Wednesday, January 28, 2015

சிவசைலம் - 10

 பத்தாவது அத்யாயம்.
சிவன் கூறுகின்றார் :-- மணலூருதேசாதிபதியான பாண்ட்யராஜனே பக்தருக்கு அபீஷ்டத்தைக் கொடுக்கும் நான் உனது பக்தியால் மிகவும் ஸந்தோஷமடைந்தேன். என் பக்தர்களில் உனக்கு ஸமமானவர் ஒருவருமில்லை ஆகையால் உன் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன். உனக்கு வரம் கொடுப்பதற்காக நான் வந்திருக்கிறேன். வேண்டிய வரங்களைக் கேள் உன்னை ப்ரீக்ஷிப்பதற்காக என் உத்தரவின் பேரில் குஹன் முனிகுமார வேஷங்கொண்டு உன்னுடன் சண்டையிட்டு உன்னைத் தோல்வியுறச்செய்தான். அதை மன்னித்து விடு.
சண்டையிட்ட வீரர்கள் முக்ய மந்த்ரிகள் உன் தம்பி ஸத்யகீர்த்தி யானை, குதிரை, தேர், காலாட்படைகள் எல்லோரும் என் அருளால் பிழைத்துப் பழைய பலத்துடனும் அலங்காரத்துடனும் விளங்குவதைப்பார் எல்லோருடனும் நீ தேரில் ஏறிக்கொண்டு ஸந்தோஷத்துடன் குதிரையைப் பிடித்துக் கொண்டு உன் நகரம் சென்று யாகத்தைப் பூர்த்தி செய். யாகமுடிவில் என் அருளால் குஹன் உனக்குப் புத்ரனாக வருவான். எல்லோரையும் ஜயிப்பதற்காக சத்ருக்களையழிக்கக்கூடிய சூலாயுதத்தையும், பாசுபதாஸ்த்ரத்தையும் தருகிறேன். பெற்றுக்கொள். அனேக யாகங்களைச் செய்து பூவுலகில் மற்றவர்களுக்குக் கிடைக்காத போகங்களை அனுபவித்துக்கொண்டு அரஸாக்ஷி செய்து பிள்ளை பேரன்களுடன் பூவுலகில் வெகுகாலம் வாழ்ந்து முடிவில் தேஹத்தை விட்டு என் ஸாயுஜ்யத்தை அடைவாய்.
இவ்வாறு ஈசனால் கூறப்பட்ட வார்த்தையைக் கேட்டு அரசன் மிகவும் ஸ்ந்தோஷமடைந்தவனாய் குரல் தழதழக்க ஈசனைப் பார்த்துக் கூறினான். என் மனதில் ஏற்படும் எண்ணங்களெல்லாம் உன் திருவடித் தாமரையைப் பற்றினதாகவே இருக்க வேணும். என் வாக்குகள் உன் நாமாக்களைச் சொல்ல வேணும். என் சரீரம் உன்னை வணங்குவதில் ஈடுபட வேண்டும். என்னிடம் தாங்கள் மிகவும் ஸ்னேகம் (அன்பு) காட்டியதால் இந்த நகரம் ஸ்னேகபுரீ என்ற பெயருடன் விளங்கட்டும். (sneh அன்பு purI ஊர். அன்பூர் இந்த பெயர் இப்பொழுது ஆம்பூர் என்று மாறிவிட்டது.) நானும் குஹனும் சண்டை செய்த இந்த பூமி குஹன் பெயரால் விளங்கட்டும் ”  என்று ப்ரார்த்தித்தான். ஈசனை திருப்பி திருப்பி வணங்கினான். பிறகு மயில்வாஹனத்தில் அமர்ந்திருக்கும் ஷண்முகரை வணங்கி ப்ரபோ ! என் குற்றத்தை மன்னித்துக்காப்பாற்ற வேண்டும் என்று கூறி வணங்கினான். ஸ்கந்தர் பரம்பக்தனான அரசனைப் பார்த்து ‘ எல்லாம் ஈசன் செயல் ’ என்பதை நினைவுறுத்திக் கொள் அரசனே! சம்புவால் எது சொல்லப்பட்டதோ அது அப்படியே நடைபெறும்.
இவ்வாறு சொல்லப்பட்ட அரசன் ஸ்கந்தரையும் சிவசைலபதியையும் வணங்கிவிட்டு குதிரையுடனும் ஸைன்யங்களுடனும் மந்திரிகளுடனும் தம்பியுடனும் தன் நகரம் வந்து ஈசனை மனதில் த்யானித்து யாகத்தை நடத்தி ஸந்தோஷமடைந்தான். குஹனும் ஈசன் வாக்கியத்தை ஸத்தியமாக்குவதற்காக அரசனுக்கு புத்திரனாக பிறந்து மனித ஸ்வபாவப்படி பாலலீலைகளைச் செய்தான். குஹனைப் புத்திரனாகப் பெற்ற ஸுதர்சன ராஜன் சாலிவாடீபுரத்திற்கு ( திருநெல்வேலிக்கு ) கிழக்கில் ஓர் நகரத்தை நிர்மாணம் செய்து குஹனை ராஜ்யத்தில் அமர்த்தி தான் ஸ்நேகபுரியில் வாஸம் செய்து கொண்டு மிகுந்த பக்தியுடன் சிவசைலேசரை பூஜித்தான். சிவாகமமறிந்த பிராமணனை வரவழைத்து தினமும் ஐந்து கால பூஜை நடத்தி வைத்தான். 18 வாத்யங்களாலும் ஆயிரக்கணக்கான தாஸீ தாஸர்களாலும் பலவித ரத்னங்கள் பதித்த ஆபரணங்களாலும் சிறந்த வஸ்திரங்களாலும் ஈசனுக்கு ப்ரீதி உண்டு பண்ணினான். தன் பெயரால் கடநா நதியில் அணைகட்டி வயல், தோட்டம், தோப்பு, நந்தவனங்களை நிர்மாணித்தான். சிவசைலத்தின் தினமும் உத்ஸவம் நடந்தது. இவ்வாறு சிவசைலபதியைப் பூஜித்து தந்து ஆயுளின் முடிவில் சிவஸாயுஜ்யம் அடைந்தான். பிறகு குமாரன் பல வருஷங்கள் அரசனாக ராஜ்யத்தை பரிபாலித்துக் கொண்டு எல்லோராலும் பூஜிக்கப்பட்டு விளங்கினான். முனிவர்களே, நீங்கள் கேட்டபடி கலியின் ஆரம்பத்தில் மனிதர்களால் சிவசைலபதி பூஜிக்கப்பட்ட விருத்தாந்தம் சொன்னேன்.

            பத்தாவது அத்யாயம் முற்றும்.

No comments:

Post a Comment