Wednesday, January 28, 2015

சிவசைலம் - 12

பன்னிரண்டாவது அத்யாயம்
ஸூதர் சொல்கிறார்:- இப்பொழுது பாபநாச லிங்கத்தின் ஆவிர்பாவத்தைச் சொல்கிறேன். முன் ஒரு ஸமயம் மஹாதேவர் பார்வதியை கல்யாணம் செய்து கொள்ளத் தீர்மானத்தார். மூவுலக ஜனங்களுக்கும் கூடிய ஹிமாலயத்தில் பார்வதி கல்யாண மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக நடந்தது. கல்யாணத்தை தரிசிப்பதற்காக பாரதவர்ஷத்திலுள்ள ஸ்தாவரஜங்கமப்ராணிகள் யாவரும்  அங்கு கூடிவிட்டார்கள். ப்ராணிகளின் பாரத்தால் பூமியின் வடபாகம் கீழே இறங்கி தென்பாகம் மேலே எழும்பிவிட்டது. இதைப்பார்த்து மஹாதேவர் எந்த உபாயத்தால் தென்பாகம் கீழே தாழ்ந்து பூமி ஸமமாகும்என்று ஆலோசித்து அகஸ்த்யரைப் “பூமி ஸமநிலையடைவதர்காக நீர் தென் திசை செல்ல வேண்டும் எதிர் வார்தை ஒன்றும் பேசாமல் சீக்கிரம் செல்ல வேண்டும். பூமியை ஸமமாக ஆக்குகிறவர் உன்னைத் தவிர வேறு ஒருவருமில்லை.” என்று சொன்னார்.

இவ்வாறு ஈச்வரன் சொன்னதும் கல்யாண உத்ஸவத்தை பார்க்க முடியாமல் போய்விடுமே என்ற வருத்தமுள்ள போதிலும் சிவனுடைய உத்தரவை சிரஸால் ஏற்றுக் கொண்டு ஆலோசித்தார். சிவனுடைய உத்தரவையும் நிறைவேற்ற வேண்டும். கல்யாண உத்ஸவத்தையும் தர்சிக்க வேண்டும் இந்த இரண்டும் நிறைவேற என்ன உபாயம் என்று ஆலோசித்து ஒன்றும் தோன்றாமல் மனம் ஊசலாடியது.

இவ்வாறு அகஸ்த்யர் கவலையுற்றிருக்கும் போது மஹாதேவர் ‘மஹர்ஷே ! கவலையைவிடும். சைத்ரமாதத்தின் ஆரம்பத்தில் விஷுவன்று உமக்கு கல்யாண வைபவத்தைக் காட்டுகிறேன். சீக்கிரம் கிளம்ப வேண்டும் விந்த்ய மலையின் கர்வத்தையடக்கிவிட்டுச் செல்லும் தென்கடலின் கரையில் த்ரிகூடம் என்ற மலை உள்ளது. அதன் சமீபத்தில் கீழ்பக்கத்தில் கடநா நதியின் தென்கரையில் அனாதி சிவசைலேசர் என்று ப்ரஹ்மாவால் பூஜிக்கப்பட்டு வாஸம் செய்கிறேன். அங்கு சென்று என்னை பூஜை செய்யும். அங்கு வ்ருத்தரான அத்ரி முனிவரை தர்சனம் செய்து அவரிடம் அனிமதி பெற்றுக்கொண்டு மலய பர்வதம் சென்று அங்கு வெகு காலம் வாஸம் செய்யும். இந்த கங்கையும் என் உத்தரவால் உன் ஸ்மீபத்தில் தாம்ரபர்ணீ என்ற பெயருடன் தோன்றுவாள். மலயபர்வதத்தின் வடபக்கத்தில் தாம்ரபர்ணீ நதிக்கு மேற்கே உமது ஸந்தோஷத்திற்காக பாபநாசேச்வரர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக தோன்றி அங்கு எப்பொழுதும் ஸாந்நித்யம் கொண்டு வாஸம் செய்வேன். அங்கு தினமும் நதியில் ஸ்நாநம் செய்து விதிப்படி என்னை பூஜை செய்யும். அங்கு சித்திரை மாத ஆரம்பத்தில் விஷுவன்று என்னுடைய கல்யாண ஸ்ந்தர ரூபத்தைக் காட்டுகிறேன். உடனே புறப்பட்டுச் செல்லும் தாமதம் வேண்டாம்’ என்று சொன்னார்.

இதைக் கேட்டு அகஸ்த்யர் பரமசிவனின் உத்தரவை தலையால் ஏற்றுக் கங்கையை எடுத்துக்கொண்டு மலயபர்வதம் சென்றார். நடுவில் சிவசைலேசரை தர்சித்து பக்தியுடன் பூஜித்து அத்ரி முனிவரைக் கண்டு வணங்கி அனுமதி பெற்று கடநா நதியில் ஸ்நாநம் செய்து மலயமலைக்கு சென்றார். அங்கு நுழைந்ததும் மேலே எழும்பியிருந்த தென்பாகம் தாழ்ந்து அகஸ்த்யரின் மஹிமையால் பூமி ஸமநிலையையடைந்தத்து. அப்பொழுது அம்மலையில் கங்கையும் தாம்ரபர்ணீ என்ற பெயருடன் ஆவிரபவித்தாள். பரமசிவன் அகஸ்த்யருக்கு ப்ரீதியை உண்டு பண்ணுவதர்காக பாபநாசேசர் என்ற பெயருடன் ஸ்வயம்பூலிங்கமாக ஆவிர்பவித்தார். அகஸ்த்யர் தாம்ரபர்ணீ நதியில் ஸ்நாநம் செய்து பாபநாசேச்வரரை பலவித ஸ்தோத்ரங்களால் துதித்து ஆனந்தமடைந்தார். வருஷாரம்பத்தில் சைத்ரமாஸத்தின் ஆதியில் சித்திரை விஷுவன்று பார்வதியுடன் கூட கல்யாணவேஷத்தில் ப்ரம்ஹாதிதேவர்களால் துதிக்கப்படும் சிவனை தர்சித்து நிறைந்த மனதுடன் பிறவிப்பயனைப்பெற்று க்ருதார்தரானார்.

