Tuesday, January 27, 2015

சிவசைலம் - 6

ஆறாவது அத்யாயம்.
சௌநகாதி முனிவர்கள் ஸூதரைப் பார்த்துக் கூறுகிறார்கள்:-- முனிச்ரேஷ்டரே அநாதி சிவசைலேசர் என்று சம்புவால் சொல்லப்பட்டதாக உங்கள்முகமாகக் கேள்விப்பட்டோம். அது எப்படி? அது எப்படி அநாதியாயுள்ளது? இப்பொழுது தத்வத்தை சொல்ல வேணும். மேலும் எந்த யுகத்தில் ஹரன் யாருக்கு ப்ரியத்தைச் செய்வதர்காகத் தானாகவே எப்படி ஸ்வயம்புலிங்கமாகத் தோன்றினார்? யாரால் பூஜிக்கப்பட்டார்? எல்லாவற்றையும் சொல்ல வேணும்.
 இவ்வாறு கேட்கப்பட்ட ஸூதமுனிவர், சௌனகாதி ரிஷிகளை ஸந்தோஷப்படுத்திக்கொண்டு முன்காலத்தில் நடந்த சிவமாஹாத்ம்யத்தை சொன்னார். உலகில் சிவபக்தர்களான நீங்கள் விஷேசமாக பாக்யசாலிகள். ஏனெனில் புதிதுபுதிதான சிவகதைகளை அடிக்கடி கேட்கிறீர்கள். கல்பத்தின் ஆரம்பத்தில் பகவான் ப்ரம்ஹா உலகை ஸ்ருஷ்டிக்க முயற்சித்தும் சக்தியில்லாதவராக மோஹமடைந்தார். ப்ரம்ஹாவுக்கு கவலை ஏற்பட்டது. உலகைப் படைக்கும் காரியத்தில் ஏவப்பட்டிருக்கிறேன். நான் என்ன செய்வென்? இப்பொழுது ஸ்ருஷ்டியில் என் புத்தி செல்லவில்லையே ! அந்த புத்தி மழுங்கிவிட்டதே? என்ன காரணம்? இவ்வாறு அவர் ஆலோசிக்கும் பொழுது அசரீரி வாக் உண்டாயிற்று.
  “ஏ! ப்ரம்ஹாவே கவலைப்படவேண்டாம். தெற்கு ஸமுத்ரத்தின் கரையில் மலயபர்வதத்தின் வடக்குக் கரையில் “சிவசைலம்” என்ற ஒரு பர்வதம் இருக்கிறது. அதற்கு கிழக்கு பாகத்தில் இருந்து கொண்டு தவம் செய்யும். அது மிகவும் புன்ண்யமான் ப்ரதேசம் . மனதிற்கு சுத்தியை {சாந்தியை}க் கொடுக்கக்கூடியது. அங்கு லிங்க வடிவமாக ஆவிர்பாவம்செய்து ஸ்ருஷ்டி செய்வதற்குரிய உபாயத்தைச் சொல்கிறேன்”.
  ப்ரம்ஹா அதைக்கேட்டு மிகவும் ஆச்சர்யத்தை அடைந்தார்.! தேவச்ரேஷ்டரான ப்ரஹ்மா அங்கு சென்று கடுமையான தபஸ்ஸைச் செய்தார். மிகவும் கருணாநிதியான பரமேச்வரரும் லிங்கரூபியாக ஆவிர்பவித்தார். ப்ரஹ்மா தன்முன் ஸ்வயமாக ஆவிர்பாவம் அடைந்த லிங்க பரமேச்வரரைப் பார்த்து மயிர்க் கூச்ச அடைந்த சரீரத்துடன் ஸ்தோத்ரம் செய்ய ஆரம்பித்தார்.
ப்ரஹ்மா கூறுகிறார் :- தாங்கள் எப்பொழுதும் மங்களத்தைச் செய்பவர். ( ஸர்வமங்களா என்று சொல்லக் கூடிய ) அம்பாளுடன் கூடியவர். மிகவும் ச்ரேஷ்டமானவர். பரமாத்ம ஸ்வரூபர் தாங்கள் தான்.
