Sunday, January 25, 2015

சிவசைலம் -1

எல்லாம் வல்ல ஸத்குருமூர்த்தியின் திருவருளால் சிவசைலம் மாஹாத்மியம் கொஞ்சம் எழுத முயற்சி. முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.
சிவசைலபதியையும் பரமகல்யாணி நாயகியையும் அழகிய ஸ்நேகபுரத்தையும் கடநா நதியையும் வணங்குகிறேன்.
அத்ரி மஹரிஷியால் பூஜை செய்யப்பட்டவ்ரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமான சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்ரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரமகல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன்.
 கற்பூரம் போல் நிர்மலமான சரீரத்துடன் கூடியவளும் எதை நினைக்கிறார்களோ அதைக் கொடுக்கிறவளும் சங்கு போல் அழகிய கழுத்துடன் கூடியவளும் பூஜ்யையாயும் இருக்கின்ற அந்த ஸரஸ்வதியானவள்  என்னுடைய வாக்கிலிருந்து கொண்டு எனக்கு அனுக்ரஹத்தைச் செய்யட்டும். என்னுடைய கைகளிலிருந்து கொண்டும் அனுக்ரஹம் செய்யட்டும்.
சிரஸில் சந்திரனை தரித்திருப்பதாலுண்டான சோபையுடன் கூடிய ஜடாமண்டலத்தையுடையவரும் க்ருசமான உதரத்துடன் வேடுவ உருக்கொண்டவளுமான பார்வதியை சகாயமாகவுடையவரும் எப்பவும்
மங்களத்தைக் கொடுக்கின்றவரும் தன்னை உபாஸனை செய்கின்றவர்களுக்கு எப்பவும் பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமாகிய சிவசைலபதியை ஸேவிக்கிறேன். இவ்விடத்தில் வசிக்கும் மஹான்கள் எவருடைய  சரணகமலங்களை பூஜித்துஇங்கே சகல பாக்யங்களையும் அனுபவித்து முடிவில் மோக்ஷபதவியை அடைகின்றார்களோ அந்த சந்த்ர சூடனாகிய சிவசைலபதியை நமஸ்கரிக்கின்றேன்.

அண்டின ஜனங்களின் கஷ்டங்களை விவரிக்கின்றவளே சந்த்ரனை சிரோபூஷணமாகவுடையவளே மங்களத்தைச் செய்கின்றவளே, சிவசைலபதியின் பத்னியே, நெய்தல் புஷ்பத்திற்கு சமமான காந்தியுடையவளே. மனோஞ்ஞமானவளே,உன்னுடைய கருணைப்பார்வையை என்னிடம் இடைவிடாது செலுத்தவேண்டும். வணங்கின ஜனங்களின் பாபங்களாகிற ஹம்ஸங்களுக்கு புதிய நீருண்டமேகம் போலழகிய சரீர காந்தியுடன் கூடியவளும் குயிலுக்கு சமமான ம்ருதுவசனமுடையவளுமாகிய பரமகல்யாணியை நான் தினந்தோறும் வணங்குகிறேன்.

மங்களமாயும் வ்யாஸமஹர்ஷியின் முகமாகிய தாமரையில் நின்றும் பெருகினதாயும் சிவசைலனாதருடைய மஹிமையென்ற மதுவை இருகாதுகளின் வழியாக பக்தியுடனும் ஆதரவோடும் நித்யமாக எவன் பானஞ்செய்கின்றானோ அந்த புருஷன் பிறப்பு இறப்பு வ்யாதி முதலிய கஷ்டங்களுக்கிருப்பிடமான இந்த ஸம்ஸார பந்தத்தில் நின்றும் விடுபட்டு அழிவில்லாத சிவபதத்தை அடைகின்றான்.

             || சிவசைலமாஹாத்ம்யம் ||
             || முதலாவது அத்யாயம் ||
ஸகல லோகங்களிலும் ப்ரஸித்தமான நைமிசாரண்யம் என்பது மஹா தபஸ்விகல்ளும் வெகுநாள் யாகம் செய்யும் ரிஷிகளும் வாஸம் செய்யும் புண்யமான ஸ்தல விசேஷம் ஒருஸமயத்தில் அங்கு புராணங்களை நன்றாக அறிந்த ஸூதமுனிவரைக் குறித்து சௌனகாதி மஹர்ஷிகள் மிகவும் பணிவுடன் கேட்கிறார்கள்.

ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுணர்ந்த ஸூத மஹர்ஷியெ ! முன் சிவக்ஷேத்ரங்களுடைய வைபவங்களை மிகவும் சிறப்பாக சொன்னீர்கள். அதில் சிவசைலம் என்ற சிவக்ஷேத்ரத்தைப்பற்றி சுருக்கமாகச்சொன்னீர்கள் . இப்பொழுது அதை விஸ்தாரமாகக் கேட்க ஆவலுடன் இருக்கின்றோம்.

அத்ரிமஹர்ஷி வாஸம் செய்த புனிதமான சிவசைலத்தில் சிவன் லிங்க உருவில் ஆவிர்பவித்தாரல்லவா ! மிகவும் அழகு பெற்ற கைலாசபர்வதத்தை விட்டுவிட்டு பரமேச்வரன் இங்கு ஏன் ஆவிர்பாவம் ஆனார் ? சிவசைலம் என்ற க்யாதி எவ்விதம் ஏற்பட்டது ? த்ரிகூடசைலம் என்று தானே முனிவர்கள் சொல்லிவந்தார்கள் ! சிவசைலத்தின் கிழக்கும் பக்கத்தில் மேற்குமுகமாக பரமகல்யாணீ நாயகராக விளங்குகிறார் . மலய பர்வததிற்கு வடக்குத் திசையில் கடநா நதிக்கு தென்கரையில் ஸாக்ஷாத் பரமேச்வரர் தன்னுடைய கணங்களுடன் பக்தர்களுக்கு அருள் புரிவதாகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டது, அதையும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும் என்றும் ப்ரச்னம் செய்தார்கள்.

இவ்விதம் மஹரிஷிகளால் செய்யப்பட்டு மிகவும் ஸந்தோஷமடைந்து ரிஷிகளுடைய வார்தைகளை மனதால் ச்லாகித்துக்கொண்டு ஸூதமுனிவர் ப்ரம்ஹா , விஷ்ணு , ருத்ரர் , விநாயகர் , ஸுப்ரம்ஹண்யர் , ஸரஸ்வதீ , சிஷ்யர்களுடைய ஆனந்தமாகிற தாமரை மலருக்கு ஸூர்யன் போல் விளங்குகின்ற குரு வ்யாஸர் , இவர்களை நன்றாக வணங்கினார் கல்யாணீ நாயகரும் கலியின் மலத்தைப் போக்குகிறவரும் மன்மதன் , காலன் ,(யமன்) அந்தகன் இவர்களை அடக்கியவரும் காமம் க்ரோதம் முதலிய சத்ருகணங்களை ஜயித்த யோகிகளுடைய மனதாகிற உப்பரிகையில் வஸிப்பவரும் கல்யாணாத்ரி என்கிற மஹாமேரு பர்வதத்தை வில்லாகச் செய்தவரும் ப்ரம்ஹா முதலிய தேவர்களால் வணங்கப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவருமான ஸ்ரீசைலபதியை தத்வார்தங்கள் ஸித்திக்கும் பொருட்டு வணங்குகிறேன்.

(இங்கு ஸூதமுனிவர் புராணத்தின் யதார்த்தமான பொருள் நன்கு விளங்குவதர்காக த்யானம் செய்தார். தத்வார்த்தஸித்தியை , என்பதை “ புத்ரார்த்த ஸ்த்யை கார்யார்த்த ஸித்யை ” என்று பிரார்தனைக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ளலாம்.) இவ்வாறு ஸ்ரீ பரமகல்யாணீ சமேதரான சிவசைலேசரை மிகவும் ஸ்ந்தோஷத்துடன் வணங்கிவிட்டு சிவக்ஷேத்ரங்களில் உத்தமமான ஸ்ரீ சிவசைலத்தின் மஹிமையை கூறத் தொடங்கினார்.

ஸூதமுனிவர் :---  மஹர்ஷிகளே ! உங்களால் கேட்கப்பட்ட சிவசைல மாஹாத்ம்யம் மிகவும் லோகத்திற்கு மங்களகரமானது. கல்யாணீசகதை புண்யத்தைத் தரும் எப்பொழுதும் மங்களகரமானது . ஸம்ஸாரமாகிர கடலைக் கடக்கிறவர்க்கு ஸாதகமானது ஸகலாபீஷ்டங்களையும் கொடுக்கக்கூடியது.

