Tuesday, January 27, 2015

சிவசைலம் -2

      இரண்டாவது அத்யாயம்
செளனகாதி ரிஷிகள் கேட்கிறார்கள்: - ஸூத முனிவரே! தாமரை போன்ற தங்கள் திருமுகத்திலிருந்து வெளிவருகிற புனிதமான சிவகதைகளைக் கேட்டு திருப்தி ஏற்படவில்லை. ஸாம்ப பரமேச்வரனாகிய சிவசைலநாதரின் மஹாத்ம்யம் கேட்கக்கேட்க புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. சிவசைலம் என்ற பெயர் எப்படி வந்தது?. ஸர்வக்ஞராயும் முனிச்ரேஷ்டராயும் குலபதியாகவும் விருத்தராயும் தபோதனராயும் உள்ள அத்ரி முனிவரின் மஹிமை என்ன?. அவர் எவ்விதமான தவம் செய்தார்?. அவர் சிஷ்யர் எவ்விதமானவர்?. எவ்வித தவத்தால் ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கும் பரம்சிவன் ஸந்தோஷமடைந்து அவர்முன் தோன்றினார்?. சிவஞானத்தைக் கொடுக்கக்கூடிய இவை எல்லாவற்றையும் தயவு செய்து கூற வேண்டும்.
இதைக்கேட்டு ஸூத முனிவர் கூறுகிறார்:-
த்ரிகூடம் என்ற பர்வதம் பிரஸித்தமானது. ஆகாயத்தைத் தொடும்படியான விசாலமான அநேக சிருங்கங்களுடன் கூடியது. பலவித மரங்களோடும் அருவிகளோடும் யானைகளோடும் பலவித பக்ஷிகளோடும் வீணை வாசிப்பதில் தேர்ச்சியுள்ள கின்னரர், கிம்புருஷர்கள் நாட்யமாடும் அப்ஸர ஸ்த்ரீகள், வித்யாதரர் முதலான தேவகணங்கள் கையில் ஜபமாலையுடன் ஜபம் செய்து கொண்டும், “ நான் சித்ஸ்வரூபம் “ என்று த்யானம் செய்து கொண்டுமிருக்கும் யதிகள், யோகிகள், முனிவர்கள் இவர்களுடன் கூடியது. இங்கு தான் கஜேந்திரனின் காலை முதலை பிடித்த பொழுது விஷ்ண்னு சக்ரபாணியாக வந்து காப்பாற்றினார்.
புண்யசாலிகள் வாழும் இந்த பர்வதத்தில் அத்ரி மஹரிஷி அநஸூயையுடனும் சிஷ்யருடனுடன் கூடி கிருஹஸ்த தர்மங்களைச் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். ஒரு சமயம் அவருடைய சிஷ்யன் கோ ரக்ஷகன் கங்கா ஸ்நானம் செய்ய யாத்திரை செல்ல வேண்டுமென்று ப்ரார்த்திக்க அத்ரி முனிவர் அவனுக்கு ஞானம் ஏற்படுவதற்காக ஓர் உபாயத்தை ஆலோசித்தார். பிறகு தன் சிஷ்யனின் கோரிக்கை நிறைவேறுவதற்காகவும் அங்கு வாழும் ஜனங்களின் க்ஷேமத்திற்காகவும் தன் கையில் இருக்கும் தண்டத்தால் பூமியில் தட்டவே அங்கிருந்து தீர்த்தம் கிளம்பியது.
அதற்கு அத்ரி தீர்த்தம் என்று தன் பெயரைக் கொடுத்து கங்கையை அழைத்தார். உடனே அங்கு வந்த கங்கையை தான் நிர்மாணித்த ஜலத்துடன் சேர்த்து விட்டார். இதனால் (கடனாத்)
அந்த தீர்த்ததிற்கு ‘ கடநா ‘ என்ற பெயர் ஏற்பட்டது. தைமாதம் புஷ்ய நக்ஷத்ரத்தன்று அங்கு கங்கை வந்து சேர்ந்த படியால் அங்கு தைப்பூசத்தன்று ஸ்நானம் செய்வது சிலாக்யமாகச் சொல்கிறார்கள்.
வெகுகாலத்திற்குப்பின் கங்கையானவள் “ நான் ஸமுத்ரம் செல்ல ஆசைப்படுகிறேன். அனுமதி தர வேண்டும் “ என்று பிரார்த்தித்தாள். முனிவரும் எப்பொழுதும் ’ கடனை ’ என்ற பெயரை தாங்கிக் கொண்டு ஸமுத்ரம் செல்வாயாக! என்று அனுமதி அளித்தார். உடனே கங்கை ’ கடனா ‘ என்ற  பெயருடன் கிழக்கு திசை நோக்கிச் சென்றாள். வழியில் இரு கரைகளிலும் உள்ள பாக்கு, தென்னை, பலா, மருது, மா, நெட்டலிங்கம்,கூந்தல் பனை, பில்வம், அத்தி, எலுமிச்சை முதலான விருக்ஷங்கள் அவளுக்கு ஆபரணங்களாக அமைந்தன. இரு கரைகளிலும் பாபமற்ற முனிவர்களால் சிவாலங்களும் விஷ்ணு ஆலயங்களும் அமைக்கப்பட்டன. தாயார் குழந்தைகளைப் போல தனது தீர்த்தத்தால் எல்லாப் ப்ரஜைகளையும் ரக்ஷித்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் அந்தப் பூமியைப் பரிசுத்தம் செய்து கொண்டும் கங்கை ”கடனை” என்ற பெயருடன் கிழக்கு திசையில் ஸமுத்ரத்தை அடைந்தாள்.
” கடநா “ என்ற பெயருடன் தன் பர்த்தாவான ஸமுத்திரத்தை நோக்கிச் செல்கிற கங்கை என்ற பெண்ணுக்கு அந்த நதியில் மலர்ந்த தாமரை முகமாகவும் கருநெய்தல் மலர்கள் கண்களாகவும் சக்ரவாக பக்ஷிகள் ஸ்தநங்களாகவும்  ராஜஹம்ஸங்களின் வரிசையாகிற தோழிகளுடன் சூழப்பட்டவளாய் விளங்கினாள். ஸாரஸ பக்ஷிகளின் நாதம் ஒட்டியாண ஒலியாகவும் செந்தாமரை பாதமாகவும் இருகரைகளிலுமுள்ள மரங்கள் குண்டலங்களாகவும், சுற்றி வரும் வண்டுகள் கேசங்களாகவும் வெண்மையான நாணல் மேலாடையாகவும் விளங்கியது.
வஹ்நீச்வரர், ராமேச்வரர், ஸுந்தரேசர், இவர்களின் ஆலயங்களுக்கு தெற்கே, வாலிநாதருக்கும் ரோமச முனிவரால் பூஜிக்கப்பட்ட பிரஹ்மவிருத்தபுரம் என்னும் பிரம்மதேசத்திற்கும் அங்குள்ள கைலாஸேச்வரருக்கும் ச்வேதேச்வர லிங்கத்திற்கும் வடக்கே கிழக்கு திசை நோக்கிச் சென்று புடார்ஜுநேச்வரலிங்கத்திற்கு மேற்கே தெற்கு நோக்கி பிரவஹித்தாள். அங்கு மிக கர்வத்துடன் ஓடிவரும் கடநா நதியைப் பார்த்து புடார்ஜுநேச்வரர், அவள் அஹங்காரத்தையடக்குவதற்காக ஹுங்காரம் செய்தார். அதனால் கடனை என்ற கங்கை வெகுகாலம் அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தாள். பிறகு ’தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஈசனே! ஜகந்நாதா,அர்ஜுநேச்வரா, பார்வதிநாத, பக்தர்களின் இஷ்டங்களைத் தருபவரே உனக்கு நமஸ்காரம். என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று துதித்து வெகுகாலம் தவம் செய்தாள்.
ஸ்தோத்ரத்தாலும் தவத்தாலும் சந்தோஷமடைந்த புடார்ஜுநேச்வரர் அவள் முன் தோன்றி “ அகஸ்தியர் இங்கு வந்த பின் தாம்ரபர்ணீ என்று ப்ரஸித்தமான நதி வரப்போகிறாள். அப்பொழுது அவளுடன் சேர்ந்து நீயும் செல்லலாம். “ என்று கூறிவிட்டு ஸ்வயம்பூலிங்கத்தில் மறைந்தார். ( இதனால் தாம்ரபர்ணீ நதி வரும் வரை கடநா நதி ப்ரவாஹம் புடார்ஜுனத்திற்கு அப்பால் செல்லாமல் அங்கேயே பூமிக்குள் சென்று மறைந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.)
தர்ம தத்வமறிந்த அத்ரி மாமுனிவர் சிவனிடம் தன் மனதைச் செலுத்தி சிஷ்யருடன் முக்காலங்களிலும் சைலேச லிங்கத்தைப் பூஜித்து வந்தார். மஹாபுத்திமானான சிஷ்யன் கோரக்ஷகன் சிவத்யானத்துடன் குரு சுச்ரூஷையில் ஈடுபட்டு திவ்ய ஞானமடைந்தான். இவ்விதமிருந்து வரும் பொழுது மஹாபுத்திமானான மஹரிஷி அத்ரி முனிவருக்கு அகஸ்த்ய முனிவரை தரிசிக்க வேணும் எண்ணம் ஏற்பட்டது. உடனே சிஷ்யனுடன் மலய பர்வதம் சென்று பாபவிநாசேசர் ஸந்நிதியில் தியானத்தில் அமர்ந்திருந்த அகஸ்த்ய முனிவரை தர்சித்து மிக ஸந்தோஷமடைந்து பாபவிநாசேச்வரரை வணங்கி மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்தார்.
“ மங்களரூபியும் அம்பிகையுடன் கூடியவருமான பாபநாசேச்வரருக்கு நமஸ்காரம். ஞானஸ்வரூபியும் எல்லாப் பிராணிகளுக்கும் ஸாக்ஷியான உமக்கு நமஸ்காரம். மூவுலக நாதரும் மூவுலகஸ்வரூபரும் சைதன்ய ஸ்வரூபரும் விகாரமற்றவருமான உமக்கு நமஸ்காரம்.”
இவ்வாறு துதித்து பக்தியால் பரவசமடைந்தார். அத்ரி முனிவரைக் கண்டு அகஸ்த்யர் திடீரென்று எழுந்து பாத்யம், அர்க்யம், ஆஸனம், வந்தனம் முதலான உபசாரங்களால் பூஜித்தார். இரு முனிவர்களும் மிக்க ஸந்தோஷமடைந்தவர்களாக பாபவிநாசேசரின் ஸந்நிதியில் பாபத்தைப் போக்கும் ஆச்சர்யமான சிவகதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு அத்ரி முனிவர் தனது ஆச்ரமத்திற்குப்போக எண்ணம் கொண்டவராய் அகஸ்த்யரிடம் விடைபெற்றுக் கொண்டு பாபநாசேச்வரரை வணங்கி த்ரிகூடாசலம் வந்து தந்து ஆச்ரமத்தில் ஸுகமாக வஸித்து வந்தார்.

       இரண்டாவது அத்யாயம் முற்றிற்று.           

No comments:

Post a Comment