Tuesday, January 27, 2015

சிவசைலம் - 5

 ஐந்தாவது அத்யாயம்.
சிவன் கூறுகிறார் :-- மூன்று ஸ்தலங்களைப் பற்றிக் கூறுகிறேன் ஸாவதானமாகக் கேளும் முதலாவது க்ஷேத்ரங்களுக்குள் மிகச் சிறந்ததான சிவசைலம். இரண்டாவது க்ஷேத்ரத்தின் மஹிமையை கேளும்.
   முன் ஒரு காலத்தில் இந்த்ரன் பிள்ளையான வாலி ஸூர்யன் குமாரனான ஸுக்ரீவனால் {யுத்தத்தில்} தோற்கடிக்கப்பட்டு எதிரியின் பாதி பலத்தை அடையவேணும் என்ற ஆசையால் தவம் செய்தான். மனதை அடக்கி ஸ்வயம்புலிங்கத்தில் என்னை பூஜை செய்தான். கடுமையாக தவம் செய்வதைப் பார்த்து நான் ஸந்தோஷத்துடன், அவன் முகத்தைப் பார்க்கும் எதிரிகளின் பாதி பலம் இவனை அடையும்படி வேறு யாருக்கும் கிடைக்காத வரத்தைக் கொடுத்து வாலியால் பூஜிக்கப்பட்ட புராதனமான லிங்கத்தில் ‘வாலிநாதர்’ என்ற பெயருடன் வஸிக்கிறேன். இதை மோக்ஷத்தைக் கொடுக்கும் இரண்டாவது க்ஷேத்ரமாக அறிந்து கொள்ளும். {இந்த க்ஷேத்ரம் இப்பொழுது “திருவாலீச்வரம்” என்ற பெயருடன் விளங்குகிறது}, இனி க்ஷேத்ரங்களுக்குள் சிறந்த மூன்றாவது க்ஷேத்ரத்தைப் பற்றிக் கூறுகிறேன்.
  முன் ஒரு ஸமயம் க்ருதயுகத்தில் ப்ரம்ஹாவால் பூஜிக்கப்படதும் பிறகு ஒவ்வொரு யுகத்தின் ஆரம்பத்திலும் அனேகம் ப்ரம்ஹாக்களால் பூஜிக்கப்பட்டதுமான க்ஷேத்ரத்தை “ப்ரம்ஹவ்ருத்தபுரம்” என்றும் ப்ரம்ஹதேசம்  என்றும் வித்வான்கள் சொல்கிறார்கள். இங்கு ப்ரம்ஹபுத்ரரான ரோமசமஹர்ஷியால் பூஜிக்கப்பட்டு மிகச் சிறப்பான நித்யத்வத்தை {சாவற்ற தன்மையை} அவருக்குக் கொடுத்து தேவர்கள், சித்தர்கள், வேதம் அறிந்தவர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்டதும் , மனதைக் கவருவதும் அழகிய மலர்ச் செடிகளுடன் கூடியதும் கைலாஸபர்வதத்தைக் காட்டிலும் நன்மையைத் தருவதுமான இந்த க்ஷேத்ரத்தில் வாஸம் செய்வதால் சாஸ்த்ரஸித்தாந்தத்தின் ரஹஸ்யமறிந்த முனிவர்கள் இங்கு என்னை “கைலாஸநாதர்” என்று புகழுகிறார்கள் கைலாஸ பர்வதத்திற்கொப்பான இந்த க்ஷேத்ரத்தை மூன்றாவதாக தெரிந்துகொள். இங்கு மூன்று நாட்கள் வஸிப்பவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களும் கிடைக்கும். தேவர்களால் புகழப்பட்ட இது தேவபூமிக்கு ஸமமானது.
மஹரிஷியே, மற்றொரு ஆச்சரியத்தக் கேள். ப்ரஹ்மா ஓர் ப்ரதிக்ஞை செய்துள்ளார்.
