ஒன்பதாவது அத்யாயம்.
ரிஷிகள் கூறுகிறார்கள்:- சிவசைலபதியை முதலில் ப்ரம்ஹா
பூஜித்ததாகவும் , பிறகு முனிவர்கள் பூஜித்ததாகவும் கூறினீர்கள். முதன் முதலாக மனிதர்களால்
எப்பொழுது பூஜிக்கப்பட்டார்? இந்த விபரத்தை எங்களுக்கு சொல்ல வேண்டும். சிவசைலபதியின்
கதையை எவ்வளவு கேட்டாலும் மனதில் த்ருப்தி ஏற்படுவதில்லை. நாங்கள் மிகுந்த பாக்யசாலிகள்.
இவ்வாறு முனிவர்களால் கேட்கப்பட்ட ஸூதர் மறுபடியும்
சிவசைலபதியின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
மூவுலகங்களிலும் புகழ் வாய்ந்த ஸுதர்சனன் என்னும்
பாண்ட்யராஜன் மணலூரில் வஸித்துக் கொண்டு அரஸாக்ஷி செய்து வந்தான். இவன் எல்லா சாஸ்த்ரங்களையும்
அறிந்தவன். ப்ராம்ஹணர்களிடம் பக்தி உள்ளவன். உண்மையே பேசுவான். ப்ரஜைகளின் நன்மையில்
ஈடுபட்டவன். ஒரு ப்ராணிக்கும் த்ரோஹம் செய்யமாட்டான். இரக்கமுள்ளவன். புலன்களை ஜயித்தவன்.
பெரியோர்களை ஸேவிப்பவன். கோபத்தை ஜயித்தவன். புத்திமான் அஸூயை இல்லாதவன். ஸந்தோஷமுள்ளவன்.
யாகம் செய்பவன். ஸாதுக்களுக்கு இருப்பிடம். சம்புவிடம் மிகுந்த பக்தியுடன் சிவதீக்ஷை
பெற்றவன். எங்கும் சிவ ஸ்வரூபத்தை பார்ப்பவன்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த அரசனுக்கு குழந்தை
இல்லை. குழந்தை பெறுவதற்காக அச்வமேதயாகம் செய்யவேண்டுமென்ற நல்ல எண்ணம் அரசனுக்கு உண்டாயிற்று.
தனக்கு குருவான ஜமதக்னி முனிவரைக் கூப்பிட்டு தன் எண்ணத்தைத் தெரிவித்தான். இதைக் கேட்ட
ஜமதக்னி முனிவர் ‘சக்ரவர்திகளால் அனுஷ்டிக்கப்படும் அச்வமேதயாகத்தில் தேவர்களால் இடையூறுகள்
ஏற்படக்கூடும். அதிலும் பாபத்திற்கே உறவினரான கலி ஆக்ஷிசெலுத்தும் காலம் தார்மிக அரசர்களுக்கு
பலவித துன்பங்கள் ஏற்படும். ஆகையால் வேறு யாகம் நடத்தலாம் என்பது என் எண்ணம்’ என்று
கூறினார். இதைக்கேட்ட அரசன் ‘முக்யமாக அச்வமேதயாகம் சிவனுக்கு மிகுந்த ப்ரீதியைக் கொடுக்கக்கூடியது.
ஈச்வரப் ப்ரஸாதத்தாலும் ப்ராம்ஹணர்களின் ஆசீர்வாதத்தாலும் யாகங்களில் சிறந்த அச்வமேதயாகத்தை
ஸுலபமாக நடத்தலாம். தாங்கள் அனுமதி கொடுக்கவேண்டும்’ என்று சொன்னான்.அந்த ஸமயத்தில்
மஹாராஜாவே உன்னால் அச்வமேதயாகத்தை நடத்த முடியும். ஆலோசிக்க வேண்டாம் உடனே யாகத்தை
ஆரம்பம் செய். என்று ஆகாயத்தில் அசரீரி வாக்கு கேட்டது. இதைக் கேட்ட அரசன் மிகவும்
ஸந்தோஷம் அடைந்தான். பக்தியுடன் ஈசனை த்யானித்தான். ஜமதக்னி முனிவரும் ஆச்சர்யமடைந்து
அரசனைப்பார்த்து ‘ஈச்வரனே உன்னிடம் ப்ரீதியுள்ளவராக இருக்கிறார். யாகம் நடைபெறட்டும்.
