எட்டாவது அத்யாயம்
ரிஷிகள் கூறுகிறார்கள்:- கோபம்
கொண்ட பார்வதி சிவசைலபதியின் ஸந்நிதிக்கு வந்ததும் அவளுக்கு சிவன் தன் பாதிசரீரம்
கொடுத்ததும் விபரமாகச் சொல்ல வேண்டும். இதக் கேட்க எங்களுக்கு மிகவும் ஆவலாக
இருக்கிறது.
இவ்வாறு ப்ரார்த்திக்கப்பட்ட ஸூதர்
தன் வார்த்தையால் முனிவர்களை ஸந்தோஷப் படுத்துகிறவராக தேவிக்கு ஸ்ந்தோஷம்
ஏற்பட்டதன் காரணத்தைச் சொன்னார்.
பார்வதி தவம் செய்யும் பொழுது
கருணாநிதியான ஈசுவரன் பார்வதியின் பிரிவைத் தாங்கமுடியாமல் அதனால் துன்பமுற்றவராய்
உண்மையே பேசுகின்றவளும் தர்மசீலையுமான அத்ரியின் பத்னி அநசூயையைக் கூப்பிட்டு
தேவியை ஸமாதானப்படுத்துவதற்காக அவளை அனுப்பிகிறவராய்ச் சொன்னார்.
“ ஹே அநஸூயா தேவியே! பார்வதியின் பிரிவால் உண்டான வேதனையைத் தாங்கமுடியவில்லை.
துஷ்டனான மன்மதன் முன் விரோதத்தை நினைத்துக் கொண்டு முன்னால் அவன் சரீரத்தில்க் என்
கண்ணால் செய்த கார்யத்தை என் மனதில் பாணத்தால் செய்கிறான். எப்பொழுதும் அவனுடைய ஐந்து
அம்புகளுக்கும் என்னை இலக்காக்குகிறான். அவளை அழைத்து வருவதற்காக நான் அனுப்பிய கங்கை
இன்னும் திரும்பிவரவில்லை. ஆகையால் நீ அவள் தவம் செய்யும் இடம் சென்று ஸமாதானமாயும்
ப்ரியமாயும் இனிமையாயும் மனதைக் கவரும்படியான வாக்யங்களால் அவளை ஸமாதானப்படுத்தி இங்கு
அழைத்து வா.
இவ்வாறு சம்புவால் சொல்லப்பட்ட பதிவ்ரதையான அநஸூயை
பார்வதி தவம் செய்யுமிடம் சென்று மெதுவாக ஸமாதானப்ப்டுத்தினாள். “ஹே கல்யாணீ! நீ சிவசைலேசன்
ஸந்நிதிக்கு வரவேணும். ஹே புவனேச்வரீ! நீங்கள் இல்லாமல் சிவன் சூன்யர் போல் தோன்றுகிறார்.
அவர் ஸச்சிதானந்த ரூபராயிருந்தாலும் உன்னுடன் கூடியிருந்தால்தான் நன்கு விளங்குவார்.
உன் பிரிவால் அவருக்கு இரவில் தூக்கமில்லை. சாப்பிடுவதில்லை. உன்னிடமே மனதை செலுத்தி
எப்பொழுதும் த்யானம் செய்கிறார். “ஹே ப்ரியே, கல்யாணீ எங்கு சென்றுவிட்டாய் என்று உன்னை
பற்றியே பேசுகிறார். இவ்வாறு ஸ்மாதானப்படுத்திய அனஸூயையைப் பார்த்து தேவி சொல்கிறாள்.
அனஸூயாதேவியே ! எனக்கு சிவனின் பாதி சரீரம் கிடைக்கும்
வரை தவம் செய்வேன். இப்பொழுது சிவசைலேசரின் ஸந்நிதிக்கு வரப்போவதில்லை. நீ அத்ரி முனிவருடன்
கலந்து யோஜித்து எனக்கு சிவனுடைய பாதி சரீரம் கிடைப்பதற்கு உபாயம் சொல்லவேணும்.
இந்த
ஸமயம் அத்ரி முனிவர் கௌதமர் முதலான முனிவர்களுடன் தேவியை தரிஸிப்பதற்கு யத்ருச்சையாக
அங்கு வந்தார். தவம் செய்யும் தேவியை ஷோடசோபசாரங்களால் பூஜித்து பக்தியுடன் வணங்கினார்.
அநஸூயை தந்து கணவரான அத்ரிமுனிவரிடம் பார்வதியின் விருப்பத்தைத் தெரிவித்தாள். உடனே
அத்ரிமுனிவர் சிறிது நேரம் த்யானித்து விட்டு பிறகு தேவியைப் பார்த்து சொல்கிறார்.
