபாய்க்கு கிடைத்ததை வாங்கிக் கொண்டு 6 மணியளவில் கிளம்பினோம்! ஹனுமான் சட்டி என்ற இடத்தைக் கடந்து செல்லும்போது மழையால் மலையில் சரிவு ஏற்பட்டு மண் நெகிழ்வு வேறு ஏற்பட்டிருந்தது. பல வாகனங்களின் ஓட்டுனர்களின் முயற்சியால் போக்குவரத்து தொடங்கியது. ஜானகி சட்டி என்ற இடத்தை 8 மணியளவில் அடைந்தோம். இங்கிருந்து 7 கி.மீ. நடையாகவோ, குதிரையிலோ. டோலி மூலமாகவோ தான் யமுனோத்ரியை அடைய முடியும். செங்குத்தான மலைப் பாதையில் 5 கி.மீ. வரை நடந்தும் 2 கி.மீ. வரை குதிரையிலுமாக யமுனோத்ரியை அடைந்து அங்கு உள்ள வெந்நீர் குண்டத்தில் ஸ்நானம் செய்து யமுனோத்ரி கோவிலில் தரிசனம் செய்து மதியம் 2 மணியளவில் மீண்டும் ஜானகி சட்டியை அடைந்து சாப்பிட்டு எல்லோரும் வருவதற்காக காத்திருந்து மாலை 4 ,மணியளவில் கிளம்பி இரவு 10 மணியளவில் மாடலி என்ற இடத்தில் இரவு தங்கினோம்!

யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் -1

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் 13 ஜூலை அன்று இரவு சென்னையிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் புறப்பட்டு 15 ஜூலை அன்று காலை டெல்லியை அடைந்து அன்று இரவு முசௌரிஎக்ஸ்ப்ரஸில் 16 ஜூலை காலை ஹரித்வாரை அடைந்தேன்! அங்கு கங்கையில் ஸ்நானம் செய்தேன்! காலை 9 மணியளவில் ஹரித்வாரில் இருந்து வேனில் 13 பேருடன் யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத் தரிசனத்திற்காக கிளம்பினோம்! 11 பேர் ஆந்த்ராவிலிருந்தும், 2 பேர் உத்திரப்ரதேசத்திலிருந்தும் வந்திருந்தார்கள்!

எங்கள் பயணம் யமுனோத்ரி கங்கோத்ரி கேதார்நாத் பத்ரிநாத், இந்த வரிசையிலேயே அமைந்தது!