மேலும் 1. கல்யாணீநாயக: 2.சம்பு : 3.சிவசைலேச: இந்த நாமத்ரய மந்த்ரம் த்ரிவர்க பலனைத் தரும் . மூன்று லோகங்களை வசீகரணம் செய்யக்கூடியது. ஷெ மந்த்ரத்தை ஓங்காரபூர்வமாக உச்சரித்தால் சதுர்வர்க பலனைத்தரும் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பது நாலு வர்கம்,
1.ஓம் கல்யாணீநாயக: 2. ஓம் சம்பு : 3. ஓம் சிவசைலேச: என்பதாகத் தெரிகிறது.) 1. சம்பு: 2.பரமகல்யாணீ நாயக: 3. அத்ரிஸுபூஜித: இந்த நாமத்ரயத்தை ஜபித்தால் நிச்சயமாக முக்தி ஏற்படும். 1. சிவ: 2. பரமகல்யாணீ நாயக: 3.அந்தகமர்தன: 4.கங்காதர; 5.விரூபாக்ஷ: 6.கபர்தீ 7.சசிபூஷண: 8.பஸ்சிமத்வாரநிலய: 9.கடநாதீரபூஷண; 10.அத்ரிபூஜித பாதாப்ஜயுகள:,11,நீலலோஹித:,12.கோரக்ஷலக்ஷித:. இது த்வாதச நாமங்கள் அடங்கிய மந்திரம். இந்த 12 நாமங்களையும் தினம் மூன்று காலங்களிலும் உச்சாரணம் செய்தால் ஜீவன் முக்தனாகிறான்.
இந்த சிவசைல க்ஷேத்ரம் எல்லா சிவ க்ஷேத்ரங்களைக்
காட்டிலும் முக்யமானது. மேற்கு முகமாக வாசல் உடையது.
( எல்லா ஆலயங்களுக்கும் அநேகமாக கிழக்கு பக்கம் வாசல் இருக்கும். இங்கே மேற்கே வாசல். இதனால் இதற்கு விசேஷம் அதிகம் என்று தாத்பர்யம். )
கடநா நதிக்கரைக்கு அலங்காரமாக இருக்கக் கூடியது. அழிவற்றது. நதிகளில் கங்கை போலவும் தேவர்களுக்குள் விஷ்ணு போலவும் க்ருஹஸ்தர்களுக்குள் வஸிஷ்டர் போலவும் ஸ்த்ரீகளுக்குள் அருந்ததி போலவும் மந்திரங்களுக்குள் ப்ரணவம் ( ஓங்காரம் ) போலவும் தானங்களுக்குள் அபயதானம் போலவும் பக்ஷிகளுக்குள் கருடன் போலவும் லோஹங்களுக்குள் தங்கம் போலவும் விருக்ஷங்களுக்குள் அஸ்வத்த (அரச)விருக்ஷம் போலவும் மிருகங்களுக்குள் பசு போலவும் ஈஸ்வரர்களுக்குள் சிவன் போலவும் இந்த க்ஷேத்ரம் சிவ க்ஷேத்ரங்களுக்குள் முக்யமானது.
இந்த க்ஷேத்ரத்தில் ஒருநாள் வாஸம் செய்தால் அதிபாதகத்திலிருந்து விடுதலையடைகிறான். நிரம்ப சொல்லி என்ன ப்ரயோஜனம்?. இந்த க்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் கிடையாது. கடநா நதியில் யாதொரு மனிதன் சதுர்த்தசி, அஷ்டமி, பூர்ணிமை, அமாவாஸ்யை, ஆடிமாதப்பிறப்பு, தை மாதப்பிறப்பு, சந்திரகிரஹணம், ஸூர்யகிரஹணம், சித்திரை மாதப்பிறப்பு, ஐப்பசிமாதப்பிறப்பு, விஷ்ணுபதி என்றி சொல்லக் கூடிய வைகாசி, ஆவணி,கார்த்திகை, மாசி மாதப் பிறப்புகள், ஷடசீதி என்று சொல்லக் கூடிய ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதப் பிறப்புகள் இந்த புண்ய தினங்களில் விதிப்படி ( ஸங்கல்பம், வருணஸூக்த படனம், மார்ஜனம், அகமர்ஷணம்,தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் என்ற பஞ்சாங்க முறைப்படி ) ஸ்நானம் செய்து தில அக்ஷதைகளால் தேவரிஷிபித்ரு தர்ப்பணம் செய்து,
மேற்கு முகமாக ஸ்வயம் ஆவிர்பவித்த, அழகிய 16 ஆவடையாளுடன் கூடிய சிவசைலேச லிங்கத்தையும்,