“ஹே மஹாதேவி ! ஈச்வரனுடைய பாதி தேஹம் அடைவதற்கு
ஓர் உபாயமுள்ளது. கேதாரவ்ரதம் என்பது சிவனுக்கு மிகவும் ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது.
இந்த வ்ரதத்தை அனுஷ்டானம் செய்தால் இதனால் ஸந்தோஷமடைந்து பரமேச்வரன் கட்டாயம் உனக்கு
தன்னுடைய பாதி சரீரத்தைக் கொடுப்பார். இது உண்மை.” இவ்வாறு கூறிய அத்ரிமுனிவரையும்
தர்மமறிந்த அனஸூயையையும் வணங்கி தேவி கூறுகிறாள். {தனக்குத் தெரிந்தும் தான் உபதேசிக்காமல்
அனஸூயை தன் பர்த்தாவைக் கொண்டு கேதாரவ்ரதத்தை உபதேசிக்கும்படி செய்ததன் மூலம் தன் பதிவ்ரதா
தர்மத்தை காட்டியதால் “தர்மக்ஞா” என்று கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.} ஹிமவானுக்குப்
போல் உங்களுக்கும் நான் பெண்ணாக ஆய்விட்டேன். கேதார விரதத்தை அனுஷ்டிக்கும் விதிமுறைகளைக்
கூற வேண்டும் என்று கேட்ட தேவிக்கு அத்ரிமுனிவர் எல்லாவற்றையும் கூறினார்.
அத்ரிமுனிவரிடம் கேட்டு விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு
பார்வதீதேவி பாத்ரபதமாதம் சுக்லபக்ஷ அஷ்டமியன்று ஆரம்பித்து 21 நாட்கள் கேதாரநாதரைப்
பூஜித்து உபவாஸ நியமத்தைக் கைக்கொண்டு 21 ஸூத்ரங்களால் செய்த ப்ரதிஸரத்தை{காப்பை}க்
கட்டிக்கொண்டு வ்ரதானுஷ்டானம் செய்தாள். பாத்ரபத க்ருஷ்ண சதுர்த்தியன்று அனஸூயையுடன்
கேதாரநாதரை விதிப்படி பூஜித்து கையில் தோரகத்தை {சரடு} கட்டிக்கொண்டு சிவனை வணங்கினாள்.
{இங்கு பார்வதிக்கு அனஸூயை சரடு கட்டியிருக்கலாம்}.
உடனே கோடி சந்திரர்களின் காந்தியுள்ளவரும்
மிக்க அழகியவரும் கைகளில் மான், உளி, வரம், அபயம் இவைகளைத் தாங்கியவரும் விருஷப
வாஹனத்தில் அமர்ந்திருப்பவருமான பரமேசன் எல்லா தேவர்களுடனும் பரிவாரங்களுடனும்
தேவியின் முன் தோன்றி பிரஸந்நமான முகத்துடன் தேவியைக் கூப்பிட்டு “ கல்யாணீ! உன்
விரதத்தாலும், தவத்தாலும் நியமத்தாலும் நான் ஸந்தோஷமடைந்திருக்கிறேன். என்
சரீரத்தில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன். ஸூரியனோடு ஒளி சேர்ந்திருப்பது போல் நீ
எப்போதும் என்னுடன் சேர்ந்திருக்கிறாய். நீ என்னைக் காட்டிலும் வேறல்ல. ஆனாலும்
இப்பொழுது சரீரார்த்தத்தைக் கொடுக்கிறேன். ஸந்தோஷத்துடன் பிரஸன்னனான என்னைப் பார்!
“ என்று கூறினார். இதைக் கேட்டு மனதில் ஸந்தோஷம் நிறைந்தவளாய் பார்வதி திரும்பத்
திரும்ப பரமேசனைப் பார்த்தாள். தேவி ஸந்தோஷத்துடன் இருப்பதை அறிந்த சிவசைலபதி ஹே
கல்யாணி ! வா, நாம் நமக்கு பிரியமான சிவசைல ஸ்தலத்திற்குப் போவோம் என்று கூறி
அம்பிகையை தனது இடது மடியில் ஏற்றி வைத்துக் கொண்டு சிவசைலஸ்தலம் சென்று அவளுடன்
இன்புற்றிருந்தார். முனிவர்களே! தேவியின் ஸந்தோஷத்திற்கு காரணமான இச்சரித்திரத்தை
உங்களுக்கு சொன்னேன். வேறு என்ன கேட்க விரும்புகிறீர்கள், என்று ஸூதமுனிவர்
கேட்டார்.
எட்டாவது அத்யாயம் முற்றும்
No comments:
Post a Comment