Sunday, August 16, 2009

ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம்

காலமெல்லாம் பாலனவன் கணேசன் திருவுடையோன்
சூலமொடு ஐம்முகத்தோன் சுரனோடு நான்முகனும்
சீலமிகு திருமாலும் தேடி வரும் கரிமுகத்தோன்
மூல வினை மலை நீக்கி முழு ச்செல்வமருள் புரிவான்!

கவியறியேன் வசனமோ கண்டறியேன் யென்
செவியறியா தொலியெதையும் செப்பியுமறியேன் பொருள்
புவி புகழும் ஆறுமுகா உன் புனித முகம் நோக்குங்கால்
தெவிட்டாத தேன் தமிழ்ச்சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து

உலகமெலாம் காக்கும் கந்தா! உளம் மகிழும் ஒளி உருவே!
நலமுடை சான்றோர் நெஞ்சில் நாளெல்லாம் வாழும் தேவே!
பலர் போற்றும் சிவன் மைந்தா! பக்தி மிகு அந்தணர் தம்
குலதேவா! வேதத்தின் தத்துவமே! கோல மயில் வாகனனே! பணிகின்றேன்!

செந்திற்கடலுடையோன் சேவடி துணையென்றே
வந்தவர்தம் பிறவி யெனும் வரையிலாக்கடலினையே
கந்தன் திருவருளால் கடந்திடுவர் பராசக்தி
மைந்தன் பதம் பணிவோம் மால் மருகன் சொன்னபடி

ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலையும்
ஆங்கென் அடி பணிந்து அமர்ந்திடுமாம் விந்தை போல
ஏங்கும் கவலையோடு என் முன்னே வந்திட்டால்
நீங்கும் தீங்கென்பான் நெஞ்சிலுறைச் செந்தூரான்

எந்தன் மலை வந்தவர்கள் எந்தை மலை போனவர்கள்
கந்த மலை வந்தவர்கள் கயிலைக்கு வந்தோ ரென்பான்
சிந்தும் ஒளி மதி முகத்தோன் எந்திலுறை ஆறுமுகம்
செந்தாமரை மலரொக்கும் சேவடிகள் தாம் வாழ்க!

எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்க வல்ல
சித்தர் வாழ் கந்த மலை சீரலை வாய் ஓரத்தினில்
புத்தொளி யாய் க்குகையினிலே புனித குகன் வீற்றுள்ளான்
புத்துயிராய் விளங்குமவன் பொன்னடிகள் போற்றிடுவோம்


மாணிக்க க்கட்டிலென்ன மாசறு பொற்கொயிலென்ன
நாணக்கண்டிடலாம் நாற்கோடி ரவி ஒளியும்
வானத்து தேவ தேவன் வரம் வேண்ட த்தான் தருவான்
காணக்கண் குளிரும் கார்த்திகேயன் தாள் பணிவோம்


செந்நிறப் பாத மலர் சிந்தும் தேனமுத மலர்
இன்னொலி பாத ரசம் இன்ப மயமாக்கும் மனம்
உன்னினைவில் நினைவாக உலவி வரும் வண்டெனவே
என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே

தங்க மய ஒளி வீசும் தக தகக்கும் பட்டாடை
அங்க அசைவினிலே அரை ஞாணும் ஒட்டியாணம்
கிண்கிணி க்கும் சலங்கை ஒலி கிறங்க வைக்கும் இடுப்பழகும்
எங்கும் ஒளி வடிவாம் எழில் முருகன் தாள் பணிவோம்


மங்கை குறவள்ளி தனை மால் மருகனணைத்ததுமே
கொங்கை யழகிட்ட குங்குமும் மார்புறைந்தே
அங்கும் செவ்வொளி வீச அன்பர் தமை யாட்கொள்வான்
தங்க நிற மார்புடையோன் தாரகனை க்கொன்றவனாம்


சூரபதுமனை க்கொன்றே சூரன் பகை தான் வென்றே
தூர யமனை ஓட்டி துண்டித்த யானை தந்தம்
பாருலகம் படைத்தவனை பணிய வைத்த வேலவனைச்
சேரும் உயிர் காக்க ச்செந்தூரான் கரம் துணையே

பனிக்கால ச்சந்திரனும் பருவமெல்லாம் நிறைந்தாலோ
தனித்தாறு முழு மதியின் தண்ணொளி போல் ஆறுமுகம்
தனக்குள்ளே மாசுற்றம் தரணியிலே தோணும் மதி
கனிக்காக வலம் வந்த கந்தனுக்கு நிகராமோ

அன்னப்பறவைகளோ ஆறுமுகா உன் சிரிப்பு
இன்னமுத இதழழகால் இன்சொற்கள் தாம் வருமே
வண்ண மலர்த்தாமரையில் வண்டுலவும் விழி யழகை
என்ன சொல்ல சிவ பாலா! எழில் தாமரை முகனே!

