க.ஸுந்தரராமமூர்த்தி
ஆன்மிகம் வளர்த்த அத்வைத ஞானி செங்கோட்டை ஸ்ரீஆவுடைஅக்காள்
மகளிரிலும் பல ஞானிகள், மஹனீயர்கள் நம் பாரத பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்திரிய விஷயங்களில் மனத்தை ஈடுபடுத்தாமல் அந்தர்முகமாகவே தன் மனத்தை பரமானுபவங்களில் செலுத்தி தான் ப்ரஹ்மஞானம் அடைந்ததுடன் தன் போன்ற பலரையும் அவர்கள் தங்களின் எளிய உபதேசமொழிகளால் வழிநடத்தியுள்ளனர். ஓர் ஆன்மா இவ்வாறு உய்வது நல்லதொரு குருவை அடையும் போதே. அவ்வாறு திருவிசைநல்லூர் ஸ்ரீதர வேங்கடேசையாவாளை சத்குருவாக பூர்வஜன்ம புண்யபரிபாக வசத்தினால் அடைந்து அவருடைய வழிகாட்டலின் படி பரிணமித்து தான் பெற்ற ஆத்மானுபூதியையும், ஆத்மானந்தத்தையும் பலவேறு பக்தி, யோக, ஞான, வேதாந்த சமரசப் பாடல்களின் மூலம் உலகோர் உய்ய வாரிவழங்கிய சிறந்ததோர் அம்மையார் செங்கோட்டை பெற்றெடுத்த ஸ்ரீஆவுடை அக்காள். இவர் 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்து தமிழகத்து ஔவையார், காரைக்கால் அம்மையார் போன்ற ஞானிகளைப் போல் தன் பாடல்களால் பலரை உய்வித்த மாது சிரோன்மணி. இவர் திருக்குற்றால மலையை தன் முக்திஸ்தலமாக கயிலாயத்துக்கு சமமாகக் கருதி அதில் ஏறி திரும்பிவராத நிலையை அடைந்தவர். இவருடைய பாடல்கள் ஞானிகளுக்கும், பாமரர்களுக்கும் ஒருமிக்க உய்வு தருபவையாக எளிதில் விளங்கக்கூடிய வண்ணம் திகழ்கின்றன. இந்த மாதுசிரோன்மணியின் வாழ்க்கைச் சரித்திரத்தை இங்கே காண்போம்.
ஸ்ரீஆவுடைஅக்காளின் இந்த சரித்திரமானது திருநெல்வேலியல் உள்ள குடும்பங்களில் பரம்பரையாக வழங்கிவரும் கதைகளைச் செவிவழியாகக் கொண்டும், அவருடைய பாடல்களில் உள்ள சில முக்கிய குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டும்தான் நம்மால் இன்று அறியப்படுகிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை யொட்டியுள்ள செங்கோட்டையென்னும் திருப்பதியில், ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள தெருவில் ஓர் உத்தமமான அந்தணர் மகளாக ஸ்ரீஆவுடை அக்காள் பிறந்தார். அவருடைய பெற்றோருக்கு அவர் செல்லப்பெண்ணாகத் திகழ்ந்தார். அவர் தம் சாந்த குணத்தாலும், மற்ற உத்தம குணங்களாலும் அனைவரையும் சிறு வயதிலிருந்தே கவர்ந்து புத்திசாலியாகத் திகழ்ந்தார்.
அவருக்குப் பதினாறு வயது நெருங்கிய சமயம், பெற்றோரால் பால்யத்திலேயே விவாகம் செய்து வைக்கப்பட்ட அவருடைய மஞ்சள் கயிற்றின் மணம் மாறும் முன், தலையில் பூவாடை மாறும் முன் அவருடைய கணவன் பரகதியடையவே அவருடைய தாயாரும் சுற்றத்தார்களும் அழுது பிரலாபித்தனர். குழந்தைத்தனம் நீங்காதவராக, "அவாத்துப் பிள்ளை செத்துப் போனால் நீங்கள் ஏன் அழவேண்டும்?" என்றார் ஸ்ரீஆவுடைஅக்காள். அவருடைய தாயார் விவேகியாதலால் உடனே அழுகையை நிறுத்திக் கொண்டு, "ஆமாம், குழந்தை கூறுவது உண்மைதானே! எதற்காக அழவேண்டும்? அவன் யார்? நாம் யார்? குழந்தைக்கு உண்டான விவேகம் நமக்கில்லையே?" என எண்ணி மகளை வாரி அணைத்தாள்.