ஸகலலோக மாதாவும் பாசம், அங்குசம், அபயம்,வரதானம், இவைகளுடன் விளங்கும் நான்கு கைகளுள்ளவளும், அகன்ற கண்களுள்ளவளும் மேற்கு திசை நோக்கியவளும் எல்லா லக்ஷணங்களும் பொருந்தி, எல்லா அங்கங்களிலும் மிக்க அழகுடன் விளங்குபவளுமான பரமகல்யாணி அம்பாளையும் தரிசித்து ஒருமுறை வணங்கியவன் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு தேவபாவத்தை அடைகிறான்.
தினமும் மூன்று தடவை பரமகல்யாணி அம்பாளை ஸேவிப்பவன் எல்லா அபீஷ்டங்களையும் பெறுகிறான். ப்ரஹ்மா விஷ்ணு முதலியவர்களால் இங்கு பூஜிக்கப்பட்ட
ஸ்ரீசாம்ப மூர்த்தியின் ஸாந்நித்யமுள்ள சிவசைலக்ஷேத்ரத்திற்கு ஸமமான க்ஷேத்ரம் இல்லவே இல்லை. இது முக்காலும் உண்மை. அத்ரி முனிவருக்கு அநுக்ரஹம் செய்வதற்காக ஈச்வரர் இங்கு எப்பொழும் ஸாந்நித்யத்துடன் இருக்கிறார்.
1.சிவசைலேச்வரர்,2.ராமேச்வரர்,3.வஹ்நீச்வரர்,4.பாபநாசேச்வரர். இந்த நான்கு மூர்த்திகளுக்கும் மத்தியில் உள்ள பிரதேசம் பஞ்சக்ரோசம் எனப்படும். ( காசியில் கங்கைகரையில் பஞ்சக்ரோசம் உள்ளது. அங்கு செல்பவர்கள் பஞ்சக்ரோச யாத்ரை செய்கிறார்கள் ) அது போல தக்ஷிணகங்கையிலும் பஞ்சக்ரோசமுள்ளது.
இங்கு வஸிக்கும் மனிதன் பஞ்சக்ரோச மத்தியில் எங்கு மரணமடைந்தாலும் ருத்ரானுக்ரஹத்தால் சிவஸாரூப்யத்தை அடைவான். ( காச்யாம் து மரணான் முக்தி என்றபடி ). இதுவும் காசிக்கு ஸமானம் என்று அறியவும். இங்கு செய்யும் தானம், ஹோமம், ஜபம், தவம் இவை அழிவற்ற பலனைக் கொடுக்கும். பொய் பேசுபவன், துஷ்டன், நாஸ்திகன், நன்றிமறந்தவன், குருத்ரோஹி, இரக்கமில்லாதவன், பிராணிகளுக்கு த்ரோஹம் செய்பவன் இவர்கள் இங்கு ஸுகமடைய மாட்டார்கள். இங்கு வஸிப்பவர்களுக்கு பாவம் செய்வதில் புத்தி செல்லாது.
சிவசைலத்தைச் சுற்றி ஐந்து யோஜனை வரையுள்ள பூமி பரிசுத்தமானது. புண்யத்தைத் தரும். கைலாஸபர்வதத்திற்கு ஸமமானது. இங்கு வஸிக்கும் மனிதர்கள் தேவர்களாகின்றார்கள். சிவசைலத்தில் ஒருமாதம் வஸிப்பவன் சிவபதத்தையடைகிறான்.எப்பொழும் வஸிப்பவனைப் பற்றிக் கேட்பானேன்?. சிவதீக்ஷை பெற்று சைவாகம முறைப்படி சிவசைலேசரைப் பூஜிக்கிறவன் சிவசைலேசனே. அவன் பூஜிக்கத்தகுந்தவன். சிவசைல க்ஷேத்ரத்திற்கு ஜீர்ணோத்தாரணம் செய்கிறவன் எல்லா அபீஷ்டங்களையும் அடைவான். பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் படி செய்பவனிடம் அஷ்டைச்வர்களும் செழிப்பாக இருக்கும்.
முனிவர்களே! நான் உண்மையாகச் சொல்கிறேன். சிவசைலநாதரின் பெருமைகளை முழுவதும் சொல்வதற்கு ஆயிரன் நாவுகள் படைத்த ஆதிசேஷனாலும் முடியாது என்றால் என்னைபோன்றவர் எப்படிச் சொல்ல முடியும்?. இந்த சிவசைல மாஹாத்மியத்தை தினமும் படிக்கிறவனும், கேட்கிறவனும் புண்யத்தை எப்பொழும் செய்வதில் ஆசையுள்ளவனாக ஆகி எல்லாச் செல்வங்களையும் செழிப்புகளையும் அடைந்து எல்லாராலும் வணங்கத்தக்கவனாகிறான்.
   முதலாவது அத்யாயம் முற்றிற்று.            

நன்றி ; நிதீஷ்வரன். 

No comments:

Post a Comment