Monday, March 9, 2020

அன்னை மங்களம்


அன்னை மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கனந்த கோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈச்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்

உருகாத நெஞ்சம் உன்பால் உருகிற்றெவ்வுருக்கத்தாலும்
பெருகாத கண்ணீர் ஆறாய்ப்பெறுகிற்றப் பெருக்கால் முன்னம்
சருகாத ஞானம் பூத்து தழைத்து இன்பக்கனியாய்க் காணப்
பருகாத மதுரத்தேனைப் பருகினேன் பயன் பெற்றேனே

எப்பிறப்பும் எய்தொணா இயற்கையான ஸித்தியை
இப்பிறப்பில் என் கரத்திசைந்தளிக்கும் சக்தியாம்
பஞ்சபூத பேதமாய் ப்ரபஞ்சமாய் ப்ரசண்டமாய்
விஞ்சினாள் எனக்கு யோக வீறளித்த தன்மையால்

தாழ்விலாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியிற் கலந்தலந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க் கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்தியற்கையான ஸித்தியைத்
தந்து ஞான மூர்த்தியாய்த் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெல்லாம் விளங்கவும்

ஞானதீபம் ஏற்றி (எங்கும்) என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்ம சக்தி வாழ்க வென்று ஸந்ததம் கொண்டாடுவோம்

அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கனந்த கோடி மங்களம்.

1 comment: