Wednesday, January 28, 2015

சிவசைலம் - 7

          ஏழாவது அத்யாயம்
அநேகமாக எல்லா ப்ரதேசங்களிலும் சிவலிங்கங்கள் கிழக்குப்
பார்த்து இருக்கின்றன. இந்த ஸ்வயம்பூ லிங்கரூபியான சிவசைலபதி , எந்தக் காரணத்தினால் மேற்குத் திசையைப் பார்த்து இருக்கிறார்?. உலகங்களால் பூஜிக்கப்பட்ட பார்வதி தேவி சிவசைலபதிக்குப் பத்னியாக அமைந்து எந்தக் காரணத்தினால் ‘கல்யாணீ’ என்ற பெயரையடைந்தாள்?.
வியாஸருடைய அனுக்ரஹத்தாலும் சிவபக்தியினாலும் நீர் ஸகலத்தையும் அறிந்தவர். மூன்று லோகங்களையும் அறிந்தவர். ஆகையால் இந்த விசேஷங்களை விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும். என்று முனிவர்களால் வேண்டிக் கொள்ளப் பட்ட ஸூதமுனிவர் கல்யாணீபதியான சிவசைலபதியை மனதில் தியானித்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
ஸூதமுனிவர் கூறுகிறார்:- முன்னொரு ஸமயத்தில் சிவசைல ஸ்தலத்தில் பரமேச்வரன் பார்வதியுடனும் பிரமத கணங்களுடனும் சேர்ந்து அமர்ந்திருந்து எல்லோருக்கும் தர்சனம் கொடுத்தார். அப்பொழுது ப்ரஹ்மா முதலிய தேவர்கள், இந்திரன் முதலிய 8 திக்பாலகர்கள், 12 ஆதித்யர்கள், 8 வஸுக்கள், 11(அநேக)ருத்ரர்கள், ஸித்தர்கள்,கந்தர்வர்கள்,கின்னரர்கள்,வஸிஷ்டர் முதலிய ப்ரஹ்ம ரிஷிகள், நாரதர் முதலிய தேவரிஷிகள்,கங்கா முதலிய நதீ தேவதைகள், ஊர்வசீ முதலான தேவ ஸ்த்ரீகள், ஓங்காராதி தேவதைகள், வேதங்கள் இவர்கள் ஆவலுடன் சிவ தர்சனம் செய்ய வந்திருந்தார்கள். எல்லாரும் பரமேச்வரரை வணங்கி அநேக ஸ்தோத்ரங்களால் ஸ்தோத்ரம் செய்து இருபக்கங்களிலும் பரமேச்வரருடைய முகத்தைப் பார்ப்பதற்காக நின்றார்கள். ப்ரஸந்நமான பார்வதீகாந்தனை தர்சனம் செய்து கிருதார்த்தர்களாக எண்ணினார்கள்.
பரமேச்வரருக்கு மிகவும் பிரியமான கணத்தலைவர் ‘ப்ருங்கிடி’ என்பவர். மிகவும் ஹாஸ்யங்களால் நிரம்பியதும் விசித்ரமானதுகளுமான செய்கைகளால் பரமேச்வரரை ஸந்தோஷப்படுத்தி சிவனிடம் விடைபெற்றுக் கொண்டு செல்லும்பொழுது அம்பிகையையும் சேர்த்துப் பிரதக்ஷிணம் செய்யாமல் சிவனை மட்டும் பிரதக்ஷிணம் செய்து விட்டு, அம்பிகையை விட்டு பரமேச்வரனை மட்டும் நமஸ்கரித்து ஸ்தோத்ரம் செய்து மெளனமாக நின்றார்.
இதைக் கண்டு பார்வ்வதீ தேவியானவள் தன் பர்த்தாவாகிய பரமேச்வரரைப் பார்த்து “கணங்களின் தலைவரான பிருங்கிடி மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?. எதற்காக இந்தக் காரியத்தைச் செய்தான்?. ( என்னை விட்டு தங்களை மட்டும் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டிய காரணம் என்ன?.)“ என்று கேட்டாள்.