தன் ஆத்மாவில் அளவற்ற குணங்கள் மறைவாக இருந்து கொண்டே மிகவும் பிரகாசமான மஹிமையுடவர். ஸர்வக்ஞராக ப்ரஹ்மஸ்வரூபியாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். தாங்கள் எப்பொழுதும் கலப்பற்ற ஸத்வகுணம் பொருந்தியவர். உலகங்களுக்கெல்லாம் மேலானவர். (ஜங்கமஸ்தாவரமான ஸகல உலகங்களையும் வியாபித்தவர்.)                 
அணுவிலும் அணுவானவர். பெரிதுக்கும் பெரிதானவர். தங்களுக்கு நமஸ்காரம்.
இவ்வாறு பரமேச்வரனை ஸ்தோத்ரம் செய்தார். ப்ரஹ்மா ஸ்ருஷ்டி ஸாமர்த்யத்தை அடைந்து முன் போல் ஜகத்தை ஸ்ருஷ்டி செய்து மிகவும் ஸந்தோஷமடைந்தார். (இங்கு ப்ரஹ்மா பரமேச்வரனை வணங்காமல் ஒரு கார்யத்தை ஆரம்பித்ததனால் இந்தமாதிரி ஏற்பட்டதென்று தெரியவருகிறது. எந்த கார்யம் ஆரம்பித்தாலும் ஈச்வரனை ப்ரார்த்தித்துவிட்டுத் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.)
அம்பிகை – பரமேச்வரர் இருவருக்கும் ப்ரஹ்மாவானவர் ஆலயம் நிர்மாணம் செய்தார். 16 உபசாரங்களால் பூஜை செய்தார். வஸந்த ருதுவின் ஆரம்பத்தில் சிவசைலத்தில் த்வஜாரோஹணத்துடன் மஹோத்ஸவம் ப்ரஹ்மாவினால் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று உலகங்களிலிருக்கும் ஜனங்களால் உத்ஸவம் மிகவும் கொண்டாடப்பட்டது. உத்ஸவ முடிவில் அவப்ருத ஸ்நானம் செய்து மிகவும் பக்தியுடன் பூஜித்துத் தண்டம் போல் விழுந்து பரமேச்வரனை நமஸ்காரம் செய்து ப்ரஹ்மா சொன்னதாவது:-
“ கல்பத்தின் ஆரம்பத்தில் சிவசைலம் என்ற பிரதேசத்தில் எனக்குப் பரமேச்வரனான நீர் ஸ்வயம்பூ லிங்க ரூபமாக ஆவிர்பவித்து ஸ்ருஷ்டி செய்யும் உபாயத்தைச் சொன்னீர். அதனால்
“ அநாதி சிவசைலேசர் “ என்ற ப்ரஸித்தியுடன் நீர் விளங்க வேணும். உம் ஆக்ஞைகளை நிறைவேற்றுவதற்காக என் இருப்பிடமான ப்ரஹ்ம லோகம் போகிறேன் “ என்று விடை பெற்றுக் கொண்டு ப்ரஹ்மா மிகவும் க்ருதார்த்தராகத் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். அநாதி சிவசைலேசர் இவ்விதமான மஹிமையுள்ளவர். ஆதி காலத்திலேயே இது ஏற்பட்டிருப்பதால் “ஆதி சைலேசர்” என்ற பிரஸித்தியும் ஏற்பட்டது. முனிவர்களே, தாங்கள் எதெதைக் கேட்டீர்களோ அவைகளையெல்லாம் சொல்லி விட்டேன்.

     ஆறாவது அத்யாயம் முற்றும்.

No comments:

Post a Comment