Tuesday, January 27, 2015

சிவசைலம் - 3

மூன்றாவது அத்யாயம்
இவ்வாறு தனது ஆச்ரமத்தில் வஸித்துவரும் பரிசுத்தமனமுள்ள அத்ரி மஹரிஷிக்கு மனதில் ஸந்தோஷமின்மையும் வெறுப்பும் ஏற்பட்டது. என்ன ஆச்சர்யம்?. எனது துஷ்டத்தனத்தைப் பார்! எப்பொழுதும் ஸந்தோஷத்துடன் இந்த ஆச்ரமத்தில் வஸித்துவரும் எனக்கு ஸ்வயம்பு லிங்கத்தில் விளங்கும் சிவனுடைய தர்சனமில்லாமலேயே அநேக வருஷங்கள் வீணாகக் கழிந்துவிட்டனவே. க்ஷேமத்தைக் கொடுக்கும் சிவன் எங்குமிருந்த
போதிலும்விஷயங்களில் மனம் ஈடுபட்டவர்களுக்கு அநுக்ரஹம் செய்வதற்காக க்ருபையால் ஸ்வயம்பு லிங்கத்தில் ஸாந்நித்யம் செய்துள்ளார். பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தபோதிலும் அதன் மடுவில் தான் நம்மால் காணப்படுகிறது. இதுபோல் எங்குமுள்ள சிவன் ஸ்வயம்பு லிங்கத்தில் ஸாந்நித்யம் செய்கிறார். அகஸ்தியர் மிகுந்த பாக்யசாலி. அவர் மூன்று காலங்களிலும் பாபநாசேச லிங்கத்தில் விளங்கும் மங்களரூபியான சாம்பனை ஸேவிக்கிறார்.
இவ்விதம் முனிவர் எண்ணி ஈசனை தியானம் செய்யும் பொழுது ” மஹரிஷியே! அநாதி சிவசைலேசர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக முன்னாலேயே நான் இங்கே வாஸம் செய்து வருகிறேன். என்னைப்பார்! “ என்று ஆகாசவாணி கேட்டது. இது என்ன?. இந்த வார்த்தை யாரால் சொல்லப்பட்டது?. என்று மனதில் ஆவலுடன் யோஜித்து “ ஸர்வேசுவரனுடைய வார்த்தை தான் “ என்று தீர்மானித்து ஆகாசவாணி கேட்ட திசைக்கு நமஸ்காரம் செய்து ஆனந்தமடைந்தார்.
இந்த ஸமயத்தில் அத்ரி சிஷ்யனான கோரக்ஷகன் ஸமித்,புஷ்பம், தர்ப்பம்,பழம் இவைகளைக் கொண்டுவர ஆசையுடன் ஆச்ரமத்திற்கு முன்னால் கடநா நதியின் தென்கரையில் மாமுதலான பழம் புஷ்பம் தரும் மரங்களும் கொடிகளும் நாணல் தர்ப்பைகளும் நிறைந்த மார்க்கமாகப் போகும்பொழுது மரங்கள் அடர்ந்த இடத்தில் மறைந்திருக்கும் அழகான அமைப்புடன் விளங்கும் அநாதி சிவசைலேச லிங்கத்தைக் கண்டு ஸந்தோஷமடைந்து ஆச்ரமம் வந்து குருவான அத்ரி முனிவரிடம் தெரிவித்தான்.
சிஷ்யனின் வார்த்தையைக்கேட்ட அத்ரி முனிவர் மிகுந்த வேகத்துடன் அங்கு சென்று மஹாலிங்கத்தைப் பார்த்து  மிகுந்த ஸந்தோஷமடைந்து ப்ரீதி என்னும் அமிருதக் கடலில் மூழ்கி சுயநினைவின்றி பரவசமாகி விட்டார். வெகுநேரத்திற்குப் பிறகு நினைவு வந்து லிங்கத்தைப் பார்த்தார். அப்பொழுது லிங்கமத்தியிலிருந்து சம்புவானவர் மான்,உளி,வரம்,அபயம் இவற்றுடன் விளங்கும் நான்கு கைகளுடனும் அருகில் பார்வதி யுடனும் வ்ருஷபத்தின் மீது அமர்ந்தவராகத் தோன்றினார்.
ஸம்ஸார நோயை அகற்றும் மருந்து போன்றவரும், கோடி சந்திரர்களுக்கு ஒப்பான ஒளியுள்ளவரும் மூன்று கண்களுள்ளவரும், சந்திரனை சிரஸில் தரித்தவரும், பிங்கள வர்ணமான ஜடாபாரமுள்ளவரும் சிரஸில் ரத்னகிரீடம் அணிந்தவரும் (விஷத்தால்) கருப்பான கழுத்துள்ளவரும் புலித்தோலையணிந்தவரும், அழகைய சரீரமுள்ளவரும், அம்பிகையுடன் கூடியவரும், தேவர்களுக்கு ஈசனுமான சிவனை தர்சித்து சிறந்த தர்மத்தையறிந்த அத்ரி முனிவர் அதிக ஸந்தோஷத்தால் இந்திரியங்கள் கலக்கமடைய தண்டம் போல் பூமியில் விழுந்து வணங்கி திரும்பித் திரும்பி தர்சித்தார். திரும்பத் திரும்ப வணங்கினார். பிறகு சரீரம் புல்லரிக்க மிகுந்த பக்தியுடன் பரமேசனை துதிக்க ஆரம்பித்தார்.
     மூன்றாவது அத்யாயம் முற்றும். 

No comments:

Post a Comment