தாம்ரபர்ணீ நதிக்கரையில் யக்ஞசாலை நிர்மாணம் செய்யப்படட்டும். மந்த்ரிகள் எல்லா ஸாமக்ரிகளையும்
சேகரிக்கட்டும். சாஸ்த்ரப்படி இடையூறு நீங்க சாந்திகள் நடத்தப்படட்டும். திறமையுள்ள
வீரனின் பொறுப்பில் குதிரையானது உபாத்யாயருடன் (பூப்ரதக்ஷிணத்திற்காக) விடப்படட்டும்.
என்று சொன்னார். எல்லா மந்த்ரிகளும் குருவின் உத்தரவுப்படி எல்லா காரியங்களையும் செய்து
தெரிவித்தார்கள். (அச்வமேதயாகத்தில் பூப்ரதக்ஷிணத்திற்காக குதிரையை அவிழ்த்துவிட வேண்டும்.
குதிரையுடன் ப்ரதானவீரன், ஸைன்யம், உபாத்யாயர், ரித்விக்குகள் எல்லோரும் செல்ல வேண்டும்.
குதிரை யாராலும் தாக்கப்படாமல் ஒருவிதத் தீங்கும் இல்லாமல் திரும்பி வரவேணும். பிறகுதான்
யாகத்தை நடத்தலாம் என்பது விதி).
பிறகு அரசன்
புரோஹிதரான ஜமதக்னியை வணங்கி புத்ரனைப் பெறுவதற்காக அச்வமேதயாகத்தை நடத்திவைக்க வேண்டுமென்று
ப்ரார்த்தித்தார். ஜமதக்னி அரசன் அபிப்ராயம் அறிந்து வஸந்தருதுவில் முனிவர்களுடன் யாகத்தை
ஆரம்பித்தார். உபாத்யாயருடன்கூட நல்ல லக்ஷணமுள்ள குதிரையை விடுத்தார். இந்த யக்ஞ்த்தை
தர்சிப்பதற்காக தத்வமறிந்த முனிவர்கள், அரசர்கள், ப்ராம்ஹணர், க்ஷ்த்ரியர், வைச்யர்,
எல்லோரும் பல தேசங்களிலிருந்து அங்கு வந்து கூடிவிட்டார்கள். சாஸ்த்ரமுறைப்படி யாவரும்
அதிசயிக்கத்தக்க முறையில் யாகம் நடந்தது. ஸுதர்சன ராஜாவின் தம்பியும் ஒப்பற்ற பலமுள்ளவனும்
தார்மிகனுமான ஸத்யகீர்த்தி அச்வமேதக் குதிரயை நடத்திச் சென்றான். முதலில் குதிரையை
கிழக்கு திசையில் நடத்திச் சென்று அங்குள்ளவர்கள் யாவரையும் ஸ்வவசப்படுத்தி பிறகு தென்
திசை சென்றான். அங்கு உள்ள அரசர்கள் அவனையும், குதிரையையும் வணங்கி அவனுக்கு உட்பட்டுவிட்டார்கள்.
பிறகு மனதில் சிறிதும் பயம் இல்லாமல் மேற்கு திசையில் பல இடங்களுக்குச் சென்று சிவசைலம்
வந்தான்.