கண்விழிகள் பன்னிரெண்டும் காது வரை நீண்டிருக்கும்
நின் கருணை ப்பெரு வெள்ள நீர்த்துளி தான் கிட்டாதோ!
அன்பரென த்தொழு வோர்க்கு அருள் புரிந்தால் குறைந்திடுமோ!
உன் பார்வை படுமாயின் உய்வேனே உமை பாலா

முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன்
"என்னின்றுதித்த மைந்தா என்றென்றும் வாழ்க"வென
சொன்னதுமே ஆறுமுறை சுக வாழ்வை நிலையாக்கும்
மண்ணுலகின் சுமை தாங்கும் மணிக்கிரீடசிரம் பணிவோம்

மாலை மணியணிகள் மார்பில் அசைந்தாட
கோலமிடு காதணியும் குண்டலமும் தோள் வளையும்
மேலிடை ப்பட்டாடை மேன்மை யொளி வீசிடுமே
வேலன் புரமெரித்தோன் வேத மைந்தா நீ வருக

"இங்கு வா " என்றதுமே இளைய த்திருக்குமரன்
சங்கரி தன் மடியிலிருந்து சங்கரன் கரம் தழுவும்
தங்க நிற இளம் மேனி தவழும் குழந்தை யவன்
திங்கள் முகமாறும் தினமும் பணிந்திடுவேன்

குமரா! ஈசன் திருமகனே! குகனே! திருமயில் வாகனனே!
அமரர் பதியே! ஆறுமுகா! அடியார் துயர்கள் நீக்குபவா!
சமரில் தாரகனை க்கொன்றவனே! சரவண பவனே! வள்ளி மணாளா!
உமையாள் உருவாம் வேல் முருகா! உம்மை ப்பணிந்தோம் காத்திடுவாய்!

புலனடங்கி நினைவிழந்து பொறி கலங்கி கபமடைக்கப்
பலம் நலிந்து செயல் மறந்து பயம் மிகுந்து உடல் நடுங்க
நலம் நசிந்து உயிர் மறைந்து நமனை நாடும் போதினில்
உலகறிந்த துணைகள் வேறு உதவிடுமோ உன்னையல்லால்


"வெட்டு", " பிள", "பொசுக்" கென்று வெஞ்சினமாய் யமதூதர்
திட்ட வரும் கால மதில் திரு மயிலும் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்ட வந்து "அஞ்சேல்" எனத்
தொட்டு க்காத்தருள த்தோன்றிடு வாய் வேலவனே!

உனைப் பணிந்து கேட்கின்றேன் "ஓம் முருகா" என்றுனையே
கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல்
நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில்
துணை புரிவாய் அப்போது தொழுதிடுவேன் இப்போதே!

தாரகன் சிங்கமுகன் தம்பிகளின் தமையனவன்
சூரபத்மன் என்பவனும் சூழும் அண்டமாயிரத்தை
வீரமொடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால்
பாரமன் நோய் நீக்கி ப்பார்த்தருள் வாய் வேலவனே!

உமையாள் திருமகனே! உன்னடியேன் துக்கமென்னும்
சுமையால் தளர்ந்தவன் நான் சுந்தர வடிவேல் கொண்டு
இமையா அமரர் தேவா! ஏழை க்கிரங்கும் வேலா!
உமையன்றி வேறறியேன் உளநோய் நீக்கிடு வாய்!

காசம் காயம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலென்னும்
நாசம் செய்யும் பெரு நோயும் நலிய வைக்கும் பைசாசம்
வாசம் செய்ய என்னுடலில் வந்திட்டால் வேலா உன்
பூசு மலைத்திரு நீற்றால் போக்கிடுவாய் தீவினையாம்

கந்தனை க்காணவே கண்கள், கரங்களும் அவன் பணிக்கே
செந்தில் முருகன் புகழ் செவி படைத்த பயனாகும்
சந்ததமும் அவன் சரிதம் சந்தமொடு வாய்பாடும்
சிந்தனையும் உடல் வாழ்வும் சீரலை வாய் கந்தனுக்கே!