அன்று முதல் மகளைச் சிங்காரித்து அழகு பார்ப்பதும், தக்க பண்டிதர்களைக் கொண்டு அவருக்குக் கல்வி பயில்விப்பதுமாக இருந்தாள். "அவர் கைம்பெண்; அடுப்பங்கரையையே துணையாகக் கொண்டு மரணம் வரையிலும் காலம் கழிக்க வேண்டியவர்; அவருக்கு கல்வியாவது? சிங்காரமாவது?" என ஊர் வம்பளந்து கேலி செய்தது. குடும்பத்துக்குள்ளேயே பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது. ஆனால் இவை யாவற்றையும் தாயார் என்னும் பலமான மஹாமேருமலையானது தாங்கி, தடுத்து, எதிர்த்து நின்றது.
இவ்வாறு சிறிது காலம் சென்றபின் குழந்தை ருதுவானாள். இப்பருவமடைந்த மகளை உலகிற்கு எதிராக தாயாலும் கூட காத்து மேலும் சிங்காரித்து அழகு பார்க்க முடியவில்லை. சிங்காரித்து மகிழ்ந்த செல்லக் குழந்தையின் தலையை மொட்டையடித்து வெள்ளை உடை உடுத்தியதும் ஓவென்று அழுதாள். கழுத்தைத் திருகிய கோழிக்குஞ்சு போல ஸ்ரீஆவுடைஅக்காள் ஒரு மூலையில் கிடந்தார். நாள்கள் செல்லச் செல்ல ஆவுடைஅக்காளுக்கு தன் நிலை நன்கு புரிந்தது. பிறகு சிறிது காலம் கண்ணீரிலும், கதறலிலும், பிதற்றலிலும் ஓடியது. தாயார் ஆயிரம் சமாதானம் கூறினாலும், 'இந்த வாழ்க்கைக்கு முடிவென்ன? என்றென்றும் கவலைதானா?' என ஏங்கிய அவருடைய வாழ்விலும் ஒரு விடிவு பிறந்தது.
அன்று காலையிலிருந்தே செங்கோட்டை ஊர் விழாக்கோலம் கொண்டது. கிராமாந்தரப் பெண்களை நான்கு மணிக்கு அதிகாலையிலேயே அன்று வாசல் பெருக்கிக் கோலமிட்டு அழகு செய்ய வைத்துவிட்டது அது. சிறுவர்கள் முதல்நாளே மாலையில் பறித்து வைத்திருந்த மாவிலைக் கொத்துகளைத் தோரணங்களாகக் கட்டி வீதிகளை அலங்கரித்தனர். பெரியவர்கள் யாவரும் ஸ்நானம் செய்து மடி உடுத்தி தெரு முனையில் இருந்த பஜனைமட வாயிலில் குழுமினார்கள். பூர்ணகும்பங்கள், பாலிகைகள், மாலைகள், விளக்குகள் என்று பஜனை மடத்துத் திண்ணையை அலங்கரித்தன. எல்லாரிடத்தும் ஒரு பரபரப்பு நிலவியது. இவையாவும் தமிழ்நாட்டின் சிறந்த ஞானியாக அன்று திகழ்ந்த திருவிசைநல்லூர் ஸ்ரீஸ்ரீதரவெங்கடேசரை அவ்வூர் மண்ணைப் புனிதமாக்க எழுந்தருளும்போது வரவேற்கத்தான். திருவிசைநல்லூரிலிருந்து நடைப்பயணமாகப் பயணித்து தான் சஞ்சரிக்கும் ஊர்களில் எல்லாம் பகவந்நாம மஹிமையைப் பரவச் செய்து கொண்டு எவர் வீட்டிலும் தங்காது தென்காசியிலிருந்து குற்றாலத்துக்குச் சென்று விட்டு அன்று காலை அங்கு எழுந்தருளும் அவரை எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
காலை சுமார் எட்டு மணிக்கு ஜாலர் ஒலியும், சலங்கையின் 'ஜல் ஜல்' சப்தமும் மனத்தைக் கவர அந்த மஹான் பஜனைமட வாசலுக்கு வந்தவர் வாசல் திண்ணையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்புப் பொருள்களையெல்லாம் பார்த்து லேசாக சிரித்தவராகத் தன் வழியே சென்றார். அவர் வந்திருப்பது இவர்களுக்காகவோ, இந்த வரவேற்புகளை எதிர்பார்த்தோ அல்லவே! ஓர் உன்னதப் பெண்மணியை உய்விக்கவல்லவோ அவர் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.