அதைக்கேட்டு பரமேச்வரர் சிரித்துக் கொண்டு பார்வ்வதியைப் பார்த்துச் சொல்கிறார்:- “ உன்னையும் என்னையும் நன்றாகக் கவனித்து ஆலோசித்து, என்னை மட்டும் அண்டியவர்கள் வணங்கிக் காரிய ஸித்தியை அடைகிறார்கள். உன்னால் பிரயோஜனமில்லை என்பதையறிந்து (எல்லோருக்கும் இது தெரியட்டும் என்று) செய்தார். (என்னாலேயே கார்ய ஸித்தி ஏற்படும் பொழுது அதிகப்படி உன்னையும் ஸேவிக்க வேண்டியதில்லை) “ இவ்வாறு பரமேச்வரனால் சொல்லப்பட்ட ஜகத்ஸ்வரூபிணியான பார்வதீதேவி கோபமடைந்து கணதேவனாகிய பிருங்கிரிடியின் சரீரத்திலிருக்கும் சக்தியை அபஹரித்து விட்டாள்.சக்தியற்ற கணாபனாகிய பிருங்கிரிடி தேஹபலமற்று கீழே விழுந்தான். பார்வதியும் மேற்குத்திசை சென்றுவிட்டாள்.
பரமேச்வரன் பார்வதியை ஸமாதானம் செய்வதற்காக மேற்குமுகமாக ஆனார். ஸமாதானம் செய்வதற்கு கங்காதி நதிகளை அனுப்பினார். தானும் கூப்பிட்டார். “ ஹே கல்யாணீ! பார்வதீ! நீ எனக்குப் பிரியமானவள் அல்லவா! ஏன் கோபமடைந்து விட்டாய்?. நான் பரிஹாஸமாகச் சொன்ன வார்த்தையல்லவோ?. கோபம் வேண்டாம். வருவாயாக. இது பரிஹாஸம் என்பதை நீ அறியவில்லை. உண்மையென்று நினைத்துக் கொண்டுவிட்டால் கோபம் வேண்டாம், கட்டாயம் வர வேண்டும். “ இவ்விதம் அநேக விதமாகப் பேசியும் ஸமாதானம் அடையவில்லை. (பார்வதியானவள் தான் தனிப்பட்ட மூர்த்தியாக இருந்ததால் தான் நம்மை விலக்கிவைக்கிறார்கள்.பரமேச்வரனுடைய பாதி சரீரமாகவே ஆகிவிட்டால் நம்மை விடமுடியாதல்லவா என்ற எண்ணத்துடன்) பரமேச்வரருடைய பாதி சரீரத்தையடைய வேண்டியதற்காக அத்ரி மஹரிஷியின் ஆச்ரமத்தின் மேல்புறத்தில் கடுமையான தபஸ் செய்தாள்.
கங்காதேவியும் பரமேச்வரருக்கு ப்ரியம் செய்ய வேண்டுமென்ற விருப்பத்துடன் நதிரூபமாகவே வந்தாள்.
அப்பொழுது வந்தவர்களான கெளதமர் முதலிய மஹரிஷிகளும், அத்ரி முனிவர் முதலியவர்களும் கங்காதேவியைப் பூஜித்தார்கள். கங்காதேவியும் அங்கேயே வாஸம் செய்தாள். எல்லோரும் கேட்கும்படியாகவே கங்காதேவியானவள் பார்வதியை ஸமாதானம் செய்தாள். ஆனால் முடியவில்லை.
பரமெச்வரனே நேரில் ஆவிர்பவித்து “ ஹே கல்யாணீ “ என்று ஆஹ்வானம் செய்தார். அது முதல் பகவானும் மேற்குமுகமாக இருந்தார். பார்வதியும் அதுமுதல் கல்யாணீ என்ற நாமதேயத்தை அடைந்தாள். ஸ்ரீஸ்வரூபிணியான பார்வதியும் தபஸ் செய்யும் காரணமாக அங்கு வஸித்து வந்தாள்.
அதனால் சிவசைலம், ஸ்ரீசைலம் என்ற பெயரையும் அடைந்தது.
இவ்வாறு சிவசைலநாதர் மேற்குமுகமாக இருப்பதம் காரணமும், தேவிக்கு கல்யாணி என்ற பெயரை ஈசுவரன் கொடுத்ததும் விபரமாக சொல்லப் பட்டது. மேலும் எதைக் கேட்க விரும்புறீர்கள்’ என்று ஸூதர் சொன்னார்.

           ஏழாவது அத்யாயம் முற்றும்.

No comments:

Post a Comment