பக்தி நெறி மனிதர்க்கும் பர தத்துவ முனிவர்க்கும்
முக்தி யளித்திடுவர் மும்மூர்த்தி தெய்வங்களாம்
எத்தையுமறிந்திடாத எளிய நிலை ப்பஞ்சமரின்
சித்தமருள் முருகனன்றி சிறியே தையுமறியேனே!

மனைவியொடு மக்களும் மனையில் வாழும் பசுக்களும்
மனிதனோடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும்
நினைந்துமையே வணங்கவும் நித்தமும் துதிக்கவும்
வினைகள் நீங்க வேள்வியை விதிப்படியே நடத்தருள்வீர்!

நெடிய மலை க்கிரௌஞ்ச மதை நினைத்ததுமே வேல் கொண்டே
பொடி செய்த வேலவனே! புண்படுத்தும் நோய்களையும்
கொடிய விட ப்பிராணி யோடு கொத்த வரும் பறவையினம்
கடுதியோட ச்செய்திடுவீர் கைகள் தாங்கும் வேலதனால்

தன் மகன் செய்த பிழை தந்தை தாய் மன்னியரோ?
உன் மகன் நானன்றோ? உலகத்தின் தந்தையே நீ!
தென் பரம் கிரி தேவா! தேவா சேனாதிபதியே!
என் பிழை மலை யெனினும் எளியேனை ப்பொறுத்தருள் வாய்!

கந்தா உன் மயில் போற்றி! கடம்பா உன் வேல் போற்றி!
சிவன் மைந்தா சேவல் போற்றி! மறியாடும் தான் போற்றி!
சிந்தா குலத்தீர் செந்தூரா! சிந்தும் சேவடியும் போற்றி!
வந்தே வரமருள் வாய்! வணக்கம்! வணக்கமைய்யா!

வெற்றி தரும் இன்ப வாடி வேலனே! சிவன் மகனே!
வெற்றியின் திரு உருவே! விளங்கும் புகழுடையோய்!
வெற்றி கொண்ட திருக்கடலே! வெள்ளப்பெருக்கினைப்போல்
வெற்றி புகழ் இன்பமெல்லாம் வேண்டுவோர்க்கருளிடுவீர்!

கந்தனின் புஜங்கமிதை கவி பாடி பக்தியோடு
வந்தித்து வழி பட்டால் வாழ்ந்திடலாம் நெடுங்காலம்
சிந்தை க்குகந்த இல்லாள், செல்வம் நன் மக்களுடன்
தந்திடும் பேரின்ப நிலை தரணி புகழ் குகனருளே!


இது ஆதி சங்கரரால் இயற்றப்பட்டதன் தமிழாக்கம்.

6 comments:

  1. அன்புடையீர். வணக்கம்.
    ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தின் பெருமையைப்பற்றி கேள்வியுற்றேன்.அதை அறிந்து கொள்ள மின் தளங்களை நாடினேன். தங்களின் பதிவும் கீழ்கண்ட பதிவும் கிடைத்தது. மகிழ்ந்தேன். நன்றி. அன்பன் ந.மோகனசுந்தரம்.வேந்தன்பட்டி.

    அடியார்கள் பெருமை ஆண்டவன் பெருமையை விட உயர்ந்தது. அடியார்களை ஆண்டவனாகவே மதித்துப் போற்றியவர்கள் பலர். ஆண்டவன் தனக்குத் தீங்கு செய்பவர்களைக் கூட மன்னித்து விடுவான். அடியார்களுக்கு தீங்கு புரிபவர்களை மன்னிப்பதில்லை. அம்பரீஷன் என்ற அடியாருக்காக துர்வாசமுனிவரை ஓராண்டு காலம் துரத்தியது திருமாலின் சக்கராயுதம்! அடியார்கள் மட்டுமல்ல. அவர்கள் அணியும் சின்னங்கள் கூட பெரிதும் மதிக்கப்பட்டன.

