Wednesday, January 28, 2015

சிவசைலம் - 11

பதினோறாவது அத்யாயம்
ருஷிகள் கேட்கிறார்கள் : ‘ சிவசைலேசர், ராமேசுவரர் ( ராமநாதர் ) வஹ்நீச்வரர், பாபநாசேச்வரர் இந்த நான்கு லிங்கங்களுக்கும் மத்தியில் உள்ள பஞ்சக்ரோசம் என்று தங்களால் ,முன்னர் கூறப்பட்டது. இங்கு வாஸம் செய்பவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும். மேலும் சிவசைலேச லிங்கள் தோன்றிய விவரம் கூறப்பட்டது. மற்ற லிங்கங்களின் ஆவிர்பாவத்தையும் கூற வேண்டும்’.
ஸூதர் கூறுகிறார் : - முன்னால் தசரத குமாரரான ஸ்ரீராமர், இறந்த பிராமண குமாரனைப் பிழைக்கச் செய்வதற்காக தவம் செய்து கொண்டிருக்கிற ‘ சம்புகன் ‘ என்ற சூத்ரனைக் கொன்றார்.
தாபஸனான சூத்ரனைக்கொன்றதாலெற்பட்ட பாபத்தால் துன்பமடைந்த தார்மிகரான சிறிது நேரம் ஆலோசித்து கொன்ற பாபத்தைப் போக்கும் சிறந்த ஸாதனம் சிவபூஜை என்று எண்ணினார். இவ்வாறு தீர்மானித்து சீக்கிரம் சிவபூஜை செய்ய விருப்பம் கொண்டவராய் சிவாராதனம் செய்வதற்குத் தகுந்த ஸ்தலத்தை ஆலோசித்தார். பிறகு எங்கு தாபஸ சூத்ரனை கொன்றாரோ அந்த ஸ்தலத்திலேயெ ராகவன் தன் பெயரிலேயெ ( ராமேசுவரர் அல்லது ராமநாதர் )  ஒரு லிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து முறைப்படி ஆலய நிர்மாணம் செய்து தேவதேவனை எல்லா உபசாரங்களாலும் பூஜித்து ஆனந்தமடைந்தார். தன் பெயரிலேயே புண்யதீர்த்தத்தையும் நிர்மாணித்து அதில் ஸ்நானம் செய்து சிவனை பூஜித்து பரிசுத்தியடைந்தவராக சிவனை வணங்கி மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“ பிரபோ! உலகங்களுக்கு நாதனான தங்களுக்கு நமஸ்காரம். தாங்கள் உலக உருக் கொண்டவர். விஷத்தை சாப்பிட்டதால் கருப்பான கழுத்தை உடையவர். துஷ்டர்களை அழச்செய்பவர், பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவர். பக்தர்கள் விரும்பும் பலன்களை வர்ஷிப்பவர். பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர். மேலானவர். பரமாத்மா பசுக்கள் போன்ற ஜீவர்களுக்கு பதி. பக்தர்களின் துன்பமாகிற இருட்டைப் போக்கும் ஸூரியன். பரம மங்கள ஸ்வரூபி. மங்களத்தைத் தருபவர். மஹாதேவா! உமக்கு நமஸ்காரம். கிருபையால் என்னை காப்பாற்ற வேண்டும். “
இவ்வாறு ராமர் மஹாதேவனை துதித்துவிட்டு பக்தி பரவசரானார். அப்பொழுது பக்தவத்ஸலரான மஹாதேவர் ராமரைபார்த்துக் கூறுகிறார்.
சிவன் ;- ‘ ஹே ராம! நான் ஸந்தோஷமடைந்தேன். சூத்ர தாபஸனைக் கொன்ற பாபத்திலிருந்து விடுபட்டு விட்டாய். நீ எப்போதும் சுத்த ஸ்வரூபன். மனிதரைப் போல் நடிக்கிறீர். நீரே உலகங்களுக்கு ஆத்மா. உம்மிடத்தில் எல்லாம் நிலை பெற்றிருக்கின்றன். ‘ இவ்வாறு கூறப்பட்ட ராமர் சம்புவைப் பார்த்துக் கூறினார்.
ராமர்:- என் பெயருடன் விளங்கும் இந்தப் புண்யதீர்த்ததில் புண்யகாலங்களில் எந்த மனிதன் ஸ்நானம் செய்து அதன் அங்கமான தீர்த்த ச்ரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளால் பித்ருக்கள், தேவதைகள், ரிஷிகள் இவர்களை த்ருப்தி செய்து என்னால் பூஜிக்கப்பட்ட உம்மை தர்சனம் செய்கிறானோ, அவனுடைய அபீஷ்டங்களெல்லாம் உமதுஅருளால் நிறைவேற வேணும். எல்லாப் பாபங்களுடன் கூடினவனாயிருந்தாலும் இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து என் நாதனான தங்களை தர்சனம் செய்கிறானோ அவன் சுத்தனாகட்டும். இந்த ராமேசுவர ஸ்தலத்தைச் சுற்றி ஒரு யோஜனை தூரத்தில் உள்ள பிரதேசம் உமது அனுக்ரஹத்தால் குருக்ஷேத்ரத்தைக் காட்டிலும் அதிகமான பலனைக் கொடுக்கட்டு. “
இவ்வாறு தேவேசனைப் ப்ரார்த்தித்து அவரிடம் விடைபெற்றுக் கொண்டு ஸந்தோஷத்துடன் புறப்படும் சமயத்தில் மறுபடியும் சிவசைலேசரை தரிசித்து நமஸ்கரித்து துதித்துத் தன் இருப்பிடம் சென்றார்.
முனிவர்களே! இவ்வாறு ராமநாத லிங்கம் தோன்றிய விவரம் உங்களுக்கு கூறப்பட்டது . வஹ்னீச்வரரின் உத்பத்தியைக் கூறுகிறேன். முன் ஒரு சமயம் அக்னி பகவான் ஸப்த்ரிஷிகளின்ம் மனைவிகளிடம் ஆசை கொண்டான். இது தெரிந்த முனிவர்கள் தம் தபோபலத்தால் ஒளியற்றுப் போகும்படி அக்னியை சபித்தார்கள். உடன்  அக்னி தேவன் சிவசைலம் சென்று சாபம் நீங்குவதற்காக தவம் செய்தான். பிறகு சிவசைலத்திற்கு முன்னால் தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை நிர்மாணம் செய்து தீர்த்தத்திற்கு மேற்கில் வரநதிக்குக் கிழக்கில் வஹ்நிநாதேசர் என்ற லிங்கத்தை ஸ்தாபித்தார். பிரதி தினமும் முக்காலங்களில் ஸ்நானம் செய்து பக்தியுடன் சிவனைப் பூஜித்து இதனால் ரிஷிகளின் சாபத்திலிருந்து விடுபட்டு அக்னி தேவன் முன்போல் ஒளியுடன் விளங்கினார். அதனால் வஹ்நிநாதர் விளங்கும் ஸ்தலம் பரிசுத்தமானது. ஒப்பற்றது. வஹ்னீச்வர லிங்கத்தைச் சுற்றிலும் ஒரு யோஜனை தூரம் பரிசுத்தமானது. மஹாபாபங்களையும் போக்கவல்லது. பிராமணர்களே! வஹ்னிநாத லிங்கத்தின் ஆவிர்பாவம் கூறப்பட்டது. பாபநச லிங்கத்தின் உத்பத்தியை கூறுகிறேன் கேளுங்கள்.
   பதினோறாவது அத்யாயம் முற்றும்.

No comments:

Post a Comment