நான்காவது அத்யாயம்
அத்ரி முனிவர்: - கங்கையை சிரஸ்ஸில்
தரித்தவரும் விஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவரும் ஸ்கந்தரின் மனதிற்கு ஆனந்தம்
தருபவரும் போற்றத்தக்கவரும், தேவமுனி
ஸமூஹத்தால் ஸேவிக்கப்பட்டவரும்
ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிக்கும் சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
( சிவசைலத்திற்கு ஸ்ரீசைலம் என்ற
பெயர் உண்டு. இதன் விபரம் அத்யாயம் 7, ஸ்லோகம் 27ல் காணலாம். இந்த ஸ்தோத்ரத்தில்
ஒவ்வொரு ஸ்லோகமும் நம: சிவாய என்ற பஞ்சாக்ஷரத்தில் முடிவடைவதால் இது வேதத்திற்கு
ஒப்பானது. இந்த சிவசைல நாதாஷ்டகத்தில் விராஸத்தைக் காணலாம். )
இந்திரனால் பூஜிக்கப்பட்ட
பாதங்களுள்ளவரும், விருஷபத்தில் அமர்ந்திருப்பவரு, மழை முதலான தன்மைகளைச் செய்பவரும்,
தர்மஸ்வரூபரும், வளர்ச்சி (பிறப்பு,இருப்பு,வளர்ச்சி,மாறுதல்,குறைவு,நாசம் என்னும்
ஆறு விகாரங்களற்று எப்பொழுதும் ஏகரூபமாயிருப்பவர்.)
முதலான தோஷங்களற்றவரும்
சித்ஸ்வரூபியாக விளங்குபவரும் ஸ்ரீசைலபதியுமான சிவனாகிய உமக்கு நமஸ்காரம்.
கைலாஸ மலையில் லீலா ரூபமான
காரியங்களைச் செய்வதில் பிரியமுள்ளவரும், மலையரசனின் குமாரியான பார்வதியுடன்
கூடியவரும், வராஹ உருவமெடுத்த விஷ்ணுவால் நேரில் பார்க்கமுடியாமல் ஊகித்து
அறியப்பட்டவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிக்கும் மங்களரூபியான உமக்கு
நமஸ்காரம்.
எல்லாருக்கும் ஈச்வரனும், எல்லா
ஆகமங்களாலும் போற்றப்பட்டவரும், பிரளய காலத்தில் எல்லோரையும் அழிப்பவரும், எல்லா
பிராணிகளும் செய்யும் கர்மாக்களுக்கு
பலனையளிப்பவரும், எல்லா உருவமாக
இருப்பவரும்,
எல்லாருடைய துன்பத்தையும்
போக்குபவரும் ஸ்ரீசைல மலையின் அடிவாரத்தில் வஸிப்பவருமான மங்களரூபியான உமக்கு
நமஸ்காரம்.
பக்தர்களிடம் ப்ரீதி கொண்டவரும்
பக்தர்களின் பயத்தைப் போக்குபவரும் பர்கரும் மனதில் த்யானம் செய்பவர்களுக்கு ஸுகத்தைத்
தருபவரும் ஒளியுள்ள கிரீடம் கடகம் இவைகளையணிந்தவரும் பிறவியைப் போக்குபவரும்
ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவருமான மங்கள ரூபியான உமக்கு நமஸ்காரம்.
துக்கத்தை போக்குபவரும்
(துஷ்டர்களை கதறச் செய்பவரும்) உருவமற்றவரும் ரமாபதியான விஷ்ணுவின் பிரீதிக்கு
இருப்பிடமானவரும் ராமரால் பூஜிக்கப்பட்டவரும், ராகம் முதலிய தோஷங்களற்றவரும்
மேலானவற்றிற்கும் மேலானவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவருமான சிவனாகிய
உமக்கு நமஸ்காரம்.
காமனைகளை நிறைவேற்றும் ஈசனும்
கலியின் தோஷங்களை போக்குபவரும் காலஸ்வரூபியும் காலத்தால் மாறுதலடையாதவரும்
மேருமலையை வில்லாக கொண்டவரும் ஸ்ரீசைலமலையின் அடியில் வஸிப்பவருமான சிவனுக்கு
நமஸ்காரம்.
உமையுடன் கூடியவரும் சந்திரன்,
ஸூரியன்,அக்னி இவர்களை கண்களாகக் கொண்டவரும் பிராமண சிரேஷ்டர்களால் ஸோம யாகத்தால்
பூஜிக்கப்பட்டவரும் ஸோமனுக்கு ஈசுவரரும் தேவர்களால் வணங்கத்தக்க திருப்பாதங்கள்
உள்ளவரும் ஸ்ரீசைல மலையின் அடியில் வஸிப்பவரும் சிவனுமாகிய உமக்கு நமஸ்காரம்.