    உவர் மண் படிந்த மேனியுடன் (சாம்பல் நிறத்துடன்) வண்ணான் ஒருவன் வந்தான். அது கண்ட சேர மன்னன் யானையை விட்டு இறங்கி அந்த வண்ணானை வணங்கினார். "ஐயோ!சாமி! அடியேன் அடி வண்ணான்'' என்று வருந்தினான். "திருநீற்றின் தெய்வீக ஒளியை நினைப்பித்தீர், வருந்தாமல் செல்லுங்கள்'' என்றார் சேரமான் பெருமாள் என்ற மன்னவன்! சிவ சின்னத்தையே சிவனாக வழிபட்ட சைவ நாயன்மாரில் ஒருவர் இவர்.

    தற்காலத்தில் அசாம் மாநிலம் அந்தக் காலத்தில் `காமரூபம்' எனப்பட்டது. அதை ஆண்ட மன்னர் அபிநவ குப்தர். இவர் சிறந்ததோர் பேரறிஞர். ஆதிசங்கரரின் பெருகி வரும் பெருமையைக் கேள்விப்பட்டார். அவர் மீது பொறாமை கொண்டார். அதனால் சங்கரர் மீது பில்லிசூனியம் வைத்து ஏவி விட்டார்! அதனால் சங்கரருக்கு காசநோய் ஏற்பட்டு துன்புற்றார். சிவபெருமான் அவரது கனவில் தோன்றினார். "திருச்செந்தூர் செந்திலாண்டவனைத் தரிசித்தால் உன் நோய் தீரும்'' என்று அருள் புரிந்தார். ஏன்? சிவபெருமானே அதை செய்திருக்கக் கூடாதா? என்ற சிந்தனை வரலாம்! மகனின் புகழும் பரவ வேண்டும் என்று தந்தை விரும்புவதில் தவறில்லையே! மேலும், "எமது சக்தி ஆறுமுகன், யாமும் அவனும் யேதகமன்றால்'' என்று சிவபெருமானே கூறியுள்ளதை கச்சியப்பரின் கந்த புராணத்தில் காணலாம்.

    "தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது'' _குறள்

    கனவு கலைந்தது, காலை விடிந்தது. சங்கரர் தமது யோக சக்தியால் திருச்செந்தூரில் இருந்தார்! இதுவும் அட்டமாசித்திகளில் ஒன்றாகும். செந்திலாண்டவனை தரிசித்தார், மனமுருக வேண்டினார் சங்கரர்!

    அந்த தரிசனத்தின் போது முருகன் திருவடிகளில் ஆதிசேஷன் பூஜித்துக் கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் கண்டார் சங்கரர்! புஜங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு வளைந்து வளைந்து நகரும் பாம்பு என்று பொருள். அந்த `புஜங்கம்' என்ற சொல்லையே முதலாக வைத்து `சுப்பிரமண்ய புஜங்கம்' என்ற சுலோகங்களைப் பாடி முடித்தார் சங்கரர்! இது முப்பத்துமூன்று சுலோகங்கள் அடங்கியது.

    'சுப்பிரமண்யபுஜங்கம்' கேட்டு முருகன் திருவருள் புரிந்தான். சங்கரரைப் பற்றிய பிணி முற்றிலும் நீங்கியது! இந்த சுலோகங்களை தினசரி பாராயணம் செய்வோரை நோய், நொடி, வலிப்பு, பூத பைசாசங்கள் நெருங்காது! தீராத நோயெல்லாம் தீர்த்து வைப்பான் செந்திலாண்டவன்.

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.
    பின்னூட்டங்கள், வருபவர்கள் எண்ணிக்கை இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதுங்கள். நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு எழுதத் துவங்கிய காலத்தில் 3 மாதங்களில் எனது பதிவிற்கு வந்து பின்னூட்டமிட்டவர் ஒருவரே. அதுவும் ஒருதடவை மட்டுமே
    நன்றாக எழுதினால் அனைவரும் வருவார்கள்
    அதைவிட முக்கியம் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம் என்று எழுதுங்கள்!

    ReplyDelete
  3. நன்றி! மோகன சுந்தரம் அவர்களே, செய்திகளுக்கும்!

    ReplyDelete
  4. ஐயா!நன்றி! உங்களின் உற்சாக எழுத்துகளுக்கு! எழுத ஆண்டவன் துணை நிற்க!

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  6. வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

    ReplyDelete