தலையில் பட்டுத் தலைப்பாகையாகக் கட்டப்பட்ட சிவப்புத்துணி மயில் தோகைபோல முதுகுப்புறம் சிறகு விரித்தாட, சிவப்புக் கயிற்றினால் கட்டப்பட்ட உஞ்சவிருத்திச் சொம்பு தோளில் தொங்க "கோவிந்தம் பஜ... மனஸா" என நாமாவளியை கம்பீரமாகப் பாடிக்கொண்டு கிராமத்துக்குள் நுழைந்த அவரை தெருப் பெண்கள் வாசலில் போட்டிருந்த கோலத்தின் மேல் மணைகளை வைக்க, அவர் அவற்றின் மீது வந்து நிற்க, பெண்கள் அவருடைய பாதங்களை பயபக்தியுடன் கழுவி தீர்த்தத்தை சிரசில் தெளித்துக் கொண்டு, பிறகு அரிசியோ, தானியமோ, பழவகைகளோ கொணர்ந்து அவரது சொம்பில் இட்டனர். அவரும் சொம்பிலிருந்து சிறிது அக்ஷதையை எடுத்து அவர்களது பாத்திரங்களில் இட அதுவே அவர்களது அரிசிப் பானையில் சேர்ந்து அக்ஷயமாக அவர்களைக் காத்தது.
இவ்வாறு முன்னேறிய அவர், வாசலில் குப்பையும் கூளமுமாகக் கிடந்ததொரு சிறு வீட்டின் முன் வந்து நின்றுவிட்டார். உள்ளே யாரோ விம்மி விம்மி அழும் குரல் லேசாகக் கேட்டது. "பிருந்தாவன விஹார மோஹன கிருஷ்ண" எனப் பாடிக்கொண்டு அவர் அரைக் கண் மூடிய நிலையில் ஆனந்தானுபவத்தில் ஆழ்ந்திருக்கும்போது திடீரென உள்ளேயிருந்து "என்னை விடுங்கள், நான் போகத்தான் வேண்டும்" என்ற அலறும் குரலையடுத்து வாசல் கதவு படீரென்று திறந்து கொண்டது.
பதினாறு வயதுள்ள இளம் மங்கையான ஸ்ரீஆவுடைஅக்காள் அவருடைய காலடியில் துவண்ட வாழைத்தண்டென வந்து பணிந்தார். ஸ்வாமிகள் திடீரென்று தன் நர்த்தனத்தை நிறுத்தி, கீழே குனிந்து கனவு ததும்பும் தன் கண்களால் அவரை நோக்கி அவருடைய தலையை மெதுவாக வருடி, "குழந்தாய்! வருந்தாதே! அஞ்சாதே! கடவுள் இருக்கிறார். அந்திநேரம் ஆற்றங்கரைக்கு வா!" என்றார். இதற்குள் வீட்டிலுள்ளவர்கள் வந்து அர்த்தசேதன நிலையிலிருந்த அவரைத் தூக்கிச் சென்றனர். கூட்டத்தில் எல்லாருடைய கண்களிலும் கேலிப் பார்வையும், உதட்டில் ஏளனப் புன்னகையும் நெளிந்தன. பிறகு ஸ்வாமிகள் தெருவை ஏறிட்டும் பார்க்காது பாடிக்கொண்டே ஆற்றங்கரை மண்டபத்தை அடைந்தார்.
நேரம் செல்லச் செல்ல ஆற்றங்கரைக்கு ஸ்ரீஆவுடைஅக்காள் செல்வதைப் பற்றி ஆக்ஷேபணைகள், சமாதானங்கள் என எழுந்தன. விவரம் தெரிந்த நாளிலிருந்து வாசல் நடைப்பக்கம் கூட வராத பேதையான அவருக்கு எங்கிருந்தோ துணிவு வந்துவிட்டது. "ஆற்றங்கரைக்குப் போகத்தான் போவேன்" என அவர் உறுதியாக நிற்க, அவருடைய தாயாரோ செயலற்று நின்றாள். வீட்டில் உள்ளோர் ஆவுடைஅக்காளைக் கண்காணிக்க ஒரு பெண்மணியை வைத்துவிட்டு கோவிலுக்கோ, வேறு அலுவலாகவோ வெளியில் செல்ல, இதுதான் சமயமென ஆவுடைஅக்காள் தனக்குத் துணையிருந்தவளையே நல்வார்த்தைகள் கூறி அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார்.