ஹே தேவ மஹாதேவ, எப்பொழுதும்
இருப்பவரே, மங்களத்தருகின்றவரே, எல்லா தேவர்களுக்கும் தலைவரே, எல்லா தேவர்களாலும்
பூஜிக்கப்பட்டவரே,அழிவற்றவரே, உருவமற்றவரே, உலகங்களை தாங்குகிறவரே,
குறைவில்லாதவரே, உலகத்தாரால் வணங்கத்தக்க ஈசனே, சிரேஷ்டமான ஸர்ப்பங்களை ஆபரணமாகக்
கொண்டவரே, கெளரீபதியே, சம்போ, அர்த்தசந்திரனை சிரஸில் அணிந்தவரே, கோடி ஸூரிய
ப்ரகாசமுள்ளவரே, அழிவற்றவரே, தோஷமற்றவரே, தலைவரே, கருணைக்கடலே, பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவரே, தாண்டமுடியாத ஸம்ஸாரக் கடலிலிருந்து கரை ஏற்றுபவரே,
பிரபோ, தாங்கள் மேன்மையுடன் விளங்க வேண்டும்.
தேவர்களின் ஈசனே, ஸம்ஸாரத்தால்
பீடிக்கப்பட்டு வருந்துகிற எனக்கு அருள் புரிய வேணும். பரமேச்வரா! எப்பொழுதும்
இங்கு ஸாந்நித்யம் கொண்டு என்னைக் காப்பாற்ற வேணும்.
இவ்வாறு துதிக்கப்பட்ட சந்திரனை
சிரஸ்ஸில் அணிந்த, க்ஷேமத்தைச் செய்கிற மஹாதேவர்,
ஹே த்விஜர்களே, அம்முனிவரை
ஸந்தோஷப்படுத்திக் கொண்டு கம்பீரமான வாக்கால் சொன்னார்.
பிரம்ம ரிஷியே! உன்னிடம்
ஸந்தோஷமடைந்துள்ளேன். உண்மையான யோகிகளல்லாதவர்கள் என்னை ஸந்தோஷப்படுத்த முடியாது.
வரம் கேள், உனக்கு நன்மை உண்டாகட்டும். உன் மனதில் விரும்பியதைக் கேள்.
எல்லாவற்றையும் தருகிறேன்.
ஸூதர் கூறுகிறார் :- இவ்வாறு
பரமேஷ்டியான சம்புவால் கூறப்பட்ட த்விஜ சிரேஷ்டரான அத்ரி முனிவர்
ஸர்வபூதங்களுக்கும் ஈசுவரனான சிவனை வணங்கி அஞ்ஜலி பந்தம் செய்து கொண்டு சொன்னார்.
பகவானே, ஸர்வபூதேசனே, பக்தர்களின்
அபீஷ்டங்களைக் கொடுப்பவனே, சம்போ இப்பொழுது நான் உங்களை தரிசித்த ரூபத்துடன் இங்கே
எப்பொழுதும் தாங்கள் ஸாந்நித்யம் செய்ய வேண்டும். இங்கு வஸிக்கும் ஜனங்களுக்கு
போகத்தையும் மோக்ஷத்தையும் அருள வேண்டும். இங்கே செய்யும் ஜபம், ஹோமம், தானம் இவை
குறைவற்றதாக இருக்க வேணும்.
தேவர்களால் பூஜிக்கப்பட்டவரே,
த்ரிகூடம் என்ற மலை இன்றுமுதல் உலகில் சிவசைலம் என்று ப்ரஸித்தியடையட்டும்
எனக்கும் என் சிஷ்யனுக்கும் எப்பொழுதும் உம்மிடம் வேறு விஷயத்தில் மனம் செல்லாத
பக்தி இருக்கட்டும். இது தான் என்னுடைய உயர்ந்த வரம்.
பிராமண சிரேஷ்டர்களே, இவ்வாறு முனிவரால்
வேண்டப்பட்ட மகாசம்பு புத்திமானாக பிரம்ம குமாரரான அந்த அத்ரிமுனிவருக்கு கேட்டது
எல்லாவற்றையும் கொடுத்தார். ஸந்தோஷத்தால் தழதழத்த குரலில் முனிவரைப் பார்த்துச்
சொன்னார்.
பிரஹ்மரிஷியே, உம்மால் செய்யப்பட்ட
இந்த ஸ்துதியால் உம்மிடம் ஸந்தோஷம் கொண்டிருக்கிறேன். மிகவும் ரஹஸ்யமான ஒரு விஷயம்
சொல்லப் போகிறேன். கேளும்.
கடனை என்ற பெயருள்ள கங்கையினுடைய
அழகியதும் சிறப்புவாந்ததுமான தென்கரையில் மூன்று இடங்களில் எப்பொழுதும்
லிங்கத்தில் சிறப்பாக வஸிக்கிறேன்.
No comments:
Post a Comment