ஹே விப்ரச்ரேஷ்டர்களே !பாபநாசேச்வரர் தோன்றிய வரலாறு உங்களுக்குச் சொல்லப்பட்டது. பாபநாசேச்வரரின் மாஹாத்ம்யம் முழுவதையும் யாரால் வர்ணிக்கமுடியும்? மூன்று லிங்கங்களின் உத்பத்தி என்னால் கூறப்பட்டது மூன்று லிங்கங்களுள் சிவசைலேசலிங்கம் சிறந்த்தது. எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருப்பதாலும் ப்ரம்ஹாதிகளால் பூஜிக்கப்பட்டதாலும் மேற்கு முகமாக இருப்பதாலும் ஸ்ரீசிவசைலேசர் மேலானவராகக் கருதப்பட்டுள்ளார்.

இந்த சிவசைல ஸ்தலத்திற்கு ஸமமாக மற்றொறு ஸ்தலம் இருப்பதாக எவன் சொல்கிறானோ அவன் பாபத்தை சித்ரகுப்தனும் எண்ணமுடியாது. எவன் சிவசைல ஸ்தலத்தில் நித்யமாக வாஸம் செய்கிறானோ அவனுடைய புண்யங்களை எண்ணுவதற்கு சித்ரகுப்தனுக்கும் சக்தியில்லை. மூவுலகிலும் சிவசைலத்துக்கு ஸமமான க்ஷேத்ரமில்லை. சிவசைலேசலிங்கத்திற்கு எவன் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்கிறானோ அவன் பிள்ளை பேரன்களுடன் வெகுகாலம் ஸுகமாக வாழ்வான். சிவசைல க்ஷேத்ரத்திற்கு எவன் ஜீர்ணோத்தாரம் செய்கிறானோ அந்த புண்யசாலிக்கு எல்லா ஸித்திகளும் கையில் கிடைத்தமாதிரி தான்.    

இந்த சிவசைலமாஹாத்ம்யத்தில் ஒரு ச்லோகமோ அரை ச்லோகமோ எவன் ச்ரவணம் செய்கிறானோ  அவன் இவ்வுலகில் பலவித போகங்களை அனுபவித்து சிவசைலபதியை அடைவான். 12 அத்யாயம் கொண்ட சிவசைலமாஹாத்ம்யத்தை எவன் ப்ராம்ஹணர்களுடன் சொல்கிறானோ அவன் கல்யாணீசரின் அருளால் எல்லா அபீஷ்டங்களையும் அடைவான். எவன் 12 அத்யாயங்களை எழுதி பூஜிக்கிறானோ அவனுக்கு கல்யாணீசரின் அனுக்ரஹத்தால் ஸந்தான வ்ருத்தி ஏற்படும். எவன் 12 அத்யாயங்களையும் ச்ரவணம் செய்கிறானோ அவன் சிவசைசேசர்தான். இதைப் பற்றி விசாரிக்கவே வேண்டாம். சிவசைலேச லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை நடக்கும்படி எவன் ஏற்பாடு செய்கின்றானோ அவனுடைய இஷ்டங்களெல்லாம் நிறைவேறும். ஸந்தேஹமில்லை. இந்த 12 அத்யாயங்களை அமாவாஸை பௌர்ணமீ ஆகிய பர்வகாலங்களில் எவன் படிக்கிறானோ மூவுலகமும் அவனுக்கு வசமாகிவிடும் ஸம்சயமில்லை.

எவன் சிவனிடம் பக்தியுடன் இந்த சிவசைலபதியின் கதையை கேட்கிறானோ சொல்கிறானோ அவன் சிவசைலேசரின் க்ருபைக்கு பாத்ரமாவான். சிவனைப் போலவே இவனுடைய சரணங்களையும் எல்லோரும் வணங்குவார்கள். சிவசைல புண்யஸ்தலம் சிவஸாயுஜ்ய பலனைத்தரும் பெருமையுள்ளது. ஆகையால் இதன் வைபவம் முழுவதையும் வர்ணிப்பதற்கு சிவன் ஒருவருக்கு தான் ஸாமர்த்யமுண்டு.

ஸ்னேகபுரியை (அன்பூர் = ஆம்பூர்) வணங்குகிறேன். கல்யானி அம்பிகையை வணங்குகிறேன். கடநா நதியை வணங்குகிறேன்.

     பன்னிரண்டாவது அத்யாயம் முற்றும்.

   சிவசைல மாஹாத்ம்யம் முற்றுப் பெற்றது. 

No comments:

Post a Comment