” கங்கா நதி “ ‘கடநா’ என்ற பெயருடன் ப்ரஹ்மவிருத்தபுர ( ப்ரஹ்ம தேச ) த்தின் அருகில் வெகுகாலம் கழித்து விளங்கட்டும். என்னால் சிவன் பூஜிக்கத்தக்கவரானால் அங்கு ஸ்நானம் செய்து தன் சக்திக்கு தக்கவாறு செய்யும் தானம்., ஜபம், ஹோமம் இவை அல்பமாயிருந்தாலும் அதிகம் ஆகட்டும். அந்நதியில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நானம் செய்து கைலாஸநாதரை ஸேவிப்பவருக்கு எல்லா பாபங்களும் நாசமடையட்டும். கைலாஸநாதர் என்னிடம் ப்ரஸன்னராக இருப்பாரேயானால் அங்கு வஸிப்பவர்களுக்கு யமபாதை ஏற்படக்கூடாது. ஐச்வர்யம் தொடர்ந்து வ்ருத்தியடையட்டும்.இவ்வாறு ப்ரம்ஹா ப்ரதிக்ஞை செய்துவிட்டு ஸ்வஸ்தானம் சென்றார். ஆகையால் இந்த க்ஷேத்ரம் மிகச்சிறந்தது.
  ப்ரம்ஹரிஷியே, நீர் செய்த ஸ்தோத்ரத்தால் நான் ஸந்தோஷமடைந்தேன்.  இந்த க்ஷேத்ரத்தில் புண்ய காலங்களில் தீர்த்தச்ராத்தம் செய்து க்ஷேத்ரபிண்டம் கொடுத்தால் அவனுடைய இரண்டு வர்கத்திலுள்ள பித்ருக்கள் த்ருப்தியடைகிறார்கள். ப்ரதி தினமும் மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்களுக்கு நான்கு புருஷார்த்தங்களையும் நான் கொடுப்பேன். இதில் ஸ்ந்தேஹமில்லை. பஞ்சக்ரோச மத்தியில் செய்யும் ஜபம், தானம், ஹோமம், இவை என் அனுக்ரஹத்தால் அக்ஷயமாக இருக்கும். இந்த ரூபத்துடனேயே லிங்கமத்தியில் எப்பொழுதும் மனிதர்களுக்குக் காக்ஷியளிக்கிறேன். கலியுகம் வந்தபிறகு மறைந்து வஸிப்பேன். அப்படியே நீயும் எல்லோர் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்திருந்து ப்ரதிதினமும் முக்காலத்திலும் என்னை பூஜை செய்யும். இவ்வாறு சிவசைலபதி ப்ராம்ஹணரிடம் சொல்லிவிட்டு அழகிய சிவசைலத்தில் வலது பக்கத்தில் கல்யாணியுடனும் அந்தந்த ஸ்தானங்களில் நந்திகேச்வரர், விநாயகர், குஹர், மாத்ருகணங்கள், சண்டேச்வரர், ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்ரன் முதலான தேவர்கள், அப்ஸரஸ், கந்தர்வர்கள், திக்பாலர்கள், ப்ருகு முதலான முனிவர்கள், நாரதாதி ரிஷிகள் இவர்கள் எல்லோருடனும் கூடியவராக நித்யவாஸம் செய்தார்.
முனிவரும் தன் தபோபலத்தால் விச்வகர்மாவைக் கூப்பிட்டு எல்லோருக்கும் ஆலயம் நிர்மாணம் செய்யும்படிச் சொன்னார். விச்வகர்மாவும், சிவனுகும் தேவிக்கும் தேவர்களுக்கும் ஆலயம் கட்டினான். முனிவர் ஐந்து காலங்களிலும் சிவசைலபதியை பூஜித்துக்கொண்டு தன் அபீஷ்டங்களைப் பெற்றுக் க்ருதக்ருத்யரானார்.

      ஐந்தாவது அத்யாயம் முற்றும்.

No comments:

Post a Comment