சிவசைலபதி
தன் பக்தனை பரிசோதித்து ப்ரியத்தைச் செய்வதற்காக ஸுப்ரம்ஹண்யரைப் பார்த்து குதிரையைப்
பிடித்துக் கட்டு என்றார். ஈசனின் உத்தரவுப்படி ஸ்கந்தர் முனிகுமார வேஷத்துடன் அங்கு
வந்து விளையாட்டாக அச்வமேதக் குதிரையை மரத்தடியில் கட்டி விட்டார். ப்ராம்ஹணச் சிறுவனுடையச்
செய்கையைக் கண்டு ஸேநா வீரர்களும் ஸத்யகீர்த்தியும் ஆச்சர்யமடைந்தனர். ஹேமுனிகுமாரனே
தாமதியாமல் உடனே யாகக் குதிரையை அவிழ்த்துவிடு விளையாட்டு போதும் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு முருகன் ‘ வீரர்களாக தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள் என்னுடன்
போர்புரிந்து என்னை ஜயித்த பிறகு குதிரையை விடுவித்துக் கொண்டு போகலாம் இல்லாவிடில்
நான் குதிரையை விடுவிக்கமாட்டேன்’ என்றான்.
இதைக்
கேட்ட வீரர்கள் ‘இந்த ப்ராம்ஹண குமாரன் சக்தி ஆயுதத்துடன் யுத்தத்திற்கு வந்திருக்கிறான்
நம்மைக் கொல்ல வந்த இவனைக் கொல்வதால் பாபமில்லை’ என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு
கத்தி, சூலம், பரசு முதலிய ஆயுதங்களால் குஹனையடித்தனர். இவை அவனைத் தாக்கவில்லை மலைபோல்
அசைவற்று இருந்தான். பிறகு குஹன் ஸிம்ஹம் சிறிய மிருகங்களைப் போலவும், கருடன் பாம்புகளைப்
போலவும், சக்தி ஆயுதத்தால் ஸேநா வீரர்களையடித்தார். சக்தி ஆயுதத்தால் அடிக்கப்பட்ட
வீரர்கள் யாவரும் ஆயிரக்கணக்காக பூமியில் விழுந்தனர்.
இதைக்
கண்டு ஸத்யகீர்த்தி ப்ராம்ஹணபந்துவே சிறுவனே சீக்கிரம் குதிரையை விட்டுவிடு. இல்லாவிட்டால்
உன்னைக் கொல்வேன். அரசர்களுக்குக் கருணை எப்போதும் இருக்காது. என்று கூறி குஹன் பேரில்
ஐந்து அம்புகளை விட்டான். உடனே கோபம் கொண்ட மஹாஸேநர் சக்தி ஆயுதத்தால் அவனை அடித்தார்.
சக்தி ஆயுதத்தால் உடல் பிளக்கப்பட்டு ஸத்யகீர்த்தி பூமியில் விழுந்தான். உடனே மிஞ்சியிருந்த
வீரர்கள் மண்லூருபுரம் சென்று அரசரிடம் எல்லா வ்ருத்தாந்தங்களையும் கூறினார்கள்.
இதைக் கேட்ட அரசன் ஸுதர்சனன் சதுரங்க ஸைன்யத்துடனும்,
மந்த்ரிகளுடனும் அங்கு வந்தார். முனி வேஷம் தரித்தவனும் காந்தியுள்ளவனும் எல்லா லக்ஷணங்களும்
பொருந்தி கோடி மன்மதர்களின் அழகு வாய்ந்தவரும், எல்லாம் அறிந்தவரும், கருணைக்கடலும்,
ஈச்வரகுமாரனுமான குஹனைப் பார்த்து அவருடைய ஒளியால் தாக்கப்பட்டு ப்ரீதியுடன் கேட்டான்.