சூர்யாஸ்தமன சமயத்தில் மண்டபத்தை அடைந்த அவர் முன் விபூதி, ருத்ராக்ஷதாரியாக ஸ்ரீஸ்ரீதர வேங்கடேஸ ஐயர் நின்று கொண்டிருந்தார். ஆவுடைஅக்காள் அவரைப் பணிந்து நிற்க, அவர் கரகமலம் ஆவுடைஅக்காளின் தலையில் நீரைத்தெளித்தது. "குழந்தாய்! கண்களைத் திற! என்னை குருவாக ஏற்றுக் கொள். உன்னைப் பொருத்தவரை இன்றிலிருந்து ஞானவெளியின் வாசல் திறந்து விட்டது. நானுனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை வெளி உலகை மதிக்காது ஜபித்து வா! உலகம் உன்னை எப்படி நடத்தினாலும் ஞான மார்க்கத்தில் உன்னை வழிநடத்த நான் இருக்கிறேன். அடிக்கடி வந்து கவனித்துக் கொள்கிறேன்." என்று கூறி இருளில் மறைந்தார். அவர் உபதேசத்தையும், அது ஆவுடைஅக்காளை எப்படி சாதனாமார்க்கத்தில் முன்னேறச் செய்தது என்பதையும் 'அத்வைத மெய்ஞான ஆண்டி', 'பண்டிதன்கவி' என்னும் இரு பாடல்களில் ஆவுடைஅக்காளே வர்ணித்திருக்கிறார்.
இதற்குப் பிறகு ஆவுடைஅக்காள் ஆத்மானுபூதியில் லயித்து உன்மத்த நிலையில் இருந்ததைக் கண்டு அவரை சரியாகப் புரிந்து கொள்ளும் பரிபக்குவமில்லாத ஊரார் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்ய வேண்டும் எனக் கூறவும், ஆவுடைஅக்காள் தன் குருதேவரின் ஆக்ஞைப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம் தேவைப்பட்ட போதிலெல்லாம் அவருடைய குருநாதர் வந்து அவருக்கு வழிகாட்டி வந்தார்.
இறுதியில் மாயவரத்துக்கு துலாஸ்நானம் செய்ய வந்தபோது ஆவுடைஅக்காளுக்கு பேதாபேதம் அற்றுப்போய், சர்வ சமரச பரிபூர்ண ஸ்வானுபோதம் கிட்டிவிட, காவிரியில் ஓர் எச்சில் மாவிலை மிதந்து வர, அதை ஆவுடைஅக்காள் பல்துலக்க உபயோகிக்க, அதைக் கண்ட அங்கிருந்த பெண்கள் அவரை நிந்திக்கவும், ஆவுடைஅக்காள் அதை மனத்திற் கொள்ளாமல், புன்னகை மாறாது ஸ்நானம் செய்து கரையேறினார். அங்கு அரச மரத்தடியில் ஸ்ரீவேங்கடேஸர் தோன்றி அவருடைய நாக்கில் பீஜாக்ஷரத்தை தர்ப்பையினால் எழுதி, "உனக்கு ஜீவன முக்தி நிலை ஏற்பட்டுவிட்டது. இனி உனக்கு ஜனன மரணமில்லை. இனி கர்மபந்தங்கள் உன்னை அணுகா. உன் சொந்த ஊருக்கே சென்று இரு" எனக் கூறி ஆசிர்வதித்தார்.
இதற்குள் குருகிருபையினால் ஸ்ரீஆவுடைஅக்காளின் மஹிமை எங்கும் பரவ அவருடைய அத்வைதப் பாடல்களுக்கு பலரும் அடிமைகளாகி அவருடைய சிஷ்யர்களாக ஆகி அவரைப் பின்தொடர ஸ்ரீஆவுடைஅக்காள் செங்கோட்டைக்கு வந்து, ஊர்க்காரர்களால் மிக்க மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அங்கு வெகுகாலம் அத்வைத மணத்தை நாலா திக்குகளிலும் கமழச் செய்யும் திவ்யகமலமெனத் திகழ்ந்தார்.
இப்படி நாள்கள் வருடங்களாக மாறிப் பறந்தன. ஓர் ஆடி மாத அமாவாசையன்று குற்றாலத்துக்குச் சென்று அருவியில் ஸ்நானம் செய்த ஸ்ரீஆவுடைஅக்காள், மலைமீது ஏறிச் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு வருவதாக சிஷ்யைகளிடம் கூறி, புடைவைப் பெட்டியுடன் மலைமீது ஏறிச் சென்றவர் இன்றளவும் திரும்பவில்லை. அவருக்கு என்னவாயிற்று என்பது எவருக்குமே புரியாத ரகசியம்.
அவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் மக்களுக்கு புத்துயிரும், சாந்தியும் ஊட்டுகிற அமிருதமாகத் திகழ்கின்றன. பல இடங்களில் பெண்கள் சங்கங்கள் அமைத்து ஞான சாதனம் செய்து முன்னேற ஸ்ரீஆவுடைஅக்காள் அவர்களின் பாடல்கள் வழிகோலியுள்ளன. ஆயக்குடி ஸ்ரீவேங்கடராம சாஸ்திரிகள் என்ற பூர்வாஸ்ரமப் பெயர் கொண்டவரும் ஸ்ரீசிவானந்தரின் ரிஷிகேஸ ஆஸ்ரமத்தில் சந்நியாச தீக்ஷை பெற்று சென்னையில் சிறிது காலம் வசித்து முக்தியடைந்தவருமான மஹான் ஸ்ரீஆவுடைஅக்காளின் பாடல்களை எல்லாம் பிரயத்தனப்பட்டு ஒன்று திரட்டி புத்தகமாக வெளியிட்டார். அவர் வெளியிட்ட புத்தக்கத்திலும் சில பாடல்கள் விடுபட்டுப் போயின. ஸ்ரீஆவுடைஅக்காளின் பாடல்களைத் தவிர அந்தக் காலத்தில் பெண்கள் பாடும் கும்மிப்பாட்டாக ஸ்ரீஆவுடைஅக்காளின் சரித்திரம் ஆகியன அமைத்திருக்கிறார்கள்.
இவற்றைத் தவிர ஸ்ரீஆவுடைஅக்காள் 'அனுபவ ரத்னமாலை' என்னும் பாடலில் தன் குருநாதர் ஸ்ரீதரவேங்கடேஸ ஐயர்வாளின் பிரிவுக்கு இரங்கிப் பாடியிருக்கிறார். 'சூடாலைக்கும்மி' என்னும் பாடல்களில் ஸ்ரீஆவுடைஅக்காள் ஞானவாஸிஷ்டத்திலிருந்து இரண்டு மூன்று கதைகளை அமைத்திருக்கிறார். இவற்றில் எளிமையான நடையில் உயர்ந்த வேதாந்த உண்மைகளை ஸ்ரீஆவுடைஅக்காள் தந்திருக்கிறார். மேலும் எளிய தமிழில் சீதைக்கு ஸ்ரீஆவுடைஅக்காள் விளக்கம் கொடுத்திருக்கிறார். 'வித்தை ஸோபனம்' என்னும் பாடலில் ஸ்ரீஆவுடைஅக்காள் வித்தையென்னும் பெண் பூமர்ந்ததும் அவளுடைய தோழிகளான 'உபநிஷத்' பெண்கள் ஓடிவந்து கேலிப் பேச்சாகவே மதங்களை நிந்திப்பதை வர்ணித்திருக்கிறார். இதில் அடங்கியிருக்கும் வேதாந்த விஷயங்கள் இக்காலத்தவருக்கு விளங்குவது அரிது.
இவை தவிர ஸ்ரீஆவுடைஅக்காள் 'வேதாந்த குறவஞ்சி நாடகம்', 'வேதாந்த அம்மானை', 'வேதாந்தப் பள்ளு', 'வேதாந்த ஆண்டி', 'வேதாந்த வண்டு', 'வேதாந்த ஆச்சே போச்சே', 'ப்ரும்ம ஸ்வரூபம்', 'அன்னே பின்னே' என்னும் வேதாந்த ப்ரத்தியோத்திர கும்மி, 'ப்ரும்மமேகம்', 'தக்ஷிணாமூர்த்தி படனம்', 'வேதாந்த பல்லி', 'பகவத்கீதா ஸார ஸங்கிரஹம்', 'வேதாந்தக் கப்பல்' போன்ற பல பாடல்களை இயற்றியுள்ளார். திருவாங்கூர் சம்ஸ்தானம், திருநெல்வேலி ஜில்லாக்களில் இப்பாடல்களை பெண்கள் பூஜா காலங்களில் பாராயணமாகவும், கல்யாண காலங்களில் பாடல்களாகவும் பாடி வந்திருக்கின்றனர்.
ஸ்ரீஆவுடைஅக்காள் பற்பல சித்துகள் நடத்தி ஆத்மானந்தாப்தியில் ஆழ்ந்து பரமசிவானுக்ரஹம் பெற்றவர். இவருடைய புகழ் இன்றளவும் நிலவுகிறதென்றால் மிகையில்லை. அவருடைய உபதேச வழியில் சத்சங்கம் பற்றி அனைவரும் ஆத்மஞானானந்தத்தை அடைந்து பவஸாகரத்தைக் கடந்து முமுக்ஷுக்களாக வேண்டுமென ஸ்ரீஆவுடைஅக்காளைப் பிரார்த்திக்கிறேன்.
மகான்களின் மலரடிநிழலில் தொடரும்...
No comments:
Post a Comment