அழகு நிறைந்தவனும்
சிறுவனுமான நீ யார்? எந்த மஹர்ஷியின் குமாரன்? உண்மையைச் சொல்? இவ்வாறு கேட்ட அரசனைப்
பார்த்து குஹன் ‘அரசனே! யுத்தம் செய்ய வந்த வீரர்கள் வீணாக புகழுரைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்க
மாட்டார்கள். நான் யாராயிருந்தால் என்ன? நீ வீரனாக இருந்தால் யுத்தம் செய்’ என்று சொன்னான்.
இதைக் கேட்டு ஸுதர்சனன் கோபம் கொண்டவனாய் தன் சைன்யங்களை ஏவினான். தானும் அம்புகளை
எறிந்தான். தேரிலும் குதிரைகளிலும் யானைகளிலும் அமர்ந்து படைகள் பூமியை அதிர்ச்சியடையச்செய்து
கொல்ல எண்ணம் கொண்டவைகளாய் குஹனைஅ சுற்றி நான்கு புறமும் சூழ்ந்துகொண்டு எதிர்த்தன.
இதைக்கண்ட
பார்வதியின் குமாரனான குஹன் சக்தி ஆயுதத்தை எறிந்தான். அது தீப்பற்றிக்கொண்டு அந்த
நிமிஷமே ஸைன்யம் முழுவதையும் சாம்பலாக்கிவிட்டது. ஸைன்யம் முழுவதும் நாசமடைந்தபின்
ஸுதர்சனன் ஐந்த்ரம் , யாம்யம், ப்ராம்ஹம், கௌபேரம், வாருணம் முதலான எல்லா அஸ்த்ரங்களையும்
விட்டான். தன் சக்தி ஆயுதத்தால் அவைகள் எல்லாவற்றையும் அழித்தான் குஹன். தன் வில் ஒடிந்து
தேர், குதிரை, தேர்பாகன் அழிந்து சக்தி ஆயுதத்தால் மார்பு பிளக்கப்பட்டு அரசன் மூர்ச்சையடைந்து
கீழே விழுந்தார். வெகுநேரத்திற்குப்பின் ஞாபகம் வந்தது. ச்ரமமின்றி கம்பீரமான தோற்றத்துடன்
நிற்கும் குமாரனைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார். சிறிது நேரம் பரமேச்வரனை த்யானம் செய்து
கடநா நதியில் ஸ்நாநம் செய்து ஷடக்ஷர [பீஜஸஹிதமான பஞ்சாக்ஷர] மந்த்ரத்தை ஜபம் செய்து
பார்வதீ ஸ்கந்தர் விநாயகர் இவர்களுடன் கூடிய சிவசைலபதியை மாநஸ உபசாரங்களால் பூஜித்து
பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“துன்பங்களைப்
போக்குபவரும், ஒளிஸ்வரூபரும் பசுக்களுக்கு [ஜீவர்களுக்கு] பதியும் யாகம் செய்கிறவர்களுக்கு
தலைவரும் யக்ஞபதியும் மங்கள ரூபியும் அம்பிகையுடனும் கணங்களுடனும், புத்ரர்களுடனும்
கூடியவருமான உமக்கு நமஸ்காரம், மஹாதேவா, சங்கரா, சரணமடைந்த என்னை கருணையால் காப்பாற்றவேணும்”
இவ்வாறு துதித்து விட்டு பக்திபரவசராய் சிவஸன்னிதியில் இருந்தார்.
அப்பொழுது
அழகுக்கு இருப்பிடமான சம்புவானவர் கைலாஸாசலம் போன்ற வெண்மையான வ்ருஷபவாஹனத்தில் அமர்ந்து
நந்தி, குண்டோதரன் முதலான எல்லா கணங்களுடன் அரசனுக்கு முன்னால் தோன்றி தர்சனம் கொடுத்து
தாமரை போன்ற முக மலர்ச்சியுடன் அரசனை ஆனந்தமுறச்செய்து மேகம்போல் கம்பீரமாகக் கூறினார்.
ஒன்பதாவது அத்யாயம் முற்றும்.
No comments